PUBLISHED ON : ஜூலை 24, 2017

பயணங்கள் அறிவை விசாலமாக்கும். உலகத்தைப் பற்றிய பரந்த பார்வையை அடைய பயணங்கள் உதவுகின்றன. நம் ஒவ்வொருவரும் பல இடங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அங்கு பயணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருக்கும். நீங்கள் பார்க்க விரும்பும் இடம் எது என்று சென்னை, கொட்டிவாக்கம், நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களிடம் உரையாடினோம். ஆர்வமும், உற்சாகமுமாய் அவர்கள் தெரிவித்த கருத்துகள்:
ர.பா.கார்த்திகா (வகுப்பு 12): நான் செல்ல விரும்பும் இடம் பிரான்சில் இருக்கும் பாரிஸ். அங்கு உள்ள ஈஃபிள் டவரைப் பார்க்க வேண்டும். ஃஈபிள் டவரை புத்தகங்களிலும், நிறைய திரைப்படங்களிலும் பார்த்திருக்கிறேன். பிரம்மாண்டமாக நிற்கும் டவர் 1,700 டன் கம்பிகளை உருக்கிக் கட்டியதாம். அங்கு சென்று அதன் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும். டிஸ்னிலேண்ட் சென்று பார்க்க வேண்டும் என்பதும் இன்னொரு ஆசை.
ப.ப்ரீதா (வகுப்பு 12): கன்னியாகுமரிதான் என் சாய்ஸ். அங்கு சென்று சூரியன் உதிப்பதையும், மறைவதையும் பார்க்க வேண்டும். திருவள்ளுவர் சிலை, படகுப் பயணம், கலங்கரை விளக்கம், மெழுகுச் சிலை அரங்கம் போன்ற பல இடங்கள் உள்ளன. பாறைக் குன்றுகளின் மேல் ஏறிப் பார்த்தால் சுற்றிலும் உயர்ந்து நிற்கும் தென்னை மரத் தோப்புகள் தெரியும். இந்த ஆண்டு விடுமுறையின்போது கன்னியாகுமரி போகவேண்டும்.
ஜ.ரிஃப்கா (வகுப்பு 12): எனக்குப் பிடித்தது மொரிஷியஸ் தீவு. அங்கு ஏழு விதமான மணல்கள் இருக்கிறதாம். எவ்வளவு மழை பெய்தாலும் அந்த மணலின் நிறம் மாறுவதில்லை. வண்ணப் பாலைவனம் போல இருக்கும். போர்ட் லூயிஸ் என்ற இன்னொரு இடம் உள்ளது. அந்த இடமும் மிக அழகு. இந்திய வம்சாவளியினர் அங்கு நிறைய பேர் உள்ளனர். தமிழர்களும் உள்ளனர். தமிழ் பேசத் தெரியாவிட்டாலும் பலரது பெயர்கள் தமிழிலேயே இருக்கும். பல ஆச்சரியங்கள் நிறைந்த தீவு மொரிஷியஸ். இயற்கைச் சூழலில் அழகான கடற்கரையுடன் இருக்கிற மொரிஷியஸ் தீவுக்குச் சென்று வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
ம.நோயல் யஷ்வத் ரோஷன் (வகுப்பு 10): பக்கத்தில் இருந்தாலும் இதுவரை பெங்களூரு போனதே இல்லை. பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குப் போகவேண்டும். பெங்களூருவில் தாவரவியல் பூங்கா, பனசங்கரி கோயில், விதான் செளதா, அருங்காட்சியகம் போன்ற இடங்களைச் சுற்றிப் பார்க்க வேண்டும். அந்த ஊரின் தட்பவெப்ப நிலை எனக்கு மிகவும் பிடிக்கும். அங்கு வெயில் அதிகம் தெரியாதாமே!
ச.பிரியதர்ஷினி (வகுப்பு 10): டார்ஜிலிங் போகணும்னு எனக்கு ரொம்ப ஆசை. அங்கு நிறைய பாண்டா கரடிகள் உண்டு. சிவப்பு நிற பாண்டாக்கள் பார்க்க மிக அழகு. டார்ஜிலிங்கில் பத்மஜா நாயுடு விலங்கியல் பூங்கா உள்ளது. அதைப் பார்க்க வேண்டும். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இந்த விலங்கியல் பூங்கா ஏற்படுத்தப்பட்டது. டார்ஜிலிங்கில் தேயிலைத் தோட்டங்கள் நிறைய உள்ளன. தேயிலையின் பல வகைகள் அங்கு பயிரிடப்பட்டிருக்கும். டைகர் ஹில்ஸ் என்ற பகுதிக்கும் செல்ல வேண்டும்.
ஆ.ஜ.அபர்ணா (வகுப்பு 10): நான் செல்ல விரும்பும் இடம் வித்தியாசமானது. எனக்குச் சூரியக் குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்துக்குப் போகணும்னு ஆசை. விண்வெளி சார்ந்த விஷயங்களில் நிறைய ஆர்வம் உண்டு. விமானத்தில் பறப்பதிலும் ஆர்வம் உண்டு. செவ்வாய் கிரகம் சென்று நம் நாட்டின் பெருமையை நிலைநாட்ட வேண்டும். செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அது தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட வேண்டும்.
க.பார்கவி (வகுப்பு 10): ராமேஸ்வரம் போக வேண்டும் என்பது என் நெடுநாள் கனவு. ராமேஸ்வரம் கோயில், கடல் கொந்தளிப்பால் அழிந்த நகரமான தனுஷ்கோடி, பாம்பன் பாலம், அப்துல் கலாம் பிறந்த வீடு, அவரது நினைவிடம் போன்ற இடங்களைப் பார்க்க விரும்புகிறேன். கப்பல் செல்லும்போது பாம்பன் பாலம் உயர்ந்து வழி விடும் காட்சியை பார்க்க வேண்டும்.
த.சுஸ்மிதா (வகுப்பு 10): நான் போக விரும்பும் ஊர் திருச்செந்தூர். கடலும் கடல் சார்ந்த இடங்களும் எனக்குப் பிடித்தமானவை. திருச்செந்தூருக்குச் செல்லும் வழியில் உள்ள உப்பளங்கள், நாழிக்கிணறு என்ற இடம், வள்ளிக் குகை, திருச்செந்தூர் கோவில் போன்ற இடங்களைப் பார்க்க விரும்புகிறேன். இந்த ஆண்டு விடுமுறைக்கு என்னுடைய பெற்றோர் அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.