sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

விதைகளே பேராயுதம் சொல்கிறார் வீரமுத்து.

/

விதைகளே பேராயுதம் சொல்கிறார் வீரமுத்து.

விதைகளே பேராயுதம் சொல்கிறார் வீரமுத்து.

விதைகளே பேராயுதம் சொல்கிறார் வீரமுத்து.


PUBLISHED ON : பிப் 17, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 17, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

Image 1383861மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் என்றெல்லாம் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் தொடங்குகின்றனர். ஆனால் அதை முழுமையாக வெற்றிகரமாக செய்து காண்பிப்பவர்கள் வெகு சிலரே.

அப்படி ஒருவர்தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் மாஞ்சான் விடுதி ஊராட்சி மழவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து என்ற பெண்மணி.

42 வயதான இவர் கடந்த 2021 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து வருடங்களாக தனது வீட்டு மொட்டை மாடியில் மாடித்தோட்டம் அமைத்து அதில் இயற்கை முறையில் கீரை வகைகள் காய்கறிகள் பழங்கள் மலர்கள் மூலிகைகள் மற்றும் அழகு தாவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் வெற்றிகரமாக சாகுபடி செய்து வருகிறார்.

இந்த எண்ணம் எப்படி தோன்றியது என்று கேட்டபோது கோவிட் லாக்டவுன் சமயத்தில் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பதற்கு மிகவும்சிரமமாக இருந்தது. அப்போதுதான் முதன்முதலில் சிறிய அளவில் தொட்டிகளில் காய்கறிச்செடிகள் வைக்க ஆரம்பித்தேன் என்று கூறுகிறார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவர் தன்னுடைய மூன்று பிள்ளைகளை சிங்கிள் மதர் ஆக இருந்து வளர்த்து வருவதோடு 11 வருடங்களாக கிராம நிர்வாக அலுவலராக அரசுப் பணியிலும் இருக்கிறார்.Image 1383863சாதாரணமாக சமையல், வீட்டு வேலை அலுவலக வேலை இவற்றை செய்வதே பெரும்பாடாக இருக்கும் போது வீட்டில் உள்ள பெரியவர்கள், பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகள் என அனைவரையும் பராமரித்துக் கொண்டு,கிராம நிர்வாக வேலையையும் பார்த்துக் கொண்டு இயற்கை விவசாயத்தையும் சிறப்புடன் செய்து எல்லா பெண்களுக்கும் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.

இதற்கெல்லாம் உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்டால் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன்பும் அலுவலகம் விட்டு வந்த பிறகும் சில மணி நேரங்கள் மாடித்தோட்டத்துக்காக செலவு செய்வேன் என்று கூறுகிறார்.

750 சதுர அடிகள் கொண்ட இவரது மாடித்தோட்டத்தில் எந்தவிதமான செயற்கை உரங்களோ பூச்சிக்கொல்லி மருந்துகளோ இல்லாமல் முற்றிலும் இயற்கை முறையில் அமிர்த கரைசல், மீன் அமிலம், பஞ்சகவ்யம், வேப்பெண்ணெய் கரைசல், மண்புழு உரம், இலைமக்கு உரம், ஆடு மாடு சாணங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உரம் போன்றவற்றையே பயன்படுத்துகிறார்.

இடம் சிறியதாக இருந்தாலும் இவரது தோட்டத்தில் பழங்களில் 28 வகையும், மூலிகையில் 15 வகையும்,கீரையில் 12 வகையும், பூக்களில் 8 வகையும், காய்கறியில் 15 வகையும், கிழங்குகளில் 10 வகையும் இருப்பதாக கூறி ஆச்சரியப்படுத்துகிறார்.

அதிலும் குறிப்பாக திராட்சை, கும்குவாட் ஆரஞ்ச், பேஷன் ஃப்ரூட், மல்பெரி, காந்தாரி மிளகாய், நெய் மிளகாய், கொடி உருளை, மூக்குத்தி அவரை லகடாங் மஞ்சள்சிம்ரி மஞ்சள்,கருப்பு இஞ்சி,கருமஞ்சள், மா இஞ்சி, மலேசியன் கோவைக்காய், மலேசியன் மிளகாய் என்று அபூர்வமான தாவர வகைகளை வைத்து வளர்த்து வருகிறார்.

100 க்கும் மேற்பட்ட பைகளில் செடிகள் உள்ளது. அதற்கு தண்ணீர் ஊற்றவே 2 மணி நேரம் ஆகிறது. செடிகளுக்கு நோய் தாக்கம் ஏற்படும்போதும், கோடை காலத்தில் கடுமையான வெயிலை சமாளிப்பதும் சவாலான விஷயம்,என்ன ஆனாலும் நம்ம பிள்ளைகளை விட்டுவிடுவோமோ அது போல இதுவும் என் பிள்ளைகள்தான் ஆகவே எந்த சூழ்நிலையிலும் வாட விடமாட்டடேன் என்கிறார்.

எங்கள் குடும்பத்திற்கு நஞ்சில்லா காய்கறிகள் பதப்படுத்தப்படாத பழங்கள் குறைந்த செலவில் கிடைக்கிறது, உடலுக்கும் ஆரோக்கியம் என்கிறார். மாடித் தோட்டத்தை தொடர்ந்து 'நிவிஸ் கார்டன்' என்ற பெயரில் யூடியூப் சேனல், வாட்ஸ் அப் குரூப், முகநூல் பக்கம் போன்றவற்றையும் அமைத்து நிர்வகித்து வருகிறார்.

மாடித்தோட்டம் அமைப்பது, இயற்கை விவசாயம் செய்வது, இயற்கை முறையில் பூச்சிகளை கட்டுப்படுத்துவது போன்றவற்றையும் பரவலாக நிறைய பேருக்கு காணொளிகள் மூலம் சொல்லிக் கொடுக்கிறார். நிறைய பேருக்கு ஆலோசனைகள் கொடுப்பவராகவும் இருக்கிறார்.

மேலும் அவரை தொடர்பு கொண்டு எங்களுக்கு விதைகள் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு தனது மாடி தோட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தப்பட்ட விதைகளை இலவசமாகவே அனுப்பி வைக்கிறார்.

மேலும் தமிழ்நாடு அளவில் நடக்கக்கூடிய மரபுசார் காய்கறிகள் திருவிழா மற்றும் கண்காட்சிகளில் கலந்து கொள்கிறார். இதன்மூலம் மரபுசார் விதை சேகரிப்பாளர்களோடு தொடர்பு கொண்டு நிறைய தகவல்களை தெரிந்து தன்னை எப்போதும் நிகழ்காலத்திற்கு ஏற்றவராக மாற்றிக்கொள்கிறார்.

வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த மாணவர்கள் நேரடியாக விவசாய அனுபவங்களை பெறும் கிராமப்புற வேளாண் பணி திட்டத்தின் ஒரு பகுதியாக இவரது மாடித்தோட்டத்தை நேரில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்,இயற்கை விவசாயிகளும்,பொதுமக்களும் கூட இவரது மாடித்தோட்டத்தை பார்த்து வியந்து போகின்றனர்.

விதைகளே பேராயுதம்' என்ற நம்மாழ்வார் அய்யாவின் அறிவுரை படி விதை பரவலாக்கம் செய்து வருகிறேன்,எனது தேவைக்கு அதிகமாக விளையும் காய்கறி , பழங்கள் , விதைகளை பிறருக்கு பகிர்ந்து வருகிறேன்.வருங்கால தலைமுறைக்கு மரபு விதைகளை கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அன்றாடம் அதிகரித்து வரும் காய்கறிகள் பழங்களின் விலை உயர்வு, விதவிதமான நோய்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு என்று இருக்கும் இன்றைய காலகட்டத்தில்நமது வீட்டிலேயே இது போல இயற்கை முறையில் மாடித் தோட்டம் அமைப்பதால் செலவு குறைவதோடு மட்டுமல்லாமல் நல்லதொரு உடற்பயிற்சியாகவும் மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகவும் இருக்கும், இந்த மாடி தோட்டத்தை உருவாக்கும் வாய்ப்பு உள்ளவர்கள் உருவாக்கி பயனடையலாம் அதற்கு வீரமுத்து வழிகாட்கிறார்.

தகவல்:ஈரநெஞ்சம் மகேந்திரன்.






      Dinamalar
      Follow us