PUBLISHED ON : மே 01, 2017

சஷாங்காசனம்
'சஷாங்கம்' என்றால் சந்திரன். 'சஷாங்கம்' என்பது முயலையும் குறிக்கும். பிறைச்சந்திரன் போலவும், முயல் போலவும் இந்த ஆசனம் தோன்றும்; ஆகையால், சஷாங்காசனம் என்ற பெயர் வந்தது.
ஆரம்ப நிலை:
* கால்களை நீட்டி நேராக நிமிர்ந்து உட்காரவும்.
* உள்ளங்கைகளைத் தரையில் தொடைக்கு அருகில் வைத்துக் கொள்ளவும்.
1. வலது காலை மடக்கி, வலது குதிகால் மேல் அமர்ந்து கொள்ளவும்.
2. இடது காலையும் மடக்கி, இரண்டு குதிகால்களிலும் உட்கார்ந்து கொள்ளவும்.
3. இரண்டு கைகளையும் பின்னால் கொண்டு சென்று, வலது கை மணிக்கட்டை இடது கையால் பிடித்துக் கொள்ளவும்.
4. மூச்சை உள்ளிழுக்கவும்.
5. இடுப்பிலிருந்து கீழே குனியவும்.
6. மூச்சை வெளியே விட்டபடியே, நன்கு குனிந்து தலையை தரை வரை கொண்டு சென்று, நெற்றியைத் தரையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
7. நிதானமாக மூச்சை இழுத்து வெளிவிடவும். குதிகால்களிலிருந்து உடலைத் தூக்காமல், நெற்றியை தரையில் வைக்க வேண்டும்.
8. பத்து முறை மூச்சை இழுத்து விடவும்.
9. மெதுவாக மூச்சை உள்ளிழுத்தபடியே நிமிர்ந்து மேலே வரவும்.
10. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளவும்.
11. கைகளை விடுவிக்கவும்.
12. இடது காலை விடுவித்து நேராக நீட்டிக் கொள்ளவும்.
13. வலது காலையும் விடுவித்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
14. சிறிது ஓய்வாக அமர்ந்து கொள்ளவும்.
பயன்கள்
• கால்கள் வலுப்பெறுகின்றன.
• வயிற்றுத் தசைகள் வலுப்பெறுகின்றன.
• நுரையீரல்களின் சக்தி அதிகரிக்கிறது.
• மூச்சிரைப்பு, ஆஸ்துமா போன்ற மூச்சுப் பிரச்னைகளில் இருந்து வெளிவரமுடியும். வராமலும் தடுக்க முடியும்.
• முகத்துக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் முகத்தின் அழகு கூடும்.
• கண் பார்வை அதிகரிக்கிறது.
- ஆர்.தங்கலஷ்மி, விவேகானந்த கேந்திரம்
