பொதுவாக, ஒரு உயிரினத்தின் மீது அதற்கேற்ற மரியாதை தரப்படவேண்டும் என்று எண்ணப்படுவது இயற்கையானது. ஆனால் தாய்லாந்தின் சோன்புரியில், எருமைகளுக்கு வழங்கப்படும் மரியாதை மற்றும் சிறப்புப் போக்கு அவர்களது திறமை மற்றும் சக்தியை வெளிப்படுத்தும் விதமாக மாற்றப்பட்டுள்ளது.
எருமைகள் தாய்லாந்தின் விவசாயப் பணிகளில் முக்கியப் பங்காற்றுகின்றன. நூற்றாண்டுகளுக்கு முன், சோன்புரி கிராமத்தில் எருமைகள் விற்பதற்காக மக்கள் கூடுவது வழக்கம். அந்த நேரத்தில், விற்பனைக்காக கூடியவர்கள் தங்கள் எருமைகளின் திறமையை காட்சிப்படுத்துவதற்காக அதை வேகமாக ஓடவிட்டு பார்வையாளர்களை பிரமிப்புறச் செய்தனர். காலம் கடந்தவுடன், இந்த முயற்சி வளர்ந்து ஒரு ஒட்டப்பந்தயமாக மாறியது.
எருமைகள் இயல்பாக நாய் போல வேகமாக ஓட முடியாது. அதன் மீது ஓர் இளைஞர் குதிரையைப் போல ஒட்டினாலும், எருமை தன் இயல்புப்படி தன் விருப்பத்திற்கேற்ப வளைந்து ஓடும் தனித்துவம் உள்ளதல்லவா. அதுவே இந்நிகழ்ச்சியின் சுவாரஸ்யம். பந்தயத்தில் இளைஞர்கள் எருமைகளின் மீது சவாரி செய்து, விழுவதும் எழுவதும் கலந்த வேகத்தில் பந்தயம் நடைபெறுவதால், நிகழ்ச்சி வேடிக்கையுடனும் கலகலப்புடனும் காணப்படும்.
எருமை ஒட்டப்பந்தயத்தையே மட்டும் காட்டாமல், விழாவுக்கான நாட்களில் கிராமங்களில் பெரும் இசை விழாக்கள், பாரம்பரிய உணவுத்திருவிழாக்கள் மற்றும் கிராமிய விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன. இதனால் இந்தப் போட்டியை அனுபவிக்க உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் திரள்கின்றனர்.
பந்தயம், எருமைகளின் தரத்திற்கு ஏற்ப பல பிரிவுகளில் நடத்தப்படுகிறது. வெற்றி பெற்ற எருமைகளுக்கு சிறப்பு உணவு வழங்கப்படுவதோடு, உரிமையாளருக்கு பதக்கம் மற்றும் பணம் வழங்கப்படுவது வழக்கம். இவ்விழா, தாய்லாந்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்ச்சியாகவும், கிராம மக்களின் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் மையமாகவும் மாறிவிட்டது.
-எல்.முருகராஜ்