/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
திருவள்ளுவர் - திருக்குறள் சில சிந்தனைகள்
/
திருவள்ளுவர் - திருக்குறள் சில சிந்தனைகள்
PUBLISHED ON : மே 24, 2024 12:00 AM

வைகாசி மாதம் வரும் அனுஷ நட்சத்திரத்தில் திருவள்ளுவர் பிறந்த தினமாகவும், மாசி உத்திரம் முக்தியடைந்த நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. சென்னை, மயிலாப்பூர் வள்ளுவர் கோவிலில் வைகாசி அனுஷ நட்சத்திரம் அன்று, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. வள்ளுவர் பிறந்த தின வழிபாடு பன்னெடுங்காலமாக மயிலாப்பூர் கோவிலில் நடைபெற்று வருகிறது. மயிலாப்பூர், நாட்டு சுப்பராயன் தெருவை ஒட்டி இக்கோவில் அமைந்துள்ளது.
கடந்த, 1812ல் திருக்குறள் மூலப்பாடம், முதன் முதலில் அச்சேறியது. அனைத்து சுவடிகளையும் ஆராய்ந்து இந்தப் பதிப்பானது வெளியானது. நெல்லை தாமிரபரணி நதிக்கரையில், பிழை திருத்தம் செய்யப்பட்டதாக அறிய முடிகிறது.
திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் திருக்குறளின் மூலப் பாடத்தைச் செப்பனிடுவதில் முக்கிய பங்கு ஆற்றி இருக்கிறார் என்பதையும் உணர முடிகிறது.
தொண்டை மண்டலம், சென்னை பட்டணத்தில் தஞ்சை நகரம் மலையப்ப பிள்ளை குமாரன் ஞானபிரகாசனால் அச்சில் பதிப்பிக்கப்பட்டது. மாசத் தினசரிதை அச்சுக்கூடம் எனவும் முன்னுரையின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இப்பதிப்பே திருக்குறள் பதிப்பு வரலாற்றில், முதல் நுாலாகத் திகழ்கிறது.
திருவள்ளுவ மாலையில், வள்ளுவரை, திருமாலாகவும், பிரம்ம தேவராகவும், கற்பக விருட்சமாகவும் பல புகழ் மாலைகள் சூட்டப்பட்டுள்ளன.
அவ்வையார், திருக்குறளை திருவாசகத்துடனும், திருமந்திரத்துடனும் ஒப்பிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகண்டுகளில், காலத்தால் முந்தைய திவாகர நிகண்டின் முதல் நுாற்பாவில், 'அருக தேவனின்' பெயர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பெயர்களில் 'பகவன்' என்ற பெயரும் இடம் பெறுகிறது. பகவன் என்றால் சூரியன் என்ற பொருளும் உண்டு!
ஆதிசங்கரர், சூரிய வழிபாடு, கணபதி வழிபாடு, முருகன் வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு ஆகிய ஆறு வழிபாடுகளையும் இணைத்து, ஷண்மதத்தை உருவாக்கினார் என்பதை நினைவு கொள்வோம்.
ஆகவே, ஹிந்து கலாசாரத்தில் சூரிய வழிபாடு, சூரியநமஸ்காரம் போன்றவை பன்னெடுங்காலமாக இருந்துள்ளன.
'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு' என்ற இக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் ஆதி, பகவன் என்பதும், அகர முதலோன் என்பதும் சிவனையே குறிக்கும் என்பது தான், தமிழ் இலக்கியங்கள் நமக்குத் தரும் செய்தியாக உள்ளது.
'அகார முதலா யனைத்துமாய் நிற்கும்
உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும்
அகார வுகாரம் இரண்டு மறியில்
அகார வுகாரம் இலிங்கம தாமே'
- திருமந்திரம்.
பொருள்: உலகுடல் உயிர்களுக்குத் தாங்கும் நிலைக்களனாக நிற்பவன் சிவன். அந்த அடையாளம், அகரத்தால் குறிக்கப் பெறும். அதனால் அகரமுதலாய் அனைத்துமாய் நிற்கும் என்றருளினார். அவை இயங்குமாறு இயைந்தியக்கும் திருவருளாற்றல் சிவன்.
அவ்வியக்கத்தை உயிர்ப்பு என அருளினர். இவ்வடையாளம் உகரமாகும். அகர உகரமாகிய இவ்விரண்டுமே 'சக்தியும் சிவமுமாய தன்மையில் வுலகமெல்லாம்' என்னும் செம்பொருட்டுணிவின் மெய்மையாகும். இவற்றை உணர்ந்தால் அகரவுகரமே சிவலிங்கம் என்பது புரியும். அதாவது இங்கே திருமூலர் அகர முதல்வனாக சிவபெருமானைக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவு.
'அகர வுயிர்போ லறிவாகி வெங்கும்
நிகரிலிறை நிற்கும் நிறைந்து'
-- உமாபதி சிவாச்சாரியார்.
அதாவது அகரமாகிய உயிர் எழுத்துகள் எல்லாவற்றினும் பொருந்தி நின்றாற் போலத் தனக்கோர் உவமனில்லாத் தலைவன், உலகுயிர் முழுதும் ஒழிவற நிரம்பி ஞானவுருவாய் அழிவின்றி நிலைபெறும் என்க என்று அகரத்தை உவமையாக்குகிறார்.
டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் எழுதிய பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலின் அடிப்படையில் திருநாவுக்கரசரின் காலம் பொது யுகம் (பொ.யு) 575 - -656 என்றும், திருஞானசம்பந்தர் காலம், 638 - -654 என்றும் எடுத்துக் கொண்டால் திவாகரம் மற்றும் பிங்கல நிகண்டுகளுக்கு முன்பே சிவபெருமானை திருவள்ளுவர் அழைத்ததுபோல் அகரமுதலோன் என்று அழைத்துள்ளனர் என்று தெரிய வருகிறது. சிவனடியார்கள் அகரமுதலோன் என்று தொழுதுள்ளனர்.
உமாபதி சிவாச்சாரியார் அவரின் நெஞ்சுவிடு துாதில், திருவள்ளுவரை அவரின் இப்பெயர்கொண்டு அவரின் திருப்பதிகங்களில் பாடியிருப்பது போல் வேறெந்த சமயத்தாரும் திருவள்ளுவருக்கு இத்தகு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.
இந்நுால், ஏறக்குறைய 2,000- ஆண்டுகள் பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழகத்தில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31, ஆண்டுகளை கூட்ட வேண்டும்.
இவர் இயற்றிய திருக்குறளின் அடிப்படையில், அவர் தாய் பெயர் ஆதி என்றும், தந்தையார் பெயர் பகவன் என்றும் கூறுவோர், பலர் உள்ளனர். இவர் வாசுகி என்பவரை மணந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான திருக்கல்யாண உற்சவம், மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவிலில் சித்திரா பவுர்ணமியன்று நடத்தப்படுகிறது!
இங்கு இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடத்தப்படும் அறுபத்து மூவர் திருவிழாவின்போது திருவள்ளுவர் கோவிலில் இருந்து திருவள்ளுவர் உற்சவமூர்த்தியும், வாசுகி அம்மையாரும் மயிலை மாட வீதியில் உலா வருவர்.மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் பொ.யு., முன் 300-க்கும் பொ.யு., 250-க்கும் இடைப்பட்டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது.
மதுரையில் இருந்த தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ய வள்ளுவர் சென்றிருக்கிறார். புலவர்கள் அவருக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. அதை எதிர்த்து தன் நுாலை சங்கப் பலகையின் மேல் வைத்தாராம். அப்பலகை, மற்ற புலவர்களை பொற்றாமரை குளத்தில் தள்ளிவிட்டு, திருக்குறளை மட்டும் ஏற்றுக் கொண்டதாம். குறள் அரங்கேற்றம் காண அவ்வையாரும், நக்கீரரும் உதவியுள்ளதாக ஒரு கதையும் நிலவுகிறது!
முப்பால்
பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நுால்களின் வரிசையில் 'முப்பால்' என்னும் பெயரோடு திருக்குறள் விளங்குகிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் 'முப்பால்' எனப் பெயர் பெற்றது.
முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் 'இயல்' என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகிறது. ஒவ்வொரு அதிகாரமும், 10 பாடல்களை தன்னுள் அடக்கியது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நுாலும் ஒரே நுாலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் 'குறள்' என்றும், 'திருக்குறள்' என்றும் இது பெயர் பெற்றது.
வள்ளுவரின் பிறப்பிடம் ஒரு விவாதத்திற்குரிய இடமாகவே இருந்து வருகிறது. வள்ளுவரின் கோவில் சென்னை மயிலாப்பூரில் இருப்பதால், அதை அவரின் பிறப்பிடமாக ஒருசிலர் கூறுவதும் உண்டு.
'உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கச் சென்ப இப்பக்கம்
மாதாநுபங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற் கூடற் கச்சு'
என்று கூறும் திருவள்ளுவ மாலையிலே வரும் பாடலுக்கு உபகேசியை மணந்த கண்ணபிரான் வடமதுரைக்கு அச்சு ஆவார். அதுபோல் திருக்குறள் படைத்த மாதாநுபங்கியும் செந்நாப் போதருமாகிய திருவள்ளுவர், தென்மதுரைக்கு அச்சு ஆவர் என்று கூறி, வள்ளுவர் பிறந்த இடம் மதுரை என்பர். இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய சொல், 'புனற் கூடல்!'
புனற் கூடல் என்பது, பக்றுளியாறும் முக்கடல் நீரும் ஒன்று சேரும் இடம் என்பதனையே குறிக்கும். மேலும் மதுரை மாநகரை 'கூடல்' என்று திருமுருகாற்றுப்படையும், 'நான்மாடக் கூடல்' என கலித்தொகையும் குறிப்பிடுகின்றன. மதுரையை, 'புனற்கூடல்' என்று இலக்கியமோ, கல்வெட்டோ அழைக்கவில்லை.
வள்ளுவன் கோடு
வள்ளுவர் பிறந்தது தென்மதுரையாகிய குமரி மாவட்டம் அல்லது கடல் கொண்ட தென்குமரியின் புதைந்த மாநிலமாகவும் இருக்கலாம் அல்லது இன்றைய கன்னியாகுமரியாகவும் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இன்றைய மயிலை, 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் அடர்ந்த வனமாகவே இருந்துள்ளது. தன் கடைசி காலத்தில் வள்ளுவர் அமைதி தேடி அங்கு சென்று மடிந்திருக்கலாம்.
உக்கிரபாண்டிய மன்னனின் சபையில் தான் திருக்குறள் அரங்கேறியதாக வாய்மொழிச் செய்திகள் உண்டு. இது உண்மையாகின் அது உக்கிரபாண்டிய மன்னனின் கபாடபுரத்தையோ அல்லது தென்மதுரையையோ தான் குறிப்பிடும். தற்போதைய கூடல் மாநகராகிய மதுரையை அல்ல என்பதை நாம் அறிதல் வேண்டும்.
குமரி மாவட்டம், பண்டைய மலைநாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால் 'கோடு' என்ற சொல்லை ஈற்றாகக் கொண்ட திருவிதாங்கோடு, மேலாங்கோடு, ஆதங்கோடு, குமரிக்கோடு, விளவங்கோடு போன்று ஐம்பதிற்கும் மேற்பட்ட ஊர்களை இங்கு காணலாம். வள்ளுவன் கோடு என்ற ஊரே இன்று விளவங்கோடு என்று திரிந்திருக்க வேண்டும் என்று கருதுபவர்களும் உண்டு.
வள்ளுவர், நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியாகிய வள்ளுவ நாட்டைச் சார்ந்தவரென்றும், இவரும், நாஞ்சில் வள்ளுவனும் ஒரே குலத்தில் உதித்தவர்கள் என்று கூறுபவர்களும் உண்டு.
நாஞ்சில் நாட்டையும், அதனை ஆண்ட வள்ளுவனின் சிறப்பையும் ஐந்து புறநானுாற்றுப் பாடல்கள் கூறுகின்றன. ஒருசிறைப் பெரியனார், மருதன் இளநாகனார், அவ்வையார், கருவூர் கதப்பிள்ளை போன்ற சங்கப் புலவர்களும் நாஞ்சில் நாட்டையும் அதனை ஆண்ட வள்ளுவனையும் பற்றி பாடியுள்ளனர். சிலம்பம், சோதிடம், வைத்தியம், போன்ற துறைகளில் நாஞ்சில் நாட்டு மக்கள் சிறந்து வந்துள்ளனர்.
வள்ளுவ நாட்டு முட்டத்தை அடுத்துள்ள திருநாயனார் குறிச்சி தான் திருவள்ளுவர் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. வள்ளுவ நாட்டின் ஆட்சித்தலைவராக திகழ்ந்த வள்ளுவர்; மகாவீரர், புத்தர் போன்று அரச பதவியைத் துறந்து துறவியாக மாறி அறநெறிக் கருத்துகளை மக்களிடையே பரப்ப உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்தருளினார் என்றும், மன்னனாக இருந்து துறவியாக மாறிய காரணத்தால் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனத் திருக்குறளை வகுத்தமைத்தார் என்று கருதுபவர்களும் இருக்கின்றனர்.
டாக்டர் உ.வேசாமிநாதைய்யர் தம் 'என் சரிதம்' என்ற நுாலில், தான் பெருங்குளத்திலுள்ள செங்கோல் மடத்தில் தங்கியபோது மடாதிபதி தன்னை பெருங்குளத்து சிவாலயத்திற்கு அழைத்துச் சென்றதையும், அங்கே உக்கிரபாண்டியர் அரசாட்சி செய்து சிவபெருமானை பூசித்தமையால் அவ்வூர் சிவபெருமானுக்கு உக்கிரவழுதீசுவரர் என்ற திருநாமம் வழங்குகிறதென்றும், அந்த பாண்டியர் முன்னிலையில் அவ்வையார், நக்கீரனார் முதலிய சங்கப் புலவர்கள் கூடிய இடத்தில் திருக்குறள் அரங்கேற்றம் நடைபெற்றது என்றும் அதற்கு அடையாளமாக சிவாலயத்தில் 49 புலவர்களின் வடிவமும், உக்கிரபாண்டியர் வடிவமும் உண்டு என்றும் கூறியுள்ளார்.
திருவள்ளுவர் உக்கிரப்பெருவழுதி காலத்தவர் என்று, சென்னைப் பல்கலைக்கழக சார்பில் பதிப்பித்த 'திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும்' என்ற நுாலின் முன்னுரையில் எஸ்.வையாபுரி பிள்ளை குறிப்பிடுகிறார்.
வைகாசி அனுஷம் - திருவள்ளுவர் ஜெயந்தி, தை இரண்டாம் நாள் - திருவள்ளுவர் தினம், மாசி உத்திரம் - திருவள்ளுவர் குருபூஜை இந்த மூன்று நாட்களிலும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் நினைத்து விழா எடுப்போம்.
விழா எடுப்பதோடு நின்று விடாமல் திருவள்ளுவர் சொன்ன திருக்குறள் பாதையில் அதாவது, தர்மத்தின் வழியில் நடப்பது தான் திருவள்ளுவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய உபகாரம் ஆகும்.