PUBLISHED ON : ஏப் 03, 2017

கேரளத்தின் மலப்புரம் மாவட்டம், அங்காடிபுர கிராம ஊராட்சி அலுவலகத்தில், எழுத்தராகப் பணிபுரிந்து வருபவர், அப்துல் சலீம் (42). அவரது மேஜையில் லஞ்சத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக, ஓர் அறிவிப்பை வைத்துள்ளார். அதில், 'நாளொன்றுக்கு 811 ரூபாய் வீதம், மாதத்துக்கு 24 ஆயிரத்து 340 ரூபாயை, அரசு எனக்கு சம்பளமாகத் தருகிறது. மக்களுக்கு சேவை செய்யத்தான் நான் உள்ளேன். என் பணியில் திருப்தி இல்லை என்றால், என்னை தாராளமாக கேள்வி கேட்கலாம்.' என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, அப்துல் சலீம் கூறுகையில், ''சேவை என்பதுதான் அரசுப் பணியின் அடிப்படையே. எங்களிடம் வரும் மக்கள், மனநிறைவுடன் திரும்பிச் செல்ல வேண்டும்.'' என தெரிவித்துள்ளார்.
''சலீமுக்கு, போலியோவால் உடல் குறைபாடு இருந்தாலும், களப்பணியில் குறை வைப்பதில்லை. அவருடைய நடவடிக்கை, சக ஊழியர்களுக்கு பெரிதும் உதாரணமாய் உள்ளது'' என்று ஊராட்சித் தலைவர் ஓ.கேசவன் பாராட்டியுள்ளார்.

