/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
முருகக் கடவுளின் அருமையும் பழநி மாநாட்டின் பெருமையும்!
/
முருகக் கடவுளின் அருமையும் பழநி மாநாட்டின் பெருமையும்!
முருகக் கடவுளின் அருமையும் பழநி மாநாட்டின் பெருமையும்!
முருகக் கடவுளின் அருமையும் பழநி மாநாட்டின் பெருமையும்!
PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, பழநியில் நடப்பதைப் போன்ற சிறப்பு, வேறு எங்கு நடத்தினாலும் இருக்காது; ஏனெனில் பழநியையும், முருகனையும் பிரிக்க முடியாது. பழநி முருகனின் சிறப்பு ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல!
நாரதர் கொடுத்த பழத்தை தனக்கு தராததால் தந்தை - தாய் மீது கோபித்துக் கொண்ட முருகன், மயில் மீதேறி, இத்தலம் வந்தார். இங்கு தான் முருகனையே, 'பழம் நீ' என வணங்கினார் அவ்வை; அதனாலேயே இத்தலம், 'பழநி' ஆனது.
இங்குள்ள மூலவர், நோய்களை தீர்க்கும் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட சிலை. அதை செய்தவர், போகர் என்ற சித்தர்.
முருகன், ஆண்டிக் கோலத்தில் காட்சி தருவதே ஒரு வாழ்க்கை தத்துவம் தான். தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல், தன்னை நாடி வருவோருக்கு அருளை வாரி வழங்கவே, ஆண்டிக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.
சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால், பழநி தலத்தில், வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
அவசிய மாநாடு
முருகக் கடவுளுக்காக மாநாடு நடத்தப்படுவது அவசியம். ஹிந்துக்களின் வாழ்க்கை இயலோடு இரண்டறக் கலந்துள்ள முருகனுக்கு, தமிழகத்தில் மாநாடு நடத்தப்படுவது, மேலும் சிறப்பு.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த மாநாட்டை நடத்தினால், இன்னும் சிறப்பாக இருக்கும். ஹிந்துக் கடவுள் முருகனுக்கு, தமிழகத்தில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் முருகன் மாநாட்டை நடத்த முயற்சி எடுக்க வேண்டும்.
ஏனென்றால், உத்தரகண்டிலும் முருகனுக்கு கோவில் அமைந்துள்ளது. தந்தையிடம் பழம் பெற, கைலாயத்தை விட்டுக் கிளம்பிய முருகன், உத்தரகண்ட் வழியே, பழநி வந்ததாகச் சொல்லப்படுகிறது. உத்தரகண்டில் அவருக்கு கோவில் எழுப்பப்பட்டுள்ளது; அங்கு அவர், கார்த்திக் சுவாமி என்றுஅழைக்கப்படுகிறார்.
முருகனின் புகழ்
பஞ்சகலா, பஞ்சபிரம்ம, ஷடங்க, சம்மிதா, மயில் மந்திரங்கள் முருகப்பெருமானுக்கு உரிய மந்திரங்கள்.
குறிஞ்சி நிலக்கடவுளாக போற்றப்படும் அவன், கங்கையால் தாங்கப்பட்டதால் காங்கேயன்; சரவணபொய்கையில் உதித்ததால் சரவணபவன்; கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டால் கார்த்திகேயன்; சக்தியின் ஆறு உருவமும் ஓர் உருவமாய் ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் பெற்றான்.
சென்னையை அடுத்த ஆசியவியல் கல்வி நிறுவனம், தமிழக வரலாற்று ஏடுகளை கொண்டும், பல்வேறு சான்றுகளைக் கொண்டும், முருகப் பெருமான் பற்றி பலகோண ஆய்வுகளை நடத்தியுள்ளது.
தமிழர்கள் மலேஷியா, பசிபிக், சிெஷல்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளுக்கு குடிபெயர்ந்து, முருகனை அங்கே கொண்டு சென்று பூஜித்து, வணங்கி வருகின்றனர். அந்த வகையில், இலங்கை, கதிர்காமம் முருகன் கோவில்; யாழ்ப்பாணம், நல்லுார் கந்தசாமி கோவில்; மலேஷியா, அருவிமலைக் கோவில், பத்துமலை சுப்ரமணிய சுவாமி கோவில்.
சிங்கப்பூர் வேல்முருகன் கோவில்; ஆஸ்திரேலியா, சிட்னி முருகன் கோவில், வடஅமெரிக்கா முருகன் கோவில், தென்னாப்ரிக்கா, டர்பன் சிவசுப்ரமணியர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். சில வட மாநிலத்தவருக்கு, பிள்ளையாரின் தம்பி முருகன் என்பது தெரியாமல் இருப்பதால், முருகக் கடவுளுக்கு நாடு முழுதும் மாநாடு நடத்தினால் சிறப்பாக இருக்கும்; மற்ற மாநிலத்தவர்க்கும், தமிழர் பண்பாடு பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
தினையின் பெருமை
சிறு தானிய வகையான தினை, முருகனுக்கு மிகவும் பிடித்த தானியம். வள்ளியிடம் தினை வாங்கி கேட்டு சாப்பிட்டவர் முருகன். தேனும், தினை மாவும் கலந்து முருகனுக்குப் படைப்பது தமிழர் வழக்கம்.
சிறு தானியங்கள் ஆரோக்கியத்துக்குச் சிறந்ததாகக் கருதப்படுவதால், முருகன் மாநாடு வழியே, நாடு முழுதும் ஆரோக்கியத்தையும் சிறப்பாக மேம்படுத்த வழிவகை செய்யலாம்.
சதுர்த்தி விழா போல...
மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்தில் இருந்தே, விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்பட்டு வருகிறது.
பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் விநாயகர் வழிபாடு தொடர்ந்தது. பின், மஹாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறியது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்தனர். சுதந்திர போராட்டக் காலத்தில், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர், பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக விநாயகர் சதுர்த்தியை மாற்றினார்.
அதன் பிறகு, வடமாநிலங்களில் மட்டுமின்றி தென்மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இருந்தும் வடமாநிலத்தவர்களுக்கு விநாயகரைத் தெரிந்த அளவிற்கு, அவரது சகோதரரான முருகனைத் தெரியவில்லை. அவர்களை எல்லாம், இந்த மாநாடு முருகனிடம் அழைத்துச் செல்லும்.
இவ்வளவு பிரசித்தி பெற்ற முருக பெருமானின் பெருமைகளை உலகிற்கு பறைசாற்றும் வகையில், அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் இன்றும், நாளையும் ஹிந்து சமய அறநிலையத்துறையால் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் பக்தர்களை கவரும் வகையில் வேல் அரங்கம், அருள்தரும் அறுபடை முருகனின் மூலவர் காட்சிகள், மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்பு புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை யாவும் முருக பக்தர்கள் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தாக அமையும்.
அமைச்சர் சேகர்பாபு இம்மாநாடு தனித்துவம் பெற வேண்டும் என்பதற்காக அவரது தலைமையில், 16 ஆய்வுக் கூட்டங்களும், மற்ற அமைச்சர்களுடன் இணைந்து பழநியில் மாநாட்டு பணிகளை நான்கு முறை களஆய்வும் செய்துள்ளார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரு முறை அனைத்துத் துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டமும் நடத்தப்பட்டது.
அமைதி ஓங்கும்
முத்தமிழ் முருகன் மாநாட்டை ஒரு துவக்கமாகக் கொண்டு ஒவ்வொரு படை வீட்டிலும் தொடர்ந்து நடத்துவதோடு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் எப்படி திருக்கல்யாணத்தை ஒவ்வொரு மாநிலமாக நடத்துகிறதோ, அது போல தமிழக ஹிந்து அறநிலையத்துறை, ஒவ்வொரு மாநில தலைநகரிலும், முருகன் புகழ் பரப்பும் விழாவை நடத்த வேண்டும்.
இந்த மாநாட்டை அரசியல் பார்வையில் பார்க்கக் கூடாது. ஒரு நல்ல விஷயம் நடக்கும்போது அதில் சில குறைகள் இருக்கலாம். அதைப் பெரிதுபடுத்தாமல், மாநாடு நடத்தப்படுவதன் நல்ல நோக்கத்தைத் தான் பார்க்க வேண்டும். அப்படி நடந்தால், தமிழகத்தின் பெருமையும், புகழும் மற்ற மாநிலங்களிலும் பரவும்.
ஹிந்து சமய அறநிலையத் துறை தான் மாநாட்டை நடத்துகிறது. அரசோ, தி.மு.க.,வோ இதில் சம்பந்தப்படவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதுபோன்ற மாநாடு நடப்பதால் நாட்டில் நல்ல எண்ணமும், ஆன்மிக சிந்தனையும் பெருகும்; பக்தி இலக்கியம் வளரும்; தீய பழக்கங்களில் இருந்து மக்கள் விடுபடுவர்.
ஆன்மிக சிந்தனை அதிகரித்தால் குற்றங்கள் குறையும்; சமுதாயத்தில் சமாதானம் ஏற்படும்; எங்கு சமாதானமும் அமைதியும் நிலவுகிறதோ, அங்கு தான் வளர்ச்சியும் இருக்கும்.
பரவட்டும் முருகன் புகழ்!
கிடைக்கட்டும் முருகன் அருள்!!
எல்.ஆதிமூலம்
தக்கார்
வடபழநி ஆண்டவர் திருக்கோவில்
வடபழநி, சென்னை.