வடசொல் அறிவோம் 4 - எதிர்ச் சொற்கள் எவ்வாறு அமைகின்றன?
வடசொல் அறிவோம் 4 - எதிர்ச் சொற்கள் எவ்வாறு அமைகின்றன?
PUBLISHED ON : ஏப் 30, 2018
தமிழ் மொழியில் ஒரு சொல்லுக்கு எதிர்ச்சொல் வேறொன்றாக இருக்கும். நன்மை என்பதன் எதிர்ச்சொல் தீமை. உயர்வு - தாழ்வு, இன்பம் - துன்பம், உண்மை - பொய், மேடு - பள்ளம், ஏற்றம் - இறக்கம், இயற்கை - செயற்கை என்று தமிழ்ச்சொற்களில் எதிர்ச்சொற்கள் அமைகின்றன. ஒரு சொல்லுக்கு எதிர்ப்பொருளில் அமையும் சொல் வேறொரு சொல்லாகவே இருக்கும். அதே சொல்லின் வழியே எதிர்ப்பொருளை அமைக்க இயலாது.
ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஒரு சொல்லின் எதிர்ச்சொல்லை அடைய அதே சொல்லோடு ஏதாவது ஒரு முன்னொட்டையோ பின்னொட்டையோ சேர்த்தால் போதும். எதிர்ச்சொல் கிடைத்துவிடும். எடுத்துக்காட்டாக, Dependant என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை அடைய அச்சொல்லுக்கு முன்பாக In என்ற முன்னொட்டைச் சேர்த்தால் போதும். Independant ஆகிவிடும். Literate என்பதன் எதிர்ச்சொல்லை அடைய IL என்பதை முன்னொட்டினால் போதும். Illiterate ஆகிவிடும்.
தமிழ்ச்சொற்களில் அவ்வாறு முன்னொட்டுவதன் வழியே எதிர்ச்சொற்களை அடைவது அரிது. அரிதினும் அரிதாக அல், இல் என்பன உள்ளன. வழி, வழக்கு, புனைவு போன்ற சொற்களுக்கு 'அல்' என்பதை முன்னொட்டினால் அல்வழி, அல்வழக்கு, அல்புனைவு ஆகிய எதிர்ச்சொற்கள் கிடைக்கும். இல் என்பதையும் முன்னொட்டி சில எதிர்ச்சொற்களை உருவாக்கலாம். வழி, பொருள் ஆகியவற்றோடு இல் என்பதை முன்னொட்டினால் இல்வழி, இல்பொருள் ஆகிய எதிர்ச்சொற்கள் கிடைக்கும். நன்மை என்பதற்கு நன்மையின்மை என்று சொல்வது தமிழில் எதிர்ச்சொல் ஆகாது. எதிர்ப்பொருளை மட்டுமே தருவது. நன்மைக்குத் தீமைதான் எதிர்ச்சொல்.
வடசொற்களைப் பொறுத்தவரை, பற்பல சொற்களுக்கு 'அ' என்னும் ஓர் எழுத்தை முன்னொட்டாகச் சேர்த்து, உரிய பல எதிர்ச்சொற்களை உருவாக்குகிறார்கள். ஒரு சொல்லின் எதிர்ச்சொல் 'அ' என்னும் எழுத்தோடு தொடங்கினால், அவ்விரண்டும் வடசொற்கள் என்று அறுதியிட்டுக் கூறலாம். வடசொல்லைக் கண்டுபிடிப்பதற்கு இது எளிய வழி. கீழுள்ளவற்றைக் காண்க.
சுத்தம் - அசுத்தம் (தூய்மை -- அழுக்கு)
சந்தர்ப்பம் - அசந்தர்ப்பம் (வாய்ப்பு - காலந்தவறிய வாய்ப்பு)
சாத்தியம் - அசாத்தியம் (இயல்வு - இயலாமை)
சாதாரணம் - அசாதாரணம் (எளிய, எளிதல்லாத)
ஜாக்கிரதை - அஜாக்கிரதை (விழிப்புணர்வு - விழிப்புணர்வின்மை)
சுபம் - அசுபம் (நல்விளைவு - தீய விளைவு)
ஜீரணம் - அஜீரணம் (செரிமானம் - செரிமானமின்மை)
நாதி - அநாதி (தலைவனுள்ள, தலைவனற்ற)
நியாயம் - அநியாயம் (முறை, முறையின்மை)
நீதி - அநீதி (அறம், அறக்கேடு)
சிரத்தை - அசிரத்தை (உளவேட்பு, உளவேட்பின்மை)
தர்மம் - அதர்மம் (அறம், அறமின்மை)
-- மகுடேசுவரன்
