PUBLISHED ON : நவ 19, 2018

உடலினை உறுதி செய்ய பெரியவர்களுக்கு உடற்பயிற்சிக் கூடங்கள் உண்டு. பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டே சிறந்த உடற்பயிற்சி. அதற்கான சூழலை நாம்தான் ஏற்பாடு செய்துகொடுக்கவேண்டும். சென்னை, தாம்பரம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
வி. ஹேமலதா: (7ஆம் வகுப்பு)
வீட்டுக்குள்ளேயே விளையாடும் கண்ணாமூச்சி எனக்குப் பிடிக்கும். ஒளிந்துகொள்ளவும் வீட்டில் நிறைய இடம் இருக்கு. வீட்டுக்குள்ளேயே விளையாட ஈஸியான விளையாட்டாகவும் இருக்கு. கண்ணை பொத்திக்கொள்றவங்க, “கண்ணாமூச்சி ரே! ரே!”னு பாடல் பாடுவது பிடிக்கும்.
எஸ். ஆர். அரவிந்த் (10ஆம் வகுப்பு)
எனக்கு ஃபுட்பால் ரொம்பவும் பிடிக்கும். அதை நான் மொபைலில் தான் விளையாடிக்கொள்கிறேன். வாய்ப்புக் கிடைக்கும்போது, பள்ளி மைதானத்தில் விளையாடுவேன். வெளிநாடுகளில் நடைபெறும் ஃபுட்பால் மேட்சுகளை மறக்காமல் பார்த்துவிடுவேன்.
எஸ். முத்துகிருஷ்ணன் (9ஆம் வகுப்பு)
எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். மகேந்திரசிங் தோனி மிகவும் பிடிச்ச வீரர். நிதானமாக ஆடி அசத்துவார். நானும் அவரைப் போலவே நல்லா பயிற்சி எடுத்து, கிரிக்கெட் வீரராக ஆகணும் என்பதுதான் என்னுடைய ஆசை.
பி. தீப்தி (7ஆம் வகுப்பு)
இரு அணிகளாகப் பிரிஞ்சு விளையாடும் 'பூப்பறிக்க வருகிறோம்' விளையாட்டு பிடிக்கும். கேள்வி பதில் வடிவில் பாடல் இருக்கும். நிறைய பூக்களின் மாதங்களின் பெயர் சொல்லி விளையாடசெம ஜாலியா இருக்கும். எதிரணியினரை நம்ம அணி பக்கம் இழுப்பதில் தான் வெற்றியே இருக்கு.
ஆர். ஜெயவர்ஷினி (11ஆம் வகுப்பு)
கைப்பந்து பிடிக்கும். வெறும் ஆறுபேர் இருந்தால் ரெண்டு டீம் ரெடியாகிவிடும். ஓடியாடி விளையாடலாம். கோகோ விளையாட்டும் பிடிக்கும். ஸ்கூலில், பி.டி. வகுப்பு வேளையில் தான் விளையாடுவோம். அதற்காகவே நாங்கள் காத்துக்கிட்டு இருப்போம்.
எம். ரூபன் (12ஆம் வகுப்பு)
பண்டைய காலத்தில் இருந்தே நம்ம விளையாட்டுகளை உடற்பயிற்சி மாதிரியே வடிவமைச்சு இருக்காங்க. எனக்கு கபடி பிடிக்கும். இதில் நல்ல மூச்சுப்பயிற்சி கிடைக்கும். ஒரே நேரத்தில் ரெண்டு வேலை செய்யணும், எதிர் அணியினரின் பிடிக்குள் சிக்காமல் எப்படித் தப்பிப்பது என்று யோசித்துக்கொண்டே பாடிக்கொண்டு போகணும். உற்சாகமான செம விளையாட்டு கபடிதான்.
