PUBLISHED ON : நவ 25, 2019

'சிக்கனைசேஷன்' நிகழ்ச்சி
குழந்தைகளை ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்திலிருந்து மீட்க, இந்தோனேஷியாவில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேற்கு ஜாவாவின் பந்துங் பகுதியில் உள்ள 10 தொடக்கப் பள்ளிகளில் அறிமுகம் ஆகவுள்ள இத்திட்டத்தின்படி, 2,000 கோழிக்குஞ்சுகளும், 1,500 மிளகாய்ச் செடிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கு, 'சிக்கனைசேஷன்' (Chickenization) நிகழ்ச்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.
வருகிறது வெங்காயம்
பெரிய வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வெங்காய இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் முதல்கட்டமாக 1,000 டன்கள் வெங்காயம் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வெங்காயத்தின் விலை கணிசமாகக் குறையும் வாய்ப்புள்ளது.
முக்கிய பேச்சுவார்த்தை
இலங்கையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தபய ராஜபட்ச, இந்தியாவின் அழைப்பை ஏற்று வரும் 29ஆம் தேதி இந்தியா வருகிறார். இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, இந்தியா- - இலங்கை இடையேயான வர்த்தக உறவு, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முப்படைத் தளபதி
இந்தியாவில் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், தலைமைத் தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த மூன்று வாரங்களுக்குள், இது இறுதி செய்யப்பட்டு, இந்தாண்டு டிசம்பருக்குள் புதிய தலைமைத் தளபதி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
