PUBLISHED ON : அக் 09, 2017

கனவுகளுக்கும், சாதனைகளுக்கும் ஊக்கம் இருந்தால் போதும், வயது முக்கியமில்லை என்பது இந்தச் சிறுமி நமக்கு உணர்த்துகிறாள். குழந்தைகள் எந்நேரமும் கணினி, மொபைல்களிலேயே மூழ்கி இருக்கிறார்கள். அதில் அப்படி என்னதான் செய்கிறார்கள் என பலரும் நினைப்பது உண்டு. ஆனால், சிலர் அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகின்றனர். புதிய சாதனைகளையும் செய்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த சிந்துஜா ராஜாராம் என்ற சிறுமி, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். 
சிறுவயதிலிருந்தே கார்டூன் வரைவதில் அதிக ஆர்வம். கணினியைப் பயன்படுத்தி திறமைகளை வளர்த்திருக்கிறார். பல மென்பொருட்களில் வேலை செய்ய விரும்பி, தானாகவே கற்றுக்கொண்டிருக்கிறார். புதிதாக ஏதாவது ஒரு மென்பொருள் வந்தால், அவருடைய அப்பா அதை மகளுக்கு அறிமுகம் செய்வதோடு, அதை கற்றுக்கொள்ளவும் ஊக்கமளிப்பாராம். அப்படித்தான் போட்டோ ஷாப், ப்ளாஷ், கோரல் பெயிண்டர், மாயா இன்னும் பல ஊடகங்கள் சார்ந்த மென்பொருளை கற்றுக் கொண்டிருக்கிறார் சிந்துஜா. 
சிந்துஜாவிற்கு அப்பா தான் முன்மாதிரி. அவர் தமிழ்நாட்டின் முதல் டிஜிட்டல் காரிகேச்சரிஸ்ட் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அப்பாவிடமிருந்து கிடைத்த ஊக்கம் தான், இவ்வளவு பெரிய இடத்தை அடைவதற்குக் காரணம் என்கிறார். 
பள்ளியில் படிக்கும்போதே அனிமேஷனில் பல புதுமைகளைச் செய்த இவருக்கு அங்கீகாரம் கிடைக்க, இந்தியாவின் பிரபலமான  அனிமேஷன் நிறுவனத்தின் தலைவர் குமரன் மணி, செப்பன் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அதில் சிந்துஜாவிற்கு  சிஇஓ பதவி அளித்திருக்கிறார். இன்று இருபது வயதாகும் சிந்துஜா,  11ம் வகுப்பு படிக்கும்போதே அந்நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியானது, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

