PUBLISHED ON : ஜன 08, 2018
விஜயராஜா என்ற 25 வயது இளைஞர், தேனி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த விஜயராஜா ரோபோடிக்ஸ், மொபைல் செயலிகள் மூலம் வீட்டிலுள்ள மின்சாரப் பொருட்களைக் கட்டுப்படுத்தும் கருவியை வடிவமைத்திருக்கிறார். கிராம இளைஞர்கள் பலரை இணைத்து, இந்தச் செயலியை வடிவமைத்திருக்கிறார். அவருடன் நடத்திய நேர்காணல் இதோ:
உங்களைப் பத்தி சொல்லுங்க?
எங்க ஊர் தேனி. அப்பா, அம்மா இரண்டு பேருமே விவசாய வேலை செய்றாங்க. எங்க குடும்பத்துல படித்த முதல் தலைமுறை நான் தான். எங்க ஊருல இருக்கிற அரசாங்கப் பள்ளிக்கூடத்துல படிச்சேன். என் வாழ்க்கையில மிகப்பெரிய தொடக்கத்தைக் கொடுத்தது பள்ளிதான்.
என்ன மாதிரியான தொடக்கம் கிடைச்சது?
பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் ரொம்ப முக்கியமான கட்டம் இல்லையா? எங்க பள்ளிக்கூடத்துல கணிதப் பாடம் எடுக்க அப்ப டீச்சர் இல்ல. நாங்களே படிச்சு, புரிஞ்சுக்கணும் அப்படிங்கிற கட்டாயம். அந்த இரண்டு வருஷத்துல படிச்சு வெளியே வரலன்னா, அப்பறம் குடும்பத்தோட நிலைமை அப்படித்தான் இருக்கும். அதனால பாடங்களை நானே படிச்சு, கத்துக்க முயற்சி பண்ணினேன். எனக்கு தெரிஞ்ச விஷயத்தை மத்த பசங்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். நானே ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்க, பள்ளி எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்குன்னு நினைக்கிறேன்.
உங்களுடைய கனவு என்னவாக இருந்தது?
சென்னைக்கு வரணும், படிக்கணும், கணிதம், அறிவியல் துறையை இணைச்சு ஆராய்ச்சி செய்யணும்; இதுதான் கனவு.
உங்க கனவு பலித்ததா?
எதுவுமே தெரியாம தான் சென்னைக்கு வந்தேன். சென்னையில தனியார் கல்லூரியில படிக்கும்போது, ஹாஸ்டல்ல தங்கியிருந்தேன். ஆனா நான் செய்ய விரும்பிய விஷயங்களுக்கான சுதந்திரம் இல்ல. அதனால நண்பர்கள் தங்கியிருந்த இடத்துக்கு மாறினேன். ரொம்ப கஷ்டப்பட்டு, கம்ப்யூட்டர் வாங்கி அதுல புரோகிராமிங் செய்ய ஆரம்பிச்சேன். அப்படியே தான் புரோகிராமிங் மூலமா ரோபோக்களை இயக்கும் கோடுகளை உருவாக்கினேன். எனக்கு எம்பெட்டட் தொழில்நுட்பம் மேல ஆர்வம் வந்தது. எதுவுமே தெரியாம வந்த ஊர்ல, இப்ப சாதிக்க முடியும்னு நம்பிக்கை வந்திருக்கு.
உங்கள் பெற்றோர் உறுதுணையாக இருக்காங்களா?
அம்மா, அப்பாவுக்கு என்னோட கனவுகள் பத்தி தெரியும். இவ்வளவு தூரம் நான் வந்திருக்கேன்னு சொன்னா, அதுக்கு அவங்க தான் பலம். என்னோட பொறுமையும், விடாமுயற்சியும் தான், இப்ப நான் செய்யற வேலைக்குப் பலமா இருக்கு.
உங்களுடைய கண்டுபிடிப்பு பத்தி சொல்லுங்க?
நான் உருவாக்கின இரண்டு விஷயங்களுமே சாமான்ய மக்களுக்குப் போய்ச் சேரனும்ன்னு நினைச்சு செஞ்சது. பி.இ. படிக்கும்போது, ஒரு ரோபோவை உருவாக்கினேன். கண் பார்வை குறைபாடு உள்ளவங்க, காது கேளாதவங்க இவங்க இரண்டு பேரையும் வழிநடத்தும் விதத்தில், ஒரு ரோபோவை உருவாக்கினேன். ஆனா, பணப் பற்றாக்குறையால் அதை பெரிய அளவுல எடுத்துட்டுப் போக முடியல.
யாருகிட்டையும் உதவி கேட்கலையா?
ஆராய்ச்சிகள் செய்ய நிறைய செலவாகும். இதுக்கு நடுவுல நான் யோசிச்சது தான், மொபைல் செயலி விஷயம். இன்னிக்கு நம்ம எல்லார்கிட்டையும் மொபைல் போன், அதுவும் ஆண்டாராய்டு தான் இருக்கு. அதை மனசுல வச்சு, ஒரு செயலி உருவாக்கத் திட்டமிட்டேன். நம்ம வீட்டு மின்சார சாதனங்களும் ஸ்மார்ட் சிப் மாதிரியான ஒரு கருவியை பொருத்திட்டு, அதை நம்ப மொபைலோட இணைச்சுட்டு, எந்த ஓர் அறையில இருந்தாலும், நாம நம்வீட்டு மின்சார சாதனங்களை கட்டுப்படுத்த முடியும். இதுக்கான மிஷின் விலை 20,000 ரூபாய்.
இந்தக் கருவியை இயக்க இணையதள வசதி தேவையா?
கண்டிப்பா இல்ல, என் கிராமத்துல மின்சார வசதியே இப்ப தான் வந்திருக்கு. எங்க ஊரை மனசுல வச்சுத்தான், இந்தக் கருவியை உருவாக்கினேன். மின்சாரம் இருந்தா போதும், நம்ப வீட்டோட மின்சார சாதனங்களை உள்ளங்கையில் கட்டுப்படுத்தலாம். இன்னும் நிறைய விஷயங்கள் எம்பெடட் தொழில்நுட்பத் துறையில செய்யணும்ன்னு இருக்கேன்.
