sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

திருடர்கள் பலவிதம்

/

திருடர்கள் பலவிதம்

திருடர்கள் பலவிதம்

திருடர்கள் பலவிதம்


PUBLISHED ON : ஜன 30, 2017

Google News

PUBLISHED ON : ஜன 30, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

“ஏன் மோனா லிசா மாதிரி சிரிக்கறே?” என்று கேட்டார் ஞாநி மாமா.

“இந்த செய்தியைப் படிச்சேன். நடந்து சரியா ஓராண்டாகுது. இன்னும் எதுவும் செய்ய முடியலங்கறாங்க. அதை நினைச்சு சிரிப்பு வந்துது.” என்றேன்.

என்ன செய்தி என்று கேட்டான் பாலு. சொன்னேன். போன ஆண்டு, பிப்ரவரி 5ம் தேதி வங்க தேசத்து தலைமை வங்கியிலருந்து, நியூயார்க் மத்திய வங்கிக்கு சில கட்டளைகளை அனுப்பறாங்க. 'உங்க கிட்ட இருக்கற எங்க பணத்தை, இந்த இந்த கணக்குகளுக்கு அனுப்பிடுங்க'ன்னு. மொத்தம் 101 மில்லியன் டாலர். சுமாரா 600 கோடி ரூபாய். அவங்களும் அனுப்பிட்டாங்க. அப்புறமாத்தான் தெரிஞ்சுது, கட்டளையை அனுப்பினது வங்கியே இல்ல. நடுவுல நுழைஞ்ச சில கணினித் திருடர்கள்னு!

“அதெப்படி தெரிஞ்சுது?” என்றான் பாலு. பிலிப்பைன்ஸ்ல இருக்கற மூணு கணக்குகளுக்கு பணம் அனுப்பச் சொல்லி வந்த கட்டளைப்படி அனுப்பிட்டாங்க. அடுத்து, இலங்கையில ஒரு தொண்டு நிறுவனத்துக்கு அனுப்பச் சொன்னபோது, சந்தேகம் வந்திருக்கு. காரணம் அந்தப் பெயரை டைப் பண்றப்ப ஸ்பெல்லிங் தப்பு பண்ணியிருக்காங்க. எழுத்து தப்பைப் பார்த்த ஒரு நியூயார்க் வங்கி ஊழியர், உடனே பணப் பரிவர்த்தனையை நிறுத்திட்டாரு. இல்லாட்டி மொத்தமா ஒரு பில்லியன் டாலர், வங்க தேச வங்கிக்கு காலியாயிருக்கும்.

“பிலிப்பைன்சுல யாருக்குப் பணம் போச்சுன்னு தெரியும் இல்ல?” என்றான் பாலு. மூன்று சூதாட்ட விடுதிகளுக்குப் போயிருக்கு. அங்கிருந்து பணத்தை எடுத்து விளையாடி, அப்புறமா இலங்கைக்கும், ஹாங்காங்குக்கும் அனுப்பினதா கண்டுபிடிச்சாங்க. இதையெல்லாம் ஒரு சீன வணிகர் செய்திருப்பதா சொல்றாங்க. ஆனா ஓராண்டு ஆகியும் ஒருத்தரும் கைதாகல. போன பணம் ஒரு பைசாகூட திரும்ப வரலே. கத்தியின்றி ரத்தமின்றி ஒரு பெரிய திருட்டு நடக்குது. அதுவும் எங்கேயும் நேர்ல போகாம, ரூமுக்குள்ள கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்தே செஞ்சு முடிச்சிருக்காங்க. அதை எதிர்த்து ஒண்ணும் செய்ய முடியல. அதை நினைச்சுத்தான் சிரிச்சேன் என்றேன்.

“இதைத்தான் ஒயிட் காலர் க்ரைம்னு சொல்றாங்க. அதாவது சட்டை அழுக்காகாம குற்றம் செய்யறது.” என்றார் மாமா. “அப்ப ஜூலியன் அசாஞ்சே செய்ததை ஒயிட் காலர் சர்வீஸ்னு சொல்லலாமா?” என்று கேட்டது வாலு. பல நாடுகளுடைய ரகசிய தகவல்களை கணினி வழியாகத் திருடி, பகிரங்கமாக வெளியிட்டு, அந்த நாட்டு அரசாங்கங்கள் சொல்றது ஒண்ணு, செய்யறது ஒண்ணுன்னு அம்பலப்படுத்தற விக்கி லீக்ஸ் அமைப்பை உருவாக்கினவர் ஜூலியன்.

“டாலர் திருடினாலும் திருட்டுதான். தகவல் திருடினாலும் திருட்டுதானே?” என்று கேட்டான் பாலு. “இரண்டும் திருட்டுதான். முதல் திருட்டு சுயநலத்துக்காக செய்யறது; இரண்டாவது, பொது நன்மைக்காகச் செய்யறது. ரெண்டையும் ஒண்ணாப் பார்க்க முடியாது இல்லியா?” என்றார் மாமா. திருட்டை இப்படிக்கூட நியாயப்படுத்த முடியுமா? எனக்கு சிரிப்பு வந்தது. நான் சிரித்தேன்.

“திரும்பவும் மோனா லிசா மாதிரி சிரிக்கறே.” என்றார் மாமா.

“அதென்ன மாமா மோனா லிசா சிரிப்பு?” என்று கேட்டான் பாலு.

மாமா விளக்கினார். மோனா லிசா ஓவியம், இத்தாலிய ஓவியர் லியனார்டோ டாவின்சியால் 510 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப்பட்டது. ஒரு பணக்கார பட்டு வியாபாரியின் மனைவி மோனா லிசா. டாவின்சி எத்தனையோ ஓவியங்கள் வரைந்திருந்தாலும், மோனா லிசாதான் மிகவும் புகழை அடைந்தது. காரணம், நம்மையே பார்க்கிற மாதிரியான கண்களும், உதட்டோரம் மெல்லியதாகத் தெரியும் புன்முறுவலும்தான்.

“பாரிஸ் நகர் லூவர் மியூசியத்தில் இருக்கும் மோனா லிசாவை நான் நேரில் பார்த்தபோது, அவ்வளவு பிரமாதமாகத் தோன்றவில்லை. சின்ன ஓவியம்தான். இரண்டரை அடிக்கு ஒண்ணே முக்கால் அடி அளவு. ஆனால், அதன் புகழால் அதற்கு இன்றைக்கு இருக்கும் மதிப்பு 782 மில்லியன் டாலர். சுமாராக 5,300 கோடி ரூபாய்.” என்றார் மாமா.

“அதை யாரும் திருடலியா?” என்று கேட்டான் பாலு.

“ஒரே ஒரு தடவைதான் அதைத் திருடியிருக்காங்க. லூவர் மியூசியத்துல வேலை பார்த்த இத்தாலி நாட்டை சேர்ந்த ஊழியர் வின்சென்சோ பெருகியா என்பவர், 1911ல இது நியாயமா இத்தாலிலதான் இருக்கணும், பிரான்சுல இருக்கக்கூடாதுன்னு திருடினார். அபபுறம் மாட்டிக்கிட்டு தண்டனையை அனுபவிச்சார். அப்புறம் இது வரைக்கும் அதை யாரும் திருட முடியாத மாதிரி பாதுகாப்பு, குண்டு துளைக்காத கண்ணாடி எல்லாம் இருக்கு.”

“எனக்கு ஒரு சந்தேகம்” என்றது வாலு. “நேர்ல போய் திருடக்கூடிய ஒரு பொருளையே நூறு வருஷமா பாதுகாப்பா வெச்சிருக்க முடியுது. அப்ப கணினியில இருக்கற பாஸ்வேர்டையெல்லாம், ஏன் அது மாதிரி பத்திரமா வெச்சுக்க முடியல? இணையத்துக்குள்ள சுலபமா போய் ஹேக் பண்ணிடறாங்க?”

“எந்த திருட்டானாலும் மூளையைப் பயன்படுத்தனும். கணினி திருட்டுங்கறது, முழுக்க முழுக்க உட்கார்ந்த இடத்துலருந்தே மூளையை பயன்படுத்தற விஷயம். நேர்ல கெட்ட வார்த்தைல திட்டாதவங்க சுலபமா ஃபேஸ்புக்ல திட்டறாங்க இல்ல, அந்த மாதிரிதான். ஹேக்கர்ஸ்னு சொல்லக்கூடிய கணினி திருடர்கள்லயே மூன்று வகை இருக்காங்க. ஒருத்தர் சுயநலமாகவோ ஏதாவது கிரிமினல் நோக்கத்தோடோ திருடணும்னு திருடறவங்க. அவங்களுக்கு பிளாக் ஹேட்ஸ்னு (black hats) பேரு. இன்னொருத்தர் சும்மா ஜாலிக்காக திருடறவங்க. இவங்க கிரே ஹேட்ஸ் (grey hats). இந்த ரெண்டு வகையையும் தடுக்கணும்கறதுக்காக, அரசாங்கங்களும் கம்பெனிகளும் நிறைய சம்பளம் கொடுத்து வேலைக்கு வெச்சிருக்கறவங்களுக்கும் ஹேக்கிங் நல்லாத் தெரியும். அவங்க ஒயிட் ஹேட்ஸ் (white hats)” என்றார் மாமா.

“நாலாவது வகையும் இருக்கே மாமா. பொது நலத்துக்காக விக்கிலீக் மாதிரி ஹேக் பண்றவங்க?”என்றேன். “அவங்களையும் நாம கிரே ஹேட்ஸ்லதான் சேர்க்கணும்” என்றார் மாமா.

“ஏதாவது ஒரு ஹேட் திருடிக்கிட்டுத்தான் இருக்கும். திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, இல்லியா?” என்றான் பாலு. “இல்லை பாலு. திருடறதை விட நேர்மையா இருக்கறதுதான் லாபம்னு ஆயிட்டா திருட்டும் ஒழியும்” என்றார் மாமா.

அதைப் பற்றி நான் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

வாலுபீடியா 1: மோனா லிசா ஓவியத்தை ஆராய்ந்து, அவருக்கு நோய் இருந்திருக்கலாம் என சில ஆய்வாளர்கள் சொல்லியுள்ளனர். லேசான வலிப்பு இருந்ததால், அப்படி சிரிக்கிறாராம். மோனா லிசா ஒரு கர்ப்பிணி என்பது இன்னொரு முடிவு. அவருக்கு தைராய்ட் பிரச்னையும் கொலஸ்ட்ரால் மிகுதியும் இருந்ததாக இன்னொரு கருத்து !

வாலுபீடியா 2: அண்மையில் இந்தியாவில் ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ, யெஸ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் 32 லட்சம் டெபிட் கார்டுகளின் 'பின்' விவரங்கள் திருடப்பட்ட செய்தி வெளியாயிற்று. பாடகர் உன்னிகிருஷ்ணன் மொரீஷியசுக்கு சென்றபோது, அவர் கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக புகார் கொடுத்தார்.






      Dinamalar
      Follow us