தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/பெயர் தெரியாத அரசர்கள்

பெயர் தெரியாத அரசர்கள்

பெயர் தெரியாத அரசர்கள்


PUBLISHED ON : நவ 28, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக வரலாற்றில், இரண்டாம் நூற்றாண்டு முதல், நான்காம் நூற்றாண்டு வரையிலான வரலாறு, தெளிவாக அறியக் கிடைக்கவில்லை. அதுவரை தமிழ்நாட்டை, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு, அவர்களின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது. வடக்குப் பகுதியிலிருந்து வந்த களப்பிரர்கள், சேர, சோழ, பாண்டியர்களை வென்று, ஆட்சி புரிந்து வந்தனர். களப்பிரர்களைப் பற்றியும், அவர்களின் ஆட்சி அமைப்பு, அரசியல் நிலவரம் முதலானவற்றையும் தெரியப்படுத்தும், வரலாற்றுக் குறிப்பும் மிகவும் குறைவாக இருக்கின்றன. தமிழரல்லாத வடக்கிலிருந்து வந்தவர்களே களப்பிரர்கள் என்று, சில வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஆரியருமல்லாத, திராவிடருமல்லாத இனத்தினர் அவர்கள் என்றும், குறிப்பிடுகின்றனர்.

கர்நாடகப் பகுதியின் கோலாரை அடுத்த, நந்தி மலைகளிலிருந்து வந்தவர்கள் களப்பிரர்கள் என்றும் கூறுகின்றனர். களப்பிரர்களின் இனத்தோற்றுவாய் குறித்து, இன்றுவரை தெளிவாகக் கூற இயலவில்லை. அதுபோலவே களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தை இரண்டாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையிலும் வரையறுத்துக் கூறுவோரும் உள்ளார்கள்.

களப்பிரர்கள், சமண சமயத்தையும் புத்த மதத்தையும் பின்பற்றியவர்கள். களப்பிரர்களின் அரசர்கள் யார்? அவர்கள் ஈடுபட்ட போர்கள் என்னென்ன? அவர்கள் இந்நிலத்தை அடக்கி ஆண்டார்களா என்பன குறித்தெல்லாம் தெரியவில்லை. ஆனால், அவர்கள் மூவேந்தர்களையும் வென்றனர் என்பது தெரிகிறது. களப்பிரர்கள் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். சேர நாட்டின் பேரியாறு கடலில் புகுமுகத்தில், சேரமானைத் தோற்கடிக்க போரில் ஈடுபட்டார்கள் என்பதும் தெரிகிறது. சேரனும், பாண்டியனும் களப்பிரர்களால், வீழ்த்தப்பட்டிருந்தனர். களப்பிரர்களால் ஒடுக்கப்பட்ட சோழர்கள், தொண்டை மண்டலத்தில் சிற்றரசர்களைப் போல் ஆண்டுவந்தனர்.

களப்பிரர்கள் ஆட்சிக் காலத்தில், சமணம் தவிர பிற மதங்கள் அடக்கப்பட்டன. அவர்களின் சமயக் கொள்கைகள் மக்களிடத்தில் எடுபடவில்லை என்பதும் விளங்குகிறது. களப்பிரர்களின் சமயக் கொள்கைகளால்தாம் அவர்கள் வீழ்ச்சியடைந்திருக்க வேண்டும். களப்பிரர் காலத்தில்தான் தமிழகத்தில் புத்தமதம் பரவத் தொடங்கியது. அதன்பிறகு, தமிழகத்தில் புத்த மதத்திற்கு அரசர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. களப்பர், களவர், களப்பாளர், கழப்பர் ஆகிய சொற்களும் களப்பிரர்களையே குறிக்கின்றன.

களப்பிரர்கள் காலத்தில், கட்டடக் கலை, நன்கு வளர்ச்சி பெற்றது. நாடெங்கும் சமணப் பள்ளிகளும், பௌத்த விகாரைகளும் (கோவில்கள்) எழுப்பப்பட்டன. அவற்றுக்கு இணையாக, சைவ, வைணவ ஆலயங்களும் தோற்றுவிக்கப்பட்டன. குடைவரைக் கோவில்களும், கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கற்றளிகளும், களப்பிரர்களால் அமைக்கப்பட்டன. சோழநாட்டில், பூதமங்கலம், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்த, பௌத்த கற்றளிகள் காலத்தால் அழிந்துவிட்டன. களப்பிரர் காலத்தில், குடைவரைக் கோவில் சுவர்களில், ஓவியம் வரையும் கலை செழித்து வளர்ந்தது. கூத்துக்கலையும், இசையும் வளர்ச்சி பெற்றன. 'விளக்கத்தனார் கூத்து' என்ற நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் மட்டும் தற்போது கிடைத்திருக்கிறது.

- மகுடேசுவரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us