தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கல்வியிலும் சமூகத்திலும் மாணவர்கள் விரும்பும் மாற்றங்கள் என்ன?

கல்வியிலும் சமூகத்திலும் மாணவர்கள் விரும்பும் மாற்றங்கள் என்ன?

கல்வியிலும் சமூகத்திலும் மாணவர்கள் விரும்பும் மாற்றங்கள் என்ன?


PUBLISHED ON : நவ 20, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்றைய மாணவர்கள்தான் எதிர்கால சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறவர்கள். பல்வேறு வளர்ச்சிகள், மாற்றங்கள் நிகழ்ந்து வருகிற இன்றைய காலகட்டத்தில், மாணவர்கள் கல்வி, சமூகம் ஆகியவற்றில் எத்தகைய மாற்றங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பது முக்கியமானது. கல்வியிலும் சமூகத்திலும் மாணவர்கள் விரும்பும் மாற்றங்கள் என்ன என்ற தலைப்பில் குன்றத்தூர், லிட்டில் ஃபிளவர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். தாங்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள் என்ன, அது கல்வியிலும், சமூகத்திலும் என்ன மாதிரியான வளர்ச்சிகளை ஏற்படுத்தும் என்பது குறித்து, ஆக்கப்பூர்வமான கருத்துகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார்கள்.

வெ.கோ.இராகவி, 10ம் வகுப்பு

கல்வி நிலையங்களில், கற்பிக்கும் ஆசிரியர்களும், கற்கும் மாணவர்களும் மாறணும். மொழிப் பாடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரணும். பாடத்தைப் படிச்சு மனப்பாடம் பண்ணி எழுதற முறை மாற்றப்படணும். நடைமுறை வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை பாடத்திட்டமா வெச்சா எதிர்கால சமூகத்துல மாணவர்கள் தன்னம்பிக்கையோட வாழ்வாங்க. சமூகம் இன்னைக்கு மிக மோசமான நிலைக்கு போயிட்டிருக்கு. சுயநலமாவும், அலட்சியமாவும் எல்லாரும் நடந்துக்கறாங்க. ஒவ்வொருவரும் பொறுப்பான குடிமகனா நடந்துகிட்டா சமூகத்தில பல மாற்றங்களைக் காணலாம்.

ஜா.ஜோஷ்வா பயஸ் அமல்ராஜ், 11ம் வகுப்பு

பள்ளியிலேயே புத்தகங்கள் வைக்கிற வசதி எல்லா ஸ்கூல்லயும் ஏற்படுத்தணும். தேவையான புத்தகங்களை மட்டும் எடுத்துட்டு போய் படிக்கற மாதிரி இருக்கணும். கல்வியை திணிக்கக்கூடாது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். இது எல்லோருக்கும் கிடைக்கணும். சமூகத்துல முக்கியமா செய்ய வேண்டியது இதுதான். ரோட்டுல மிதிவண்டி ஓட்டிட்டுப் போக தனி பாதை அமைக்கணும். அதிகப்படியான வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தணும்.

மு.ராஜேஷ்குமார், 11ம் வகுப்பு

கல்வி எல்லோருக்கும் முக்கியமானது. அது எல்லோருக்கும் கிடைக்க வழி செய்யணும். கல்விக் கட்டணங்களை குறைக்கணும். சட்டம் எல்லோருக்கும் பொதுவானதா இருக்கணும். ஏழைக்கு ஒண்ணு, வசதியானவங்களுக்கு ஒண்ணுன்னு இருக்கற நிலைமை மாறணும். சாலை வசதிகள மேம்படுத்தணும். குற்றங்களுக்கான தண்டனைச் சட்டங்களை கடுமையாக்கணும்.

த.ரேகா, 11ம் வகுப்பு

பள்ளி இறுதி வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் மட்டுமே படிக்கணும்னு சட்டம் போடணும். அந்த அளவுக்குத் தரமான கல்வியை அரசு வழங்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கணும். கல்வியை இலவசமாக்கணும். விளையாட்டை ஊக்குவிக்கணும். ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உரிய விளையாட்டுப் பயிற்சிகளை அரசு இலவசமா தரணும். கல்வி, சமூகம் இரண்டுமே நாட்டின் ரெண்டு முக்கியமான துறைகள். இதுல சிறப்பான மாற்றங்களை செஞ்சா மட்டுமே நாடு முன்னேறும்.

கு.சுபஸ்ரீ, 11ம் வகுப்பு

எல்லோருக்கும் ஒரே சிலபஸ் உள்ள கல்வி முறையைக் கொண்டு வரணும். ரொம்ப நாளைக்கு முன்னால எழுதப்பட்ட பாடங்களையே திரும்பத்திரும்பப் படிக்கறோம். ஒவ்வொரு ஆண்டும் பாடங்கள புதுப்பிக்கணும். வாழ்க்கைக் கல்வியை கட்டாய பாடமாக்கணும். சமூகத்தில எல்லோரும் தன்னிறைவு பெற்றவங்களா இருக்கணும். அரசியல்ல இளைஞர்களும், மாணவர்களும் அதிகம் பங்கெடுக்கணும். அவங்களாலதான் புதிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

பு.விக்னேஷ்வரன், 11ம் வகுப்பு

ஒரே மாதிரியான கல்வி முறையைக் கொண்டு வரணும். ஏற்றத்தாழ்வுகள் கல்வியில இருக்கறதால பல மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுது. சமூகத்துல சாதி, மத வேறுபாடுகள் இருக்கக் கூடாது. ஊழலை ஒழிக்கணும். அதுதான் நம்ம வளர்ச்சிக்கு பெரிய எதிரி. எல்லோருக்கும் எல்லா அடிப்படை வசதிகளும் கிடைக்கணும். எல்லாத்தையும் அரசே செய்யணும்னு எதிர்பார்க்கக்கூடாது.சமூகப் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கணும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us