PUBLISHED ON : ஏப் 12, 2024 12:00 AM

ஒரு எளிய வீட்டின் முன்னால் போய் நின்றார். சங்கரனின் குரலைக் கேட்ட அந்த வீட்டுப் பெண் பிச்சையிட தன் வீட்டிலிருந்த பானைகளை எல்லாம் திறந்து பார்த்தாள். உணவு இல்லை. அரிசியும் இல்லை.
பிச்சை கேட்டு வந்திருக்கும் அந்தச் சிவப்புதல்வனுக்கு என் கையால் பிச்சையிட இயலாத அளவிற்கு நான் ஏழையாகிப் போனேனே என்று மனதிற்குள் புழுங்கினாள். தேடிப் பார்த்ததில் ஒரே ஒரு நெல்லி வற்றல் இருந்தது. அந்த நெல்லி வற்றலோடு வாசலுக்கு வந்தாள்.
![]() |
சங்கரனின் முகத்தைப் பார்க்கப் பெறாமல் அவர் வைத்திருந்த பாத்திரத்தில் அந்த நெல்லி வற்றலை இட்டாள். பசி என்று வந்திருக்கும் குழந்தைக்கு வெறும் நெல்லி வற்றலை மட்டும் தருகிறோமே என்று அவள் கண்கள் கண்ணீர் சிந்தின. அது சங்கரன் வைத்திருந்த பாத்திரத்தில் விழுந்தது.
சங்கரன் பாத்திரத்தில் இருந்த நெல்லி வற்றலையும் அந்தத் தாயின் கண்ணீரையும் பார்த்தார். உலகே துன்பத்திற்கு ஆளானது போல உணர்ந்தார். அந்தத் தாயின் அன்பில் உருகினார். அவள் மேல் கருணை கொண்டார்.
செல்வங்களுக்கெல்லாம் நாயகியான லட்சுமி திருமகளை நினைத்தார். இனி இந்த உலகில் யார் வறுமையில் வாடினாலும் இந்தப் பாடலைப் பாட அவர்களின் வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கட்டும் என்று ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடத் தொடங்கினார்.வறுமை குடியிருந்த அந்த தாயின் வீட்டில் தங்க நெல்லிக்காய் மழையாக பொழிந்தது. அவர்கள் வறுமை தீர்ந்தது.
வீடு நிறைய தங்க நெல்லிக்கனி கொட்டிக்கிடந்தாலும் அதில் ஒன்றையும் கேட்காமல் அது பற்றி சலனமும் படாமல் அடுத்த வீட்டில் பிச்சை எடுக்கப் போனார் சிறுவனாக இருந்த ஆதிசங்கரர்.
நடந்த நிகழ்வுகளின் சாட்சியாக தங்க நெல்லிக்கனி பொழிந்த அந்த வீடும், நாடும், அவர் அவதரித்த காலடியும் இப்போதும் கேரளாவில் இருக்கிறது போய்ப் பாருங்கள் என்று இசைச் சொற்பொழிவாளர் விசாகா ஹரி ஆதிசங்கரரின் கதையைச் சொன்ன போது கேட்ட அனைவரும் நெகிழ்ந்து போயினர்.
சிருங்கேரி சாரதா பீடாதிபதியான பாரதி தீர்த்த சுவாமிகள் சன்யாசம் பெற்று ஐம்பது ஆண்டுகளான நிலையில் அதனை சங்கர விஜயம் திருவிழாவாக சென்னை அடையாறில் உள்ள சிருங்கேரி மடத்தினர் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு மடத்தைச் சேர்ந்த துறவிகளும், சுவாமிகளும் சிறப்பு சொற்பொழிவினை நிகழ்த்தி வருகின்றனர்.
நேற்று 'ஆதிசங்கரரும் அவரது கிருதிகளும்' என்ற தலைப்பில் விசாகா ஹரியின் இசைச் சொற்பொழிவு நடைபெற்றது.
விசாகா ஹரி பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுதான் அவரது சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. வலிய கருத்துக்களை எளிமையாகச் சொல்லும் லாவகம் இருக்கிறது இன்றைய காலகட்டத்தை ஒப்பீடு செய்யும் நகைச்சுவை உணர்வு உள்ளது அரங்கத்தை கட்டிப்போடும் இசை ஞானம் இருக்கிறது சக கலைஞர்களை வேலை வாங்கும் உத்தி தெரிகிறது, மொத்தத்தில் அவரது சொற்பொழிவு அடுத்து எங்காவது நடந்தால் போய்க் கேட்க வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது. அதுதானே சொற்பொழிவின் பலன், சொற்பொழிவாளரின் திறன்..
-எல்.முருகராஜ்.


