தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கிளாக்கன் ஏன் கவர்னர் ஆகக்கூடாது?

கிளாக்கன் ஏன் கவர்னர் ஆகக்கூடாது?

கிளாக்கன் ஏன் கவர்னர் ஆகக்கூடாது?


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on Google
அ நிறம் | அளவு

ஏதென்ஸ், 2500 வருடங்களுக்கு முன்...

கிளாக்கன், துடிப்பான 20 வயது இளைஞன். ஏதென்ஸ் நகரின் கவர்னர் பதவி காலியானது. எப்படியாவது அந்த பதவியை பிடித்து விட ஆசைப்பட்டு, பார்ப்பவர்களிடம் எல்லாம் தன் ஆசையை வெளிப்படுத்தினான். ஆனால், அந்த பொறுப்புக்கு கிளாக்கன் தகுதி பெறவில்லை என்பதை சாக்ரடீஸ் அறிந்திருந்தார். இதை கிளாக்கனிடம் சாக்ரடீஸ் நேரடியாக சொல்லவில்லை. ஆனால், தான் அந்த பதவிக்கு லாயக்கில்லை என்பதை, கிளாக்கனுடைய வாயாலேயே சாக்ரடீஸ் ஒப்புக்கொள்ளச் செய்தார். எப்படி? சாக்ரடீஸ் கிளாக்கனுடன் நடத்திய

உரையாடல் இதோ:

சாக்ரடீஸ்: என்ன கிளாக்கன், அரசின் தலைமை பதவியை பிடிக்க திட்டமா?

கிளாக்கன்: ஆம், எப்படியும் கவர்னர் பதவியை அடைவது என்று முடிவு செய்துவிட்டேன்.

சாக்ரடீஸ் : நன்று, நீ கவர்னர் ஆகிவிட்டால், கிரேக்கம் முழுவதும் நீ பிரபலமாகிவிடுவாய். உன்னிடம், அதற்கான தகுதி இருக்கிறது

சாக்ரடீஸ் இப்படி கூறவும், கிளாக்கனின் தற்பெருமை அதிகரித்தது.

சாக்ரடீஸ் : உன்னுடைய நாட்டுக்கு நீ உதவினால், உன்னை எல்லாரும், மதிப்பார்கள், கவுரவிப்பார்கள் இல்லையா?

கிளாக்கன் : நிச்சயமாய்.

சாக்ரடீஸ் : நீ இந்த நாட்டிற்கு எங்கிருந்து உதவ தொடங்குவாய், சொல்?

ஆனால், கிளாக்கனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை...

சாக்ரடீஸ் : நண்பரின் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்றால், அந்த குடும்பத்துக்கு பண உதவி செய்வோம். அதே நாட்டுக்கு உதவி செய்வதென்றால், அந்த நாட்டை வசதிமிக்கதாக ஆக்க வேண்டும், இல்லையா?

கிளாக்கன் : ஆமாம், உண்மை தான்.

சாக்ரடீஸ் : நாட்டை எப்படி வசதியாக்குவது? அரசுடைய வருமானத்தை கூட்ட வேண்டும் இல்லையா?

கிளாக்கன் : நிச்சயமாக.

சாக்ரடீஸ் : சரி, இப்போது சொல். நம் நாட்டுக்கு எப்படியெல்லாம் வருமானம் வருகிறது? எவ்வளவு வருகிறது? நாட்டுக்கு தலைவராக ஆசைப்படும் நீ, அதை தெரிந்து வைத்திருப்பாய் என்று உறுதியாக நம்புகிறேன்.

கிளாக்கன் : உண்மையில், நான் அதைப் பற்றி கவனிக்காமல் போய்விட்டேன்.

சாக்ரடீஸ் : பரவாயில்லை. வருமானத்தை பற்றி தெரியாவிட்டாலும், நாட்டின் செலவுகளை பற்றியாவது தெரிந்திருக்குமே? வீண் செலவுகளை தடுக்க, உன்னிடம் திட்டம் ஏதும் உள்ளதா?

கிளாக்கன் : அதற்கும் எனக்கு நேரமில்லை. அதையும், கவனிக்கவில்லை.

சாக்ரடீஸ் : ஆனால், நாட்டின் வரவு செலவு கணக்கு தெரியாமல், எப்படி நிர்வாகம் செய்யப்போகிறாய்?

கிளாக்கன் : எதிரி நாட்டின் மீது படையெடுத்து, அங்குள்ள வளங்களை வசப்படுத்தி, நம் நாட்டை வசதிமிக்கதாக ஆக்கலாமே?

சாக்ரடீஸ் : சரி, ஒருவன் போர் செய்யும் முன்பு, தன் பலத்தையும், எதிரியின் பலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் இல்லையா?

கிளாக்கன் : மிகவும் சரி.

சாக்ரடீஸ் : அப்படியென்றால், நம்முடைய நாட்டின் தரைப்படை, கடற்படை பற்றி கூறு. அடுத்ததாக, எதிரி நாட்டின் பலத்தை பற்றி கூறு.

கிளாக்கன் அதற்கும் அமைதியாக இருந்தான். அரைகுறையாக தெரிந்ததால், அதை சொல்லவில்லை.

சாக்ரடீஸ் : நல்லது. அதை விட்டுவிடுவோம். நம் நாட்டின் வெள்ளி சுரங்கங்களுக்கு சென்றிருக்கிறாயா? வந்திருக்கிறாயா? தானிய விளைச்சல் பற்றி நீ அறிவாயா? ஒவ்வோர் ஆண்டும் எவ்வளவு அதிகமாக தேவைப்படுகிறது என்பதாவது தெரியுமா?

கிளாக்கன் : இல்லை. நான் போனதில்லை. எனக்கு எதுவும் தெரியவில்லை.

சாக்ரடீஸ் : ஆனால், ஒருவன் தனது வீட்டுப் பொருட்களின் நிலவரம் அறியாமல், வீட்டை எப்படி நிர்வாகம் செய்ய முடியும்? அரசு நிர்வாகத்தை விரும்பினால், இந்த நகரத்தில் உள்ள பத்தாயிரம் வீட்டின் நிலைமைகளை பற்றி நீ அறிந்திருக்க வேண்டுமே? சரி, ஏழையாக இருக்கும் உன் மாமா வீட்டிற்காவது நீ உதவலாமே?

கிளாக்கன் : என்னுடைய மாமா வீட்டுக்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும். ஆனால், என்னுடைய அறிவுரையை அவர் ஏற்பாரா என்று தெரியவில்லையே?

சாக்ரடீஸ் : ஆக, உன்னுடைய மாமா வீட்டில் உள்ளவர்களையே வழிக்கு கொண்டு வர முடியாத நீ, ஏதன்ஸ் நகரின் ஒட்டுமொத்த மக்களும் உன் கருத்தை ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா? தனக்கு தெரியாத ஒன்றை ஒருவர் சொல்வதும், செய்வதும் எத்தனை ஆபத்தானது என்பதைப் புரிந்துகொள். அத்தகையவர்கள் மக்களின் வெறுப்புக்கு ஆளாவார்கள் என்பதும் உறுதி. தாம் செய்வது இன்னது என்பதை அறிந்தவர்களுக்கு, தக்க மரியாதை கிடைக்கும். மக்கள் மத்தியில் நீ வரவேற்கப்பட வேண்டுமென்று விரும்பினால், நீ உன்னுடைய செயலை உணர்ந்தவனாயிரு.

இவ்வாறாக சாக்ரடீஸ் கிளாக்கனுக்கு அவன் தகுதியை உணர்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us