
நீரில் நீந்தும் மீன்களைப் பற்றி நமக்குத் தெரியும். மரம் ஏறும் மீன் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? மரம் ஏற மட்டுமல்ல! நடக்கவும் செய்கிறது 'மட்ஸ்கிப்பர்' (Mudskipper) என்ற அரிய வகை மீன். இதன் உயிரியல் பெயர் 'ஆக்சுடெரிசினே' (Oxudercinae). ஓரடி நீளம் வரை வளரும். உடல் பழுப்பு, நீலம் ஆகிய நிறங்களில் காணப்படும். கடல் முகத்துவாரப் பகுதிகளில் உள்ள மாங்குரோவ் காடுகளில் வாழும்.
இந்த மீன் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை நீர் இல்லாமலே கழிக்கும் திறன் படைத்தது. இது நீரிலும் நிலத்திலும் மாறிமாறி வாழும். தலையில் உள்ள ஒரு விசேஷ உறுப்பின் மூலம், காற்றில் உள்ள ஆக்சிஜனை இந்த மீனால் சுவாசிக்க முடியும். செதில்களைச் சுற்றி உள்ள படலத்தின் உதவியோடு மூச்சுவிடும். 6 முதல் 8 மணிநேரம் வரை இது நீரை விட்டு வெளியே வாழும் ஆற்றல் கொண்டது.
நீர் அளவு குறையும் காலங்களிலும், பேரலைகள் உருவாகும் காலங்களிலும் இவை மரங்களில் ஏறி தங்கள் பொழுதைக் கழிக்கின்றன. மார்புப் பகுதியில் உள்ள செதில்களைக் கால்கள் போலப் பயன்படுத்தி, மரங்களில் ஏறிக்கொள்கின்றன. சேற்றுப் பகுதிகளில் பள்ளம் தோண்டி இவை முட்டை இடுகின்றன.
- ப.கோபாலகிருஷ்ணன்