PUBLISHED ON : பிப் 24, 2024 12:00 AM
கடந்த நுாறு நாட்களாக தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் யாத்திரை மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது யாத்திரையை நிறைவு செய்த இடம் மாதவ்பூர்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் என்பது சிறிய ஊர் அந்த சிறிய ஊரில் உள்ள சிறிய கிராமம் மாதவ்பூர்.
இந்த நிறைவு யாத்திரையில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வருகை தந்திருந்தார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான மைதானத்தில் பலரும் வியக்கும் வகையில் தொண்டர்கள் குவிந்திருந்தனர். பிரதமர் நிகழ்வு என்பது மிகச்சரியாக இருக்கும் என்பர். ஆனால் பல்லடம் நிகழ்வு ஒரு மணி நேரம் தாமதமாகவே துவங்கியது.
கூட்ட ஏற்பாடுகளை பார்த்து வியந்த பிரதமர் மோடி மேடையிலேயே அண்ணாமலையை தோளில் தட்டிக் கொடுத்து பாராட்டினார். ஹெலிகாப்டரில் இருந்து திறந்த வேனில் மக்கள் மத்தியில் மலர் துாவி அவரை அழைத்துவந்தது அவருக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது என்பதை அவரது பேச்சிலேயே தெரிந்தது. மேலும் அவருக்கு 60 கிலோ எடையுள்ள ஈரோடு மஞ்சள் மாலை, ஜல்லிக்கட்டு காளை என்று பல்வேறு வட்டார பரிசுகளை வழங்கி கவுரவித்தனர்.
பிரதமர் வருவதற்குள்ளாகவே பிற கட்சித் தலைவர்களை பேசவைத்துவிட்டனர், இதில் பத்தாண்டுகாலம் செவ்வாய் கிழமை தோறும் மவுன விரதமாக அறியப்பட்ட தமிழருவி மணியனும் தனது செவ்வாய் விரதத்தை துறந்து பேசினார்,
ரஜினியால் கைவிடப்பட்ட விரக்தியில் தான் இனி அரசியலே பேசப்போவதில்லை என்று இவர் அறிவித்திருந்தார் இப்போது மீண்டும் அரசியல் பேச வந்துவிட்டார்.
இது தேர்தல் களம் என்பதாலும் அதிமுக பலம் பெற்ற பகுதிகள் என்பதாலும் எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோரை தமது பேச்சில் நினைவு கூர்ந்தார்.
எங்கோயோ யாரோ தண்ணீர் பாட்டிலை வீசினார் என்பதால் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டிலை அனுமதிக்காமல் இருப்பது அநியாயமாகப் பட்டது, சுமார் நான்கு மணி நேரம் தண்ணீ்ர் குடிக்காமல் வெயிலில் இருக்கவேண்டி இருந்தது, அதே போல கறுப்பு என்பது எதிர்ப்பின் நிறமாகிப்போனதால் கருப்புத் தொப்பி கூட அணியக்கூடாது என்றது இன்னும் அநியாயம்.
தொண்டர்களைத் திரட்டுவது, பிரம்மாண்ட கூட்டம் நடத்துவது என்பது எல்லாம் திராவிட கட்சிகளுக்கே கைவந்த கலை என்பது போய் இப்போது பாஜ.. அவர்களை எல்லாம் மிஞ்சும் வகையில் பல்லடத்தில் கூட்டம் நடத்திக் காண்பித்துவிட்டனர்.
-எல்.முருகராஜ்