PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM

![]() |
தமிழகத்திற்கு பெரும் வாழ்வாதாரமாக திகழும் மேட்டூர் அணை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பாதிக்கு பாதியாக குறைந்த வறண்டு காணப்படுகிறது.
வரலாறு காணாத வெயில் வறட்சி என்று நாளும் செய்தி வந்து கொண்டு இருக்கும் நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிக்கு குடிநீர் மற்றும் விவசாய ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை நிலவரம் குறித்து அறிந்து வர ஒரு விசிட் அடித்தோம்.
![]() |
காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம், சேலத்தில் இருந்து 60 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள மேட்டூரில் உள்ளது மேட்டூர் அணை.1925 ஆம் ஆண்டு துவங்கி 1934 ஆம் ஆண்டு கர்னல் எல்லீஸ் அவர்களின் வடிவமைப்பின்படி ரூ4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இதுதான் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாகும்.
![]() |
மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் சேலம்,ஈரோடு,நாமக்கல் உள்ளீட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17.10 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் அணை நீர்தான் பயன்படுகிறது.
![]() |
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கும்போது சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
![]() |
மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணை ஆகிய இரு அணைகளிலிருந்தும் தண்ணீர் வருகிறது,மேலும் பாலாறு மூலமாகவும் மழைப்பொழிவு காரணமாகவும் நீர் ஆதாரரம் பெருகுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர் மட்டம் 120 அடியாகும்,கோடை காலத்தில் தண்ணீர் இருப்பு குறையும் போதெல்லாம் மக்கள் மனம் வாடும்.
கடந்த 2023 ஆம் வருடம் இதே ஏப்ரல் மாதம் அணை நீர்மட்டம் 101.49 அடியாக இருந்தது.,நீர் இருப்பு 66.78 டி.எம்.சியாக காணப்பட்டது.ஆனால் இந்த வருடம் இதுவே பாதிக்கு பாதியாகி இப்போது 53.81 அடியாக உள்ளது.நீர் இருப்போ 20.29 டிஎம்சி.,யாக காணப்படுகிறது.அணைக்கு ஒரு ஒடை போல 82 கன அடி தண்ணீர்தான் வருகிறது ஆனால் குடிநீர் தேவைக்காக 1200 கனஅடி திறக்கப்படுகிறது.
அணையின் பிரதான பகுதி வறண்டு போய் காணப்படுகிறது,அணையில் இருந்து சுமார் 39 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள பாலாறு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறணடு காணப்படுகிறது.
பாலாறும்,காவிரி ஆறும் சங்கமிக்கும் இடத்தில் கால்நடைகள் தண்ணீர் தேடி பரிதாபமாக அலைகின்றன. அந்தப்பகுதியில் அகண்டு வரும் காவிரி ஒரு ஒடையைப் போல சுருங்கி காணப்படுகிறது.தண்ணீர் ஓடிய பகுதி பாளம் பாளமாக வெடித்துப் போய் உள்ளது.அணையைச் சுற்றியுள்ள காடுகள் பசுமையை இழந்துள்ளது.
அணையின் பின் பக்கம் உள்ள பண்ணவாடி என்பது பரிசல் பயணத்திற்கு பெயர் பெற்ற பகுதியாகும்.120 அடி தண்ணீர் தேங்கியிருக்கும் போது இந்தப்பகுதி அப்படியொரு செழிப்புடன் காணப்படும்.இப்போது நீர் தேங்கியிருக்கும் பகுதி குறைந்து அணையின் நீர் மட்டம் குறைந்துள்ளத.நீருக்குள் மறைந்திருக்கும் நந்தி சிலை முழுமையாக தெரிகிறது.
அணையின் ஒரு பகுதியில் சுமார் 500 மீட்டர் துாரத்தை பரிசல் மூலம் கடந்தால் தர்மபுரி மாவட்டத்தின் நாகமரை, ஏரியூர், நெருப்பூர், ஒகேனக்கல், பென்னாகரம் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர் அதே போல அந்தந்த ஊர்களிலிருந்து சேலம் மாவட்டத்தின் கொளத்தூர், மேட்டூர் வருவதற்கு இந்தப் பரிசல் போக்குவரத்து பயன்படுகிறது.
இந்தப் பரிசல் பயணிகளின் வசதிக்காக அணையின் நீர்பிடிப்பு பகுதிக்குள்ளேயே அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அவ்வப்போது வந்து போகின்றன.
அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் பேசிய போது எப்போதும் இல்லாத அளவு வெயில் உக்கிரமாக உள்ளது இதன் தாக்கத்தால் பெரியளவில் நீர் பிடிப்பு பகுதிகள் வறண்டு வருகிறது இது போன்ற சந்தர்ப்பங்களில் கோடை மழைதான் எப்போதும் கைகொடுக்கும் இப்போதும் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
-எல்.முருகராஜ்