PUBLISHED ON : ஜன 13, 2020

'நெல்' என்கிற சொல், தமிழின் அருமையான இயற்சொற்களில் ஒன்று. 'நெல்லு' என்று பேச்சு வழக்கில் உகர ஈற்றோடு கூறுவோம். நெல், புல்வகைத் தாவரம். நெல் முளைக்குமிடத்தில் புல்லும் முளைக்கும். அது தோன்றி வளர்ந்து மாயும் கால அளவு மிகவும் புன்மையாய் (சிறிதாக) இருப்பது. நெல்லும் அத்தகைய சிறுகால அளவிலான பயிர்தான். ஆனால், அந்தப் பயிரால் கிடைக்கும் நன்மை அளப்பரியது.
விதைமணிகளிலேயே மிகவும் சிறியது, எள். எட்டு எள்மணிகளை ஒன்றாக அடுக்கினால் என்ன அளவு வருமோ, அதுதான் நெல். நெல் என்பது, நம் மக்களின் நீட்டல் அளவை முறையாகவும் இருந்திருக்கிறது. 'நெல்லு, எள்ளு, கொள்ளு' என்று நம் உணவுப் பொருட்களுக்கு ஒற்றுமையான பெயர்கள் வழங்கப்படுவது ஆழ்ந்த ஆய்வுக்குரியது. நெற்கதிரைப்போல் அடர்த்தியாகக் காய்பிடிக்கும் மரத்தை, 'நெல்லி' என்கிறோம்.
நெல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களில் ஒன்று 'சொல்'. சொல் என்ற சொல்லுக்கு வழங்கப்படும் பொருள்களில் நெல்லும் இருப்பது வியக்க வைக்கிறது.
'சாலி' என்ற சொல்லும் நெல்லைக் குறிப்பதுதான். 'சாலி நெல்லின் சிறைகொள் வேலி' என்கிறது பொருநராற்றுப்படை (248).
'தோரை' என்பதும், நெல்லுக்கு வழங்கப்பட்ட இன்னொரு பெயர். ஒரு வகை மலை நெல்லைத் 'தோரை' என்றனர். 'குறுங்கதிர்த் தோரை நெடுங்கா யலைவி' என்கிறது மதுரைக்காஞ்சி (287).
'ஐவனம்' என்பதும் மலைநெல்தான். தூற்றா நெல்லுக்குப் 'பொங்கழி' என்றும், தூற்றிய நெல்லுக்குப் 'பொலி' என்றும் பெயர்கள் வழங்கப்பட்டன.
நெல், விளைந்து நாட்பட்டிருந்தால்தான் அதற்கு மதிப்பு. மூன்று ஆண்டுகள் பழமையான நெல்லை, 'அசம்' என்ற சொல்லால் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
ஆகவே, நெல்லுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்: சாலி, தோரை, சொல், ஐவனம், பொங்கழி, பொலி, அசம். அப்பெயர்கள் ஒவ்வொன்றும் அதன் விளைவிடம், தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மாறுவதையும் குறித்துக்கொள்ள வேண்டும். ஆனால், நெல் என்பதுதான் முதன்மையான பெயர்.
பயிருக்குப் பெயரானது, அந்தப் பயிரில் விளைந்த மணிக்கும் 'நெல்மணி' என்ற பெயரானது. நெல்லின் மேல் தோலாகிய உமியை நீக்கிப் பெறுவது அரிசி.
- மகுடேசுவரன்
