sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

தீரர் வீரர்

/

தீரர் வீரர்

தீரர் வீரர்

தீரர் வீரர்


PUBLISHED ON : பிப் 20, 2017

Google News

PUBLISHED ON : பிப் 20, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தீரர் சத்தியமூர்த்தி: 1887 - 1943

தீரர் சத்தியமூர்த்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? நம் நாட்டின் விடுதலைக்கு உழைத்த வீரர்களில் ஒருவர்.

அவருக்கு ஏன் தீரர்ன்னு பேர் வந்தது? எதற்கும் அஞ்சாமல் பேசக்கூடியவர். அப்போதிருந்த ஆங்கிலேயருக்கு பயப்படாமல், எதிர்த்து நின்று குரல் கொடுத்தவர் என்பதால், அந்தப் பெயர். அவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் என்னும் ஊரில் பிறந்தவர்.

வழக்கறிஞர் பட்டம் பெற்றவர். பிற்காலத்தில், அரசியலில் ஈடுபட்டார். ஒரு தேர்தலில் நீதிக்கட்சி சார்பில், இராமசாமி முதலியாரும், காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தியும் எதிர்வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். அந்நாட்களில் எதிர் அணிகளில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் பகைமை பாராட்ட மாட்டார்கள். தேர்தல் பிரசாரத்தின்போது, இருவரும் எதிரெதிரே சந்தித்துக்கொள்ள நேர்ந்தது. சத்தியமூர்த்தி, ராமசாமியின் கையைப் பற்றிக் குலுக்கினார். இதுபற்றி யாரோ கேட்டார்கள். அதற்கு சத்தியமூர்த்தி சொன்ன பதில், “ஒன்றுமில்லை. அவருடைய நாடி எப்படியிருக்கிறது என்று பிடித்துப் பார்த்தேன்.!” என நகைச்சுவையாக பதிலளித்தார், சத்தியமூர்த்தி.

வெளியூர்ச் சுற்றுப்பயணங்கள் போகும்போது, தம்முடைய மகளையும் உடன் அழைத்துச் செல்வார். காரணம், பல ஊர்களைப் பார்ப்பது, பலதரப்பட்ட மக்களைச் சந்திப்பதுதான், சிறந்த படிப்பு என்று அவர் நம்பினார். மகளுக்கு அடிக்கடி புத்தகங்களைப் பரிசாகக் கொடுக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது.

நாடு முழுவதும் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றபோது, சத்தியமூர்த்தி தடையை மீறிச் சிறை புக ஏற்பாடாகியிருந்தது. அவருடைய தியாகராயநகர் இல்லத்தில் அவரைப் போராட்டத்துக்கு வழியனுப்ப நிறையப்பேர் கூடியிருந்தார்கள். போராட்டத்துக்குப் புறப்பட ஒரு மணி நேரம் இருந்தது. தம்மை வழியனுப்ப வந்திருந்தவர்களில் ஒருவரான வயலின் இசைமேதை பாப்பா வேங்கடராமையாவைப் பார்த்து, “மறுபடி உங்கள் கச்சேரியை எப்போது கேட்பேனோ. சற்றுநேரம் வயலின் வாசியுங்களேன்” என்று கேட்டு, ரசித்துவிட்டு சிறை சென்றார்.

நெற்றி நிறையத் திருநீறு, குங்குமம், தலையில் காந்தி குல்லாய், கோட், அங்கவஸ்திரம் இவைதான் சத்தியமூர்த்தியின், அடையாளங்கள்.

பாரதியாரின் கவிதை நூல்களை அரசு தடை செய்தபோது, இவர் பேசிய பேச்சு சட்டசபை வரலாற்றில் தனித்த சிறப்புடையது. 'பாரதி பாடல் எழுதிய ஏட்டை எரிக்கலாம். ஆனால் அதை பாடும் வாயை, கேட்டவர் மனத்தின் உணர்வை என்ன செய்ய முடியும்?' என்று கூறினார்.

''இது போன்ற பல சத்தியமூர்த்திகள் இருந்தால், ஆங்கிலேயர் என்றோ நாட்டை விட்டு ஓடியிருப்பர்'' என்ற காந்தியடிகளின் வார்த்தை, சத்தியமூர்த்தியின் சிறப்பையும் திறத்தையும் நமக்குக் காட்டுகிறது.

- சுப்ர. பாலன்






      Dinamalar
      Follow us