PUBLISHED ON : மே 28, 2024 12:00 AM

நீதியை நிலைநாட்டிய மனுநீதிச் சோழன்
-பார்வையாளர்களைக் கவர்ந்த நாட்டிய நாடகம்.
![]() |
மனுநீதிச்சோழன்
நீதி வழுவாது ஆட்சி செய்து இந்த மன்னனை மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தனர். மன்னனுக்கு ஒரு மகன் உண்டு அவன் பெயர் வீதி விடங்கன்.
மன்னர் அவனுக்கு யானை ஏற்றம், குதிரைஎற்றம், தேர் ஓட்டுதல், வாட்பயிற்சி ஆகிய கலைகளைக் கற்பித்தார்.
ஒருநாள் மாலைவேளை வீதிவிடங்கன் தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். அதே வேளையில் ஒரு கன்றுக்குட்டியும் தெருவில் துள்ளிக் கொண்டு வந்தது. இளவரசன் அதைக் கவனிக்காமல் அக்கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது.
![]() |
மகிழ்ச்சியோடு இருந்த கன்றின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டோமே என்று மதிமயங்கி இறந்த கன்றின் அருகிலேயே அமர்ந்து விட்டான் இளவரசன்.
அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர அங்குவந்து தன் கன்றைத் தன் நாவால் நக்கிக் கொடுத்தது. பின் வேகமாக அங்கிருந்து சென்று மக்கள் குறை கேட்க மன்னன் கட்டிய ஆராய்ச்சி மணியை இழுத்து அடித்தது.
![]() |
அரண்மனைக்குள் இருந்த மன்னன் ஆராய்ச்சி மணி ஒலி கேட்டு வெளியே வந்தான் கண்ணீரோடு நின்ற பசுவைக் கண்டான் அது சென்ற திசையில் தானும் சென்றான் முடிவில் கன்று இறந்து கிடந்த இடத்தை அடைந்தான்.
![]() |
நடந்த நிகழ்ச்சியைக் கூறித் தானே குற்றவாளியென மன்னன் முன் தலைகுனிந்து நின்றான் வீதிவிடங்கன். ஒருநிமிடம் நிலைகுலைந்துபோன சோழன் சற்றே சிந்தித்தான்.இறந்துபோன கன்றை உயிர்ப்பிக்க இயலாது.ஆனால் உயிருக்கு உயிரைத் தரலாம். அத்துடன் அந்த தாய் படும் வேதனையை இந்தக்குற்றம் செய்தவனின் தாயும் அனுபவித்தலே சரியான தண்டனையாகும் என எண்ணினான்.
மனுநீதி தவறாத மனுநீதிச் சோழன் தானே தேரின் மீது ஏறி அமர்ந்தான்.வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டுக் கொல்லும் நோக்குடன் தேரைச் செலுத்தத் தொடங்கினான்.தேரும் வேகமாக ஓடத் தொடங்கியது.என்ன அதிசயம்? தேர் வீதிவிடங்கனின் அருகே வந்து நின்று விட்டது. அங்கே கண்ணீர் சோர நின்றிருந்த பசுவும், இறந்து கிடந்த கன்றும் மாயமாய் மறைந்தன. அனைவரும் திகைத்து நின்றனர்.
அப்போது விண்ணிலிருந்து ஒரு அசரீரியின் கேட்டது. 'சோழ மன்னா! தேவேந்திரன் சபையில் உனது நீதியின் சிறப்பைப் பற்றிய சர்ச்சை எழுந்தது. உன் நீதியின் சிறப்பை அறியவே தேவேந்திரனாகிய நானும் எமதர்மனும் பசுவாகவும் கன்றாகவும் வந்தோம். உன் நேர்மையும் நீதிவழுவாத் தன்மையும் கண்டு மகிழ்ந்தோம். பல்லாண்டு புகழோடு வாழ்வாயாக.' என்று வாழ்த்தி மறைந்தது
நீதி நேர்மையை பறைசாற்றும் இந்த மனுநீதிச் சோழனின் கதையை, நாட்டிய நாடகமாக தபஸ் மகாலட்சுமி குழுவினர் சென்னை ரஸிக ரஞ்சனி சபாவில் நேற்று நடைபெற்ற செங்கோல் மறுமலர்ச்சி தினநாளில் நிகழ்த்தி பார்வையாளர்களின் பாராட்டுதலைப் பெற்றனர்.
-எல்.முருகராஜ்