PUBLISHED ON : டிச 09, 2025 03:25 PM

கேரளா வானில் நிகழ்ந்த சாகசங்கள்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சங்குமுகம் கடற்கரையில், இந்தியக் கடற்படை தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பிரமாண்டமான நிகழ்ச்சி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. வானில் தீப்பொறிகளைப் பறக்கவிட்ட கடற்படையின் விமான சாகசங்கள், கடற்கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை வியப்பில் ஆழ்த்தின.



இந்தியா மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதால், கடற்படையின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கவும், இளைஞர்கள் மத்தியில் ராணுவச் சேவையில் சேர ஆர்வத்தை ஏற்படுத்தவும் இது போன்ற சாகசங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
பிளேர்ஸ் வெளியீட்டுச் சாகசம் மட்டுமின்றி, இந்தப் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்கள் மற்றும் சிறிய கப்பல்கள் கடற்கரைக்கு அருகில் அணிவகுத்து சென்றன.ஹெலிகாப்டர்கள் மூலம் கடலில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் ஒத்திகைகள் நிகழ்த்தப்பட்டன.
கடற்படை இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடந்தன.திருவனந்தபுரத்தின் சங்குமுகம் கடற்கரை, கடற்படையின் வலிமை மற்றும் தேசபக்தியை உணர்த்தும் ஒரு மறக்க முடியாத மாலைப் பொழுதை மக்களுக்கு வழங்கியது என்பதில் ஐயமில்லை.
-எல்.முருகராஜ்.

