PUBLISHED ON : நவ 06, 2023
'எதுகை மோனை' என்பது செய்யுள்களில் தொடர்ந்து பயன்படும் மொழியழகு ஆகும். பேச்சு வழக்கில் 'எகனைமொகனை' என்பார்கள். “அவன்கிட்டே பேசினால் எகனைமொகனையாப் பேசுவானே...” என்று ஊர்ப்புறத்தில் கூறுவார்கள். நீங்கள் என்ன கூறுகிறீர்களோ, அதனை ஒட்டியே சிறிது மாற்றிப் பேசுவதுதான் அது.
'எதுகை மோனை' என்பது புலவர்கட்குத் தண்ணீர் பட்ட பாடு. புலவர் தொழிலே மொழியை 'எதுகை மோனை'யோடு கையாள்வதுதான். சொற்களின் ஒலி இன்பத்தைப் பெருக்குவதில் 'எதுகை மோனை'க்குப் பெரும்பங்கு உள்ளது.
முதலில் 'மோனை' என்றால் என்ன என்பதைப் பார்ப்போம். 'மோனை' என்பது 'முகனை' என்பதிலிருந்து தொகுபட்ட வழக்காகி இருக்கலாம். வளம், வளனாவது போல, நலம், நலன் ஆவதுபோல, முகம், முகன் ஆகும்.
சொல்லின் முகமாவது எது? சொல்லின் முதலெழுத்தே அதன் முகமாகும். 'மோனை' என்பது சொற்களின் முதலெழுத்து ஒன்றாக வருவது. அதாவது சொற்களின் முதலெழுத்துகள் யாவும் ஒன்றாக அமைவது.
கண், கடல், கழுகு, கரும்பு, கட்டு, கருத்து போன்ற சொற்கள் 'க'வை மோனையாகக் கொண்டவை.
கற்க கசடற கற்பவை கற்றபின் - என்னும் குறளில் 'க' மோனை அமைந்துள்ளது.
முதற்சொல்லின் முதலெழுத்து எதுவோ, அது அடுத்தடுத்த சொற்களில் எங்கு வேண்டுமானாலும் இடம்பெறலாம். அதுவே 'மோனை.'
இரண்டாவது எழுத்துகள் ஒன்றாக அமைவது 'எதுகை' எனப்படும். 'மானே தேனே' - இச்சொற்களைப் பாருங்கள். முதலெழுத்து வேறு, இரண்டாம் எழுத்து மாறவில்லை. இதுவே 'எதுகை' ஆகும்.
கண்ணிலும் மண்ணிலும் பெண்ணிலும் - இத்தொடர் 'எதுகை'யாக அமைந்தது.
கற்க நிற்க - என்னும்போது 'எதுகை' அமைகிறது.
இதுகாறும் நாம் பாடல் என்று பாடுபவை அனைத்தும் 'எதுகை மோனை' பெற்றிருக்கும். செய்யுள்கள் யாவும் 'எதுகை மோனை'களால் ஆனவை.
அவற்றின் மொழி இனிமை, முதற்கண் 'எதுகை மோனை'யால் அமைவது. 'எதுகை மோனை' இல்லையேல் அது வெறும் உரைநடை தான்.
இனிமேல் படிக்கும் செய்யுள்கள் யாவற்றிலும், 'எதுகை மோனை'களைக் கூர்ந்து நோக்குங்கள்.
- மகுடேசுவரன்