PUBLISHED ON : ஆக 07, 2023

உயிர்களின் இயல்பு இயங்கிக் கொண்டே இருப்பது. இயக்கம் தான் உயிர்ப்பொருளை உயிரில்லாப் பொருளிடமிருந்து வேறுபடுத்துகிறது. தானாக இயங்குவது உயிரினால் மட்டுமே இயல்வது.
இந்த இயக்கம் தான், மேலும் பண்பட்டு நோக்கத்துடன்கூடிய செயலாக மாறுகிறது. செயல் சார்ந்து வழங்கப்படும் சொற்கள் எவை? வேலை, தொழில், வினை, பணி, அலுவல் என்று பலப்பல சொற்கள் இருக்கின்றன.
செய்வது செயல். ஒன்றைச் செய்வதும் செய்வதற்கான இயக்கமும் செயல் ஆகும். செய்வது எதுவும் இயல்பு பற்றியதாகவோ, புதியதாகவோ, இயற்கையோடு இயைந்ததாகவோ இருக்கும். கை, கால் அசைப்பதும் செயல் தான். மனத்தால் எண்ணுவதும் செயல் தான்.
தொழில் என்பது, செயல்பாட்டோடு அறிவு நுட்பம் கலந்து நிகழ்வது. 'உழவும் தொழிலும்' என்று குறிப்பிடுகிறோம். இங்கே தொழில் என்பது உடை நெய்தலைக் குறிக்கும். தொழில் என்பது, பல நுட்பங்கள் அடங்கிய செயல்பாடு.
'வினையே ஆடவர்க்கு உயிரே', வினையும் சிறப்பாக ஆற்றுகின்ற தொழிற்பாடு தான். ஆனால், அதன் விளைவு நெடுங்காலத்திற்கு உடன்வரக்கூடியதாக இருக்கும். நீடித்த பயன் தரும். அந்தப் பயன் நன்மையாகவும் இருக்கலாம், தீமையாகவும் இருக்கலாம். முன்னம் செய்த வினையை, ஊழ்வினை என்கிறோம்.
பணி என்பது ஒரு செயலைப் பணிந்து செய்வது. ஒருவருக்குப் பணிவிடை செய்வது. பணியாள், பணிப்பெண் போன்றவர்கள் இடப்பட்ட பணியைச் செய்பவர்கள். பணிக்குச் செல்பவர் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுபவர்.
வேலை என்பது, தேவையின் பொருட்டுச் செய்வது. வேல்தல் - வேட்டல் என்பது வேர்ச்சொல். தேவையின் பொருட்டு ஆற்றும் செயல். கலைத்தன்மை மிளிர்ந்தால் வேலைப்பாடு. நன்கு செயல்படுபவர் நல்ல வேலைக்காரர். வேலைக்குக் கூலி உண்டு.
அலுவல் என்பதும், வேலை தான். அலுவல் நடக்குமிடம் அலுவலகம். களைப்புறுவதைக் குறிக்கும் சொல் அலு - அலுப்பு- அலுத்தது. வேலை செய்துகொண்டே இருந்தால் ஏற்படுவது அலுப்பு (களைப்பு). மூளையுழைப்பைக் கோரும் வேலைகள் அலுக்கும் வரை நடப்பவை. ஒரே வேலையைத் தொடர்ந்து செய்யலாம். அலுக்கும் வரை செயல்படுவது.
- மகுடேசுவரன்
