/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
வாரிசுகளுக்கு வளமான நாடு: மக்களுக்கு வறட்சியான காடு
/
வாரிசுகளுக்கு வளமான நாடு: மக்களுக்கு வறட்சியான காடு
வாரிசுகளுக்கு வளமான நாடு: மக்களுக்கு வறட்சியான காடு
வாரிசுகளுக்கு வளமான நாடு: மக்களுக்கு வறட்சியான காடு
PUBLISHED ON : ஏப் 07, 2024 12:00 AM

தமிழக தேர்தல் களத்தை பார்க்கும்போது, வேதனையும், வெறுப்பும் ஏற்படுகிறது. கடந்த 1967 தேர்தல் முதல், 1996 தேர்தல் வரை, தமிழகத்தில் ஆட்சி புரிந்த இரண்டு திராவிட கட்சிகளின் வாரிசுகள் அரசியலுக்கு வராமல், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பார்த்துக் கொண்டனர்; அவர்கள் மறைவுக்குப் பின், நிலைமை தலைகீழ். கோடி கோடியாக சொத்து சேர்த்திருப்பவர்களுக்கு தான், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கிறது.
துாத்துக்குடி வேட்பாளர் சொத்து மதிப்பு, 57 கோடி. திருச்சி வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு, 35 கோடி. வேலுார் வேட்பாளர் சொத்து, 152 கோடி. விருதுநகரில், சினிமா நடிகர் விஜயகாந்த் மகனுக்கு 17.5 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. சாதாரண டாக்டர்கள், இன்ஜினியர்கள், அரசு ஊழியர்கள், இதுபோல கோடிகளில் சொத்து வைத்திருப்பரா என்பது சந்தேகமே. இந்த வாரிசு அரசியலால், எதிர்காலத்தில் நம் மாநிலம், சோமாலியா போல் ஆகிவிடும் என்பது நிச்சயம்.
வாரிசுகள் வளர்ச்சி
ஆளுங்கட்சிகளின், 'கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன்' மூலமாகச் சேர்ந்த வானளாவிய தேர்தல் நிதியைப் பாதுகாக்க, தம் ரத்த உறவுகளை நிதிக் காவலர்களாகவும், நிதியை நிர்வகிப்பவர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் நியமிப்பர். கட்சியில் உள்ள மற்றவர்களை புறந்தள்ளி ஒதுக்கி விடுவர். இதற்காகவே, வாரிசுகளுக்கு கட்சிப் பதவி, அரசு பதவி கொடுத்து, பட்டம் சூட்டி விடுவர்.
தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆண்ட கட்சியினர், தம் குடும்பக் கட்டுப்பாட்டில் கட்சியைக் கையகப்படுத்தி, நாய்க்கு எலும்புத் துண்டு போடுவது போல ஒரு, 'அமவுன்ட்' ஒதுக்கி, பொருளாளர் பதவிக்கு வெளியாட்களை நியமிப்பர்; பொருளாளரும், தனக்கும், தன் வாரிசுக்கும் ஏதோ பதவி கிடைத்தால் போதும் என்று வாய்மூடி மவுனியாகி விடுவார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும், கார்ப்பரேட் கம்பெனிகளிடமிருந்து, கட்சி, 'ஓனர்'களுக்கு, கனகச்சிதமாக, கணிசத்துக்கும் அதிகமாகவே பணம் வந்து சேர்ந்து விடும். கம்பெனிகளின் லாப நஷ்டத்தைக் கண்காணிக்க, கட்சி தலைமையகத்தில் சிலர் பணிஅமர்த்தப்பட்டிருப்பர். இவர்களுக்கு மேல், 'வசூல் ராஜா கமிட்டி'யினர் இருப்பர்; யாரிடத்தில், எப்போது, எப்படி வசூலிப்பது என்று திட்டம் போட்டு தயாராக இருப்பர்.
வரும் பல்லாயிரக்கணக்கான ரூபாய், மனைவி மற்றும் மக்களுக்குத் தெரியாத, அறியாத நபர்களின், 'டிரஸ்ட்' பெயரில் போட்டு விடுவர். அளவற்ற கோடிக்கணக்கான பணத்தை, நிதி ஆலோசகர் மூலமாக, அதிக லாபம் ஈட்டும் பண்டுகளில் முதலீடு செய்து, பணத்தை இரட்டிப்பு செய்வர். மனைவி, மக்களின் பிறந்த நாள், கட்சிக் கூட்டம், தேர்தல் நேர செலவு, விளம்பரம், திரளும் மக்களுக்கு கைக்கூலி, உணவு என, டாம்பீகமாக செலவு செய்வதெல்லாம், இந்தப் பணத்திலிருந்து தான்!
வசூலிப்பு முறை
சிறிய சாலையோர கடைகள், கையேந்தி பவன்கள், ஐஸ்கிரீம் - ஜூஸ் - டீ - பழம் - காய்கறி விற்கும் சிறிய வியாபாரிகளிடம் மாதாந்திர வசூல் செய்வதை, கீழ்மட்ட, பகுதி வட்ட செயலர், மாவட்ட செயலரோடு பகிர்ந்து கொள்வர்
நகரில், பெரிய துணிக்கடை வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் தொகை, கட்சித் தலைமை வரை செல்லும்; இது அடிக்கடி நடக்கும்.
தேர்தல் காலங்களில், 100 முதல் 1,000 கோடி ரூபாய் வரையும், லாபத்தில் 8 சதவீதமும் நேரடியாக தொழிற்சாலைகளிலிருந்து வசூலித்து விடுவர். எதிர்க்கட்சிக்குத் தெரியக் கூடாது என்று கருப்புப் பணமும் பரிமாறப்படும். இதைத் தடுக்கத்தான் தேர்தல் பத்திரம் என்ற நடைமுறை ஏற்படுத்தப்பட்டது; சுப்ரீம் கோர்ட் அதற்கு தடை விதித்து விட்டது
அடுத்த கலெக் ஷன், அரசு ஊழியர் வேலை கேட்டு வருவோரிடமிருந்தும், பணியிட மாற்றம், பணி உயர்வு ஆகியவற்றுக்காக காத்திருக்கும் அரசு ஊழியர்களிடமிருந்தும் கிடைப்பது. இதைச் சொன்ன உடனே, அனைவருக்கும், சிறையில் இருக்கும் அமைச்சரின் உருவம், 'பளிச்'சென வந்து சென்றால், அதற்கு நான் பொறுப்பல்ல!
அடுத்த கலெக் ஷன், சாலை போடுவதற்கான கான்ட்ராக்ட் விடும்போது மொத்த தொகையில், 30 சதவீதம் கமிஷன். அரசியல்வாதிகள், தன் மனைவி, மக்கள் பெயரிலேயே உரிமம் வாங்கி, கான்ட்ராக்டர்களுக்கு அதை விற்று விடுவர்; கொள்ளை வசூல் போதை மருந்து தயாரிக்கும், வினியோகிக்கும் வியாபாரிகளிடமிருந்து வரும் பணம்.
ஆயுத வியாபாரிகளிடமிருந்து வரும் பணம்
எதிரி நாட்டு தீவிரவாதிகள், இங்குள்ள தன் சகாக்களை விடுவிக்க, இங்குள்ள கட்சிகளுக்கு பணத்தை வாரி இறைப்பதன் மூலம், வசூலாகும் லஞ்சம். இந்த விஷயத்தில் தான் திஹார் சிறையில் ஒரு வி.ஐ.பி., சமீப காலமாக அடைபட்டு கிடக்கிறார். வெளிநாட்டு அரசுகளுக்கு சாதகமாக எழுதுவதற்காக, காசு வாங்கும் பத்திரிகைகள், எழுத்தாளர்கள் என ஒரு கூட்டமும் உண்டு. எனவே, தேர்தல் என்றால், அரசியல் கட்சிகளுக்கு திருவிழா போல! வசூலிப்பு ஒரு பக்கம், வாக்காளர்களுக்கு அதிலிருந்து கிள்ளிக் கொடுப்பது ஒரு பக்கம்.
ஆக... அட்சய பாத்திரமான வசூலிப்பு பணத்தைப் பாதுகாக்க, வாரிசுகளை நம்பாமல், வேறு யாரை நம்புவது! வாழ்க வளமாக வாரிசு அரசியல்; வறண்டு போக மக்கள் வாழ்வு!
டாக்டர் சு.அர்த்தநாரி
இதய ஊடுருவல் நிபுணர்
தொடர்புக்கு
மொபைல்: 9884353288
இ- மெயில்: prabhuraj.arthanaree@gmail.com

