PUBLISHED ON : மார் 16, 2020
நாம் பேசும்போதும் எழுதும்போதும் எண்ணற்ற இனச்சொற்றொடர்களைப் பயன்படுத்துவோம். ஒரு சொல்லைப் போலவே அதனோடு ஒலிப்பிலும் பொருளிலும் தொடர்புடைய இன்னொரு சொல்லும் சேர்ந்து வருவதுதான் இனச்சொற்றொடர்கள். சொற்கள் ஒன்றுக்கொன்று இனமாக இருப்பவை. அவற்றுக்கிடையே பொருள் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்பதும் நமக்குத் தெரியாது.
தொன்றுதொட்டு வழங்கும் வழக்கத்தால் அப்படியே பயன்படுத்தி வருகிறோம். அத்தொடர் பெரும்பாலும் உம்மைத் தொகையாக அமைவது வழக்கம். உம்மைத் தொகை என்பது, இரண்டு சொற்களுக்கிடையே 'உம்' என்ற சொல்லுருபு மறைந்து வருவது.
“அந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது”
மேற்காணும் சொற்றொடரில் பட்டிதொட்டி என்பதுதான் இனச்சொற்றொடர். பட்டி என்பது மேய்ச்சல் நிலத்துச் சிற்றூர். தொட்டி என்பது மலை நிலத்துச் சிற்றூர். காடு மலை எங்கெங்கும் பரவியது என்பதைத்தான் பட்டிதொட்டி என்ற தொடர் உணர்த்துகிறது.
மேலும் பல இனச்சொற்றொடர் களையும் அவற்றுக்குரிய பொருள்களையும் அறிவோம்.
துணிமணி: -துணி என்பது புதுத்துணியைக் குறிக்கிறது. மணி என்பது என்ன? முற்காலத்தில் ஆபரணங்கள் யாவும் அணிமணிகளாக இருந்தன. மணிகள் பதிக்கப்பட்டவையே அணிகலன்கள். புதுத்துணியையும் அணிமணி வகைகளையும் வாங்கியாயிற்றா என்ற பொருளில் வந்ததே துணிமணி.
மட்டுமரியாதை: மரியாதை என்பது ஒருவருக்குத் தருகின்ற சிறப்பினைக் குறிக்கிறது. மட்டு என்பது என்ன?
ஒருவருடைய தகுதியை முன்னிட்டுத் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளுதல். பணிந்து நிற்றல்தான் அது. மட்டுப்பாடும் மரியாதையும்தான் மட்டுமரியாதை.
அக்கம்பக்கம்: அக்கம் என்பதற்கு அகம் என்ற பொருளுண்டு. நமக்குப் பக்கத்தில் இருப்பது, பக்கம். புறமாக இருப்பது என்று கொள்ளலாம். உள்ளேயும் வெளியேயும், அகத்திலும் புறத்திலும் என்பதுதான் அக்கம் பக்கம்.
வகைதொகை: வகை என்பது வகைப்பாடு. தொகை என்பது தொகுத்து வைத்திருப்பது. வகை என்பது பிரிவினை. தொகை என்பது தொகுப்பு.
அடிதடி: அடித்துக் கொண்டார்கள் என்பது அடி என்ற சொல்லால் விளங்குகிறது. தடி என்பது என்ன? அடித்தால் என்ன ஆகும்? அடிபட்ட இடம் தடித்துப் போகும். அடித்ததும் நடந்தது. தடித்ததும் நடந்தது. அதுதான் அடிதடி.
தள்ளுமுள்ளு: “கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது” என்பார்கள். தள்ளுவது தெரியும். நெரிசலான கூட்டத்தில் ஒருவரையொருவர் தள்ளித்தான் செல்ல வேண்டும். முள்ளு என்பது என்ன ? முண்டுவதால் முள்ளல். கூட்டம் பின்னே தள்ளும். கால்களை வலுவாக ஊன்றி முன்னே முண்டினால்தான் நாம் செல்ல முடியும். அதுதான் முள்ளுதல்.
மூட்டை முடிச்சு: முற்காலத்தில் பைகள் வழக்கத்திற்கு வரவில்லை. எதனையும் மூட்டையாகக் கட்டித் தான் தலைச்சுமையாக எடுத்துச் செல்வார்கள். மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பினால் நெடும்பயணம் செல்கிறார்கள் என்று பொருள்.
மூட்டை மட்டுமன்றி வேறு சில சிறுபைகளும் இருக்கும். சுருக்குப்பை போன்றவற்றுக்கு முடிச்சிடப்பட்டிருக்கும். அவற்றில் முடிச்சு இருக்கும். மூட்டையாகக் கட்டியவை, முடிச்சு இட்டவை ஆகிய இரண்டினையும் கூறுவதே மூட்டைமுடிச்சு.
ஈவு இரக்கம்: இரக்கம் என்பது ஒருவர் மீது அன்போடு மனங்கனிவது. ஈவு என்பது என்ன? ஈகைதான் ஈவு. ஈகையைச் செய்ய வேண்டுமெனில் இரங்க வேண்டும். இரங்கினால் ஈகைக்குத் தடையே இருக்காது.
ஏழை பாழை: ஏழை என்றால் தெரியும். இல்லாதவர்கள். வறியவர்கள். பாழை என்றால் என்ன? பாழ் என்ற சொல்லோடு தொடர்புடையது பாழை. தமது வாழ்க்கையில் பாழ்பட்டுப் போனவர்கள். முன்பு அவர்கள் நல்ல வாழ்க்கையைக்கூட
வாழ்ந்திருக்கலாம். இன்று பாழ்பட்டவர்கள். அவர்களே பாழைகள். ஏழைகள் எப்போதுமே இல்லாதவர்கள். பாழைகள் இடையில் கெட்டுப்போனவர்கள்.
வாட்டசாட்டம்: வாட்டம் என்றால் வடிவம். சாட்டம் என்றால் செருக்கு. ஆள் நல்ல வடிவாகவும் பெருமிதம் மிகுந்தும் இருக்கிறான் என்பதைத்தான் வாட்டசாட்டமாக இருக்கிறான் என்கிறோம்.
- மகுடேசுவரன்

