
சமூக வலைதளங்கள் மூலம் எண்ணற்ற நல்ல விஷயங்கள் நடக்கும் அதேநேரத்தில், பல்வேறு ஆதாரமற்ற தகவல்களும் பரப்பப்படுகின்றன. இத்தகைய உண்மையற்ற தகவல்கள் அமெரிக்க அதிபர் தேர்தல் வரை பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, முகநூல் இணையதளத்தின் மீது வெளிநாட்டினர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இவற்றைக் கருத்தில் கொண்டு முகநூல் நிறுவனம் இனி செய்திகளை வடிகட்டும் முறை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதி இப்போது அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
சந்தேகத்திற்கு இடமான செய்திகளை, உண்மை கண்டறியும் குழு ஒன்றிற்கு அனுப்பி, அதன் முடிவுகளையும் அருகிலேயே காண்பிப்பதன் மூலம், படிப்பவர்கள் தகவலின் நம்பகத்தன்மையை அறிய முடியும் என்று அந்நிறுவன அதிகாரியான சாரா சூ தெரிவித்திருக்கிறார். ஒரு பதிவின் அருகிலேயே அதன் உள்ளடக்கத்தோடு தொடர்புடைய மற்ற பதிவுகளும் காட்டப்படும் வசதியையும் மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.