PUBLISHED ON : மார் 25, 2019

ஆண்டு முழுக்கப் புத்தகப் பையுடன் இருக்கும் நம் மாணவர்களுக்கு, கோடை விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான். பலர் ஆட்டம் பாட்டம் என்று இருந்தாலும், இந்த விடுமுறை நாட்களைக் கொஞ்சம் உபயோகமாகவும் செலவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு. இதற்காகவே, 'விடுமுறையில் என்ன புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?' என்று கேட்டிருந்தோம். மாணவர்களின் கருத்தறிய, கோவை, ஸ்ரீ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்றிருந்தோம். இதோ மாணவர்களின் கருத்துகள்!
சுனில் அமர்த்தியா, 8ஆம் வகுப்பு
எனக்கு விண்வெளியைப் பற்றி அறிந்துகொள்ளப் பிடிக்கும். விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்பது என் கனவு. இதற்காகவே இந்த விடுமுறை தினங்களைச் செலவிடுவேன். நூலகங்கள், அறிவியல் மையங்களுக்குச் சென்று,கோள்கள், அண்டம், பால்வெளி என, விண்வெளி குறித்த புதிய தகவல்களை அறிந்து கொள்வேன்.
சஹானா, 8ஆம் வகுப்பு
உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. ஆனால், நமது ஊரின் பெருமைமிகு இடங்களை அறியாமல் இருக்கிறோம். விடுமுறையில் என் பெற்றோரின் உதவியுடன் எங்கள் ஊர், அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள முக்கிய இடங்களுக்குச் செல்வேன். அவற்றைப் பார்த்து வந்தபின், அவை பற்றிக் கட்டுரை எழுதுவேன்.
பரத் கண்ணா, 9ஆம் வகுப்பு
இந்தக் கோடை விடுமுறையில் தியானம், யோகா, போன்ற உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்வேன். ரெண்டு மூணு ஆண்டுகளாகப் பார்க்காத உறவினர் வீடுகளுக்குச் செல்லவும் திட்டமிட்டிருக்கிறேன்.
ஸ்நேகா, 9ஆம் வகுப்பு
கோடை விடுமுறையில், எப்போதும் சுற்றுலா உண்டு. கடந்த ஆண்டுகளில் இதுவரை ஊருக்குச் செல்வோம் என்று வீட்டில் சொல்லி இருக்காங்க. அதனால எங்க போகப்போறோம்னு தெரியாமல் நானே சஸ்பென்ஸில் இருக்கேன்.
மஹாஸ்ரீ, 9ஆம் வகுப்பு
எனக்குப் புகைப்படக் கலையில் ஆர்வம் இருக்கிறது. இந்த விடுமுறையில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்கப் போகிறேன். குப்பைத் தொட்டிக்கு வெளியே குப்பை போடுவது, டிராஃபிக் சிக்னலை மதிக்காமல் செல்வது, ஹெல்மெட் இல்லா பயணம்னு சமூக ஒழுங்கு மீறலைப் படம் எடுத்து, பள்ளியிலேயே கண்காட்சி வைக்கப்போகிறேன்.
விவின், 9ஆம் வகுப்பு
இந்த உலகம் எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கான இடம். ஆனால், மனுஷங்க மட்டும்தான் வாழத் தகுதியானவங்கற என்ற நினைப்பு எல்லோருக்கும் இருக்கு. எல்லா உயிரினங்களின் வாழ்வியலுக்கும் உணவுச் சங்கிலி எவ்வளவு முக்கியமானதுன்னு சமீபத்தில் படிச்சேன். இந்த விடுமுறையில் இயற்கை குறித்து இன்னும் கத்துக்கணும்னு ஆசைப்படுகிறேன்.