sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

சிந்தனைக் களம்

/

நல்லகண்ணு என்ற மாமனிதர்!

/

நல்லகண்ணு என்ற மாமனிதர்!

நல்லகண்ணு என்ற மாமனிதர்!

நல்லகண்ணு என்ற மாமனிதர்!


PUBLISHED ON : பிப் 28, 2026 05:11 PM

Google News

PUBLISHED ON : பிப் 28, 2026 05:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாமிரபரணி நதிக்கரையில் சைவமும், வைணவமும் தழைத்தோங்கும் ஒரு சிறிய ஊர் ஸ்ரீவைகுண்டம். இது நவதிருப்பதிகளில் ஒன்று. ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் அவதரித்த திருத்தலமும்கூட.

இந்த ஊரில் வறுமைக்கும், வளமைக்கும் இடைப்பட்ட குடும்பத்தில் பிறந்தவர் தோழர் நல்லகண்ணு. இவர் 1925ம் வருடம் டிசம்பர் 26ம் தேதி பிறந்தவர். டிசம்பர் 26ம் தேதிதான் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜனன தினம். நூறு வயதைத் தொட்டு மறைந்த பெருந்தலைவர்களில் எனக்குப் பழக்கமான மூவரில் இவர் ஒருவர். மற்ற இருவர் நீதிமான் வி.ஆர். கிருஷ்ணய்யர், துணை வேந்தர் சை.வே.சிட்டிபாபு.

வருடம் 1984 தீபம் நா. பார்த்தசாரதியின் அறிவுரையின் பேரில் தென்னிந்திய மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் என்ற அமைப்பை நானும் மொழி பெயர்ப்பாளர் குறிஞ்சிவேலனும் தொடங்க முனைந்தோம். முதல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. ஆறு பேர்தான் கூடியிருந்தோம். அவர்களில் ஒருவர் சி.ஏ. பாலன் என்கிற கம்யூனிஸ்ட் தோழர். இன்னொருவர் சோவியத் நாடு பத்திரிகையின் ஆசிரியர் தி.க. சிவசங்கரன். சி.ஏ. பாலன் சாகித்ய அகடமியின் பரிசு பெற்ற நா.பாவின் 'சமுதாய வீதி' என்ற நாவலை மலையாளத்தில் மொழிபெயர்த்தவர்.

அடியேன், அதே நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவன். அன்று கன்னடம், தெலுங்கு சார்ந்த எழுத்தாளர்கள் வராததனால் சங்க அமைப்புக் கூட்டத்தை ஒத்தி வைத்தோம். கூட்டத்தின் நிறைவில் தி.க.சியும், சி.ஏ. பாலனும் நல்லகண்ணுவை சந்திக்கச் சென்றார்கள். நானும் குறிஞ்சிவேலனும் சென்றிருந்தோம். அதுதான் முதல் சந்திப்பு.

அரசியல் வழியில் கம்யூனிஸ்ட் சிந்தாந்தத்திற்கு எதிரான முதலாளித்துவ நாட்டு அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும் இலக்கிய வழியில் எனக்கு நிறைய கம்யூனிஸ்ட் நண்பர்கள் உண்டு. இன்றும் அப்படித் தொடர்பில் இருப்பவர்கள் நெய்வேலி பாலு, ஜி. ராமகிருஷ்ணன் மற்றும் கே. பாலகிருஷ்ணன்.

அப்பொழுது நல்லகண்ணுடனான சந்திப்பு வெறும் சம்ப்ரதாய அறிமுகமே. அவர் கட்சி வேலையாக வெளியே செல்ல வேண்டியிருந்ததால் நாங்கள் அவரிடம் அதிக நேரம் பேச முடியவில்லை. அடுத்த சந்திப்பும் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியபோது நடந்தது. அது சோவியத் யூனியன் உடைந்து பிரிந்த காலம்.

கோர்பசேவிற்கு தூண்டில் போட்டு சோவியத் யூனியனை அமெரிக்கா கலைத்தது என்ற பேச்சு பரவலாக இருந்த சமயத்தில் சில பத்திரிகையாளருடன் சேர்ந்து நல்லகண்ணுவைச் சந்தித்தேன். அப்பொழுது அவர் சொன்ன வார்த்தைகள்: ''இது ஒரு சர்வதேச வரலாற்றுப் பிழை, உடைப்பது எளிது, ஒட்டுவது சிரமம்''. சரியாகத்தான் சொன்னார். அப்போதும்கூட நான் நல்லகண்ணுவுக்கு வெளி நபர்தான்.

அடுத்து நிகழ்ந்த சந்திப்பு சற்றும் எதிர்பாராதது. ஸ்ரீவைகுண்டம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தன் 125வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சமயத்தில் ஒரு மலர் வெளியிடப்பட்டது. முன்னாள் மாணவன் என்ற முறையில் பள்ளித் தலைமை ஆசிரியர் என்னையும் ஒரு கட்டுரை எழுதக் கேட்டிருந்தார். நான் சற்று தாமதமாகக் கட்டுரையை அனுப்பி வைத்தேன்.

''ஒரு ஞான ஆலயத்தின் பிரதான தெய்வங்கள்'' என்ற தலைப்பில் பள்ளியின் ஆசிரியர்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தேன். என் கட்டுரை அங்கு சேர்வதற்குள் மலர் அச்சிடப்பட்டுவிட்டது. இருந்தாலும் எல்லா ஆசிரியர்களைப் பற்றிய விவரமான கட்டுரை என்பதனால் அதை பள்ளி நிர்வாகம் தனியாக அச்சிட்டு மலருடன் சேர்த்துக் கொடுத்தது.

நல்லகண்ணு சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்திற்கு அவ்வவ்போது சென்று வருவது வழக்கம். அப்படி ஒரு முறை சென்றபோது அந்தச் சிறு புத்தகம் அவர் கண்ணில்பட்டிருக்கிறது. அதைப் படித்துப் பார்த்த அவர் தலைமை ஆசிரியரிடம் இவரைப் பார்த்திருக்கிறேனே, இவர் நம் பள்ளி மாணவரா என்று கேட்டிருக்கிறார். நல்லகண்ணு நம் பள்ளி என்று கேட்டதற்குக் காரணம் அவரும் அதே பள்ளியில் படித்தவர்தான். அந்தப் பள்ளியின் அப்போதைய பெயர் 'காரனேஷன்' உயர்நிலைப்பள்ளி.

ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவை ஒட்டி பள்ளிக்கூடத்திற்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. அடுத்த சில வருடங்களில் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் பள்ளிக்கூட நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பள்ளிக்கூடத்தின் பெயர் 'குமரகுருபர ஸ்வாமிகள் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி' என்று மாறியது. இப்பள்ளியில் 1943- 1944 ல் எஸ்.எஸ்.எல்.சி படித்து முடித்தவர் நல்லகண்ணு. அதாவது நான் பிறப்பதற்கு முன்று ஆண்டுகள் முன்னதாகவே.

சென்னை திரும்பிய நல்லகண்ணு அந்தச் சிறு புத்தகத்திலிருந்த தொலைபேசி எண்ணை வைத்துக் கொண்டு என்னைத் தொடர்பு கொண்டார் (அப்போது செல்போன் வசதியில்லை). ''ஐயா நேரம் கொடுங்கள், நான் வந்து சந்திக்கிறேன்'' என்று சொன்னேன். அதன்படி அவரைச் சந்தித்து பள்ளிக்கூடம் பற்றியும் பள்ளிக்கூட ஆசிரியர்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் படித்து முடித்த பிறகு அந்தப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் பற்றி அவருக்கு அதிகம் தெரியவில்லை.

ஆனால் நாங்கள் 'பெரிய தமிழ்ப் பண்டிட்' என்று அழைத்து வந்த குழந்தைவேல்சாமி பிள்ளை அவர்களை நினைவுகூர்ந்தார் (அந்த தமிழாசிரியர் உ.வே. சாமிநாத ஐயரின் நேரடி மாணவர்). அவருக்கு ஓய்வு வயதே நிர்ணயிக்காமல் பள்ளிக்கூடம் தொடர்ந்து பணியில் வைத்துக் கொண்டிருந்தது.

எம்.கே. சுப்ரமணியன் என்ற எங்கள் தமிழாசிரியர் பற்றியும், கணித ஆசிரியர் ஏ. சுப்ரமணியன் பற்றியும் நல்லகண்ணு பேசினார். ஏனென்றால் அவர்கள் கம்யூனிஸ்டுகள். அவர் அந்த ஊரின் முக்கிய கம்யூனிஸ்ட் பிரமுகரான முத்தையாவின் இளைய சகோதரர். அது திமுக அதிகம் வளர்ந்திராத காலம். அப்போது ஸ்ரீவைகுண்டத்தில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு அதிகமாக இருந்தது.

முத்தையா நீதிமன்றத்திற்கு எதிரே ஒரு சிறு கட்டிடத்தில் சிறிய இலவச வாசகசாலை வைத்திருந்தார். அதில் நாளேடுகளும், வாரபத்திரிகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அது எப்போதும் திறந்திருக்கும், பொறுப்பாளர் யாருமில்லை. ஊர் மக்கள் தாமாகவே வந்து படித்துவிட்டு அங்கேயே பத்திரிகைகளை மடித்து வைத்துவிட்டு போவார்கள்.

மாணவர்களை சந்திக்கும்போதெல்லாம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வாசக சாலைக்கு மாணவர்களை அழைப்பார் முத்தையா. ஒருநாள் நான் அந்த வாசக சாலைக்குச் சென்றபோது தமிழாசிரியர் எம்.கே. சுப்ரமணியனும், கணித ஆசிரியர் ஏ. சுப்ரமணியனும் (ஏட்டிக்குப் போட்டி என்ற நூலை எழுதியவர்), நல்லகண்ணுவைச் சந்திக்க வாசக சாலையில் காத்திருந்தார்கள். அப்போது நல்லகண்ணுவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அவர் ஒரு கம்யூனிஸ்ட் பிரமுகர் என்பதைத் தவிர. அவர் எங்கள் பள்ளியின் மூத்த முன்னாள் மாணவர் என்பது பிறகுதான் தெரிய வந்தது. எங்கள் வயது இடைவேளி ஒரு தலைமுறை.

நல்லகண்ணு மறைந்த தினத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பள்ளியில் அவருக்காக ஒரு அஞ்சலிக் கூட்டம் நடந்தது. அவரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை சூட்டப்பட்டது. மறுநாள் பள்ளிக்கூடத்திற்கு துக்க விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொதுவாக நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் மறைந்தாலோ அல்லது தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் யாராவது மறைந்தாலோ துக்கம் அனுசரிப்பது மரபு. ஆனால், எண்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு படித்த ஒரு மாணவருக்காக துக்க விடுமுறை அளிக்கப்பட்டது. இதுவே பள்ளிக்கூட வரலாற்றில் முதல் முறை என்று நினைக்கிறேன்.

நான்கு வருட காலம் மட்டுமே ஸ்ரீவைகுண்டத்தில் வசித்தேன் என்று நல்லகண்ணுவிடம் சொன்னபோது அவர் என் தந்தையைப் பற்றியும், உறவினர்கள் பற்றியும் கேட்டார். அப்போது பள்ளிக்கூடத்தை அந்தக் காலத்தில் தொடங்க ஏற்பாடுகள் செய்தவர்களில் ஒருவரான வக்கில் சுப்பையர் அவர்களின் புதல்வரும் வக்கீலுமான ராஜாங்கம் ஐயர் பற்றியும் பேச்சு வந்தது. ராஜாங்கம் ஐயர், மகாகவி பாரதியாரின் மைத்துனி மகளான கோமதி என்கிற தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, ஆங்கிலம் என்றபடி நான்கு மொழிகளும் அறிந்திருந்த ஒரு ஞானப் பெண்மணியின் கணவர்.

அப்போது நல்லகண்ணு சொன்னார், ''ராஜாங்கம் ஐயரின் கல்விப் பணிதான் உங்களுக்குத் தெரியும், விவசாய சங்கத் தலைவர் என்கிற முறையில் அவர் விவசாயிகளுக்கு இரக்க உணர்வுடன் உதவி வந்ததை நான் அறிவேன்''. அதற்கு நல்லகண்ணு சொன்ன காரணம் ஒரு வருட, இரண்டு வருட இடைவெளியில் விவசாயிகள் நிலத்தை அடகு வைத்துத்தான் உழவு, நடவு வேலைகளைச் செய்வார்கள்.

நிலத்தின் பத்திரங்களை அந்த விவசாயிகளிடம் பத்திரமாக வைத்துக் கொள்ள முடியவில்லை. அது கசங்கியிருக்கும், மடிந்திருக்கும், ஓரம் கிழிந்திருக்கும். அந்தக் காலகட்டத்தில் ராஜாங்கம் ஐயர்தான் நில அடமான வங்கியின் தலைவர். வேறு யாரேனும் இருந்தால் அந்தப் பத்திரங்களை பிணையாக ஏற்கத் தயங்கியிருப்பார்கள். ஆனால் ஐயர் அதை வாங்கி செலபோன் தாளில் ஒட்டி ஏதாவது நோட்டுப் புத்தக அட்டையில் வைத்து பத்திரமாகக் கொடுத்து அனுப்புவாராம்.

நல்லகண்ணுவிடம் சாதி காழ்ப்புணர்வு இருந்ததில்லை. பாராட்ட வேண்டியவர்களைப் பாராட்டியிருக்கிறார். பொது பிரச்சனை என்றால் அவர் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்குவார்.

தாமிரபரணியின் குறுக்கே அமைந்த ஸ்ரீவைகுண்டம் பாலத்தின் மதகுகளின் தெற்குப் புறம் உள்ள மணலை மணல் கொள்ளையர்கள் குவியல் குவியலாக கடத்திச் சென்றபோதெல்லாம் இரண்டு திராவிடக் கட்சிகளும் வாய் திறக்கவில்லை. கட்சிகளுக்கான கவனிப்பு அப்படி! அதனால் மணல் கொள்ளை தொடர்ந்தது. அப்போது அதை எதிர்த்து ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு போராட்டம் நடத்தினார் நல்லகண்ணு. அதற்காக மேடையில் தன்னுடன் சேர்ந்து குரல் கொடுக்க அவர் அழைத்தது ஆர்.எஸ்.எஸ் பிரமுகராகிய வேலுஜி என்பவரையே. விமானப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வேலுஜி ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த ஆழ்வார் திருநகரியில் 'மாளவியா வித்யா கேந்திரம்' என்ற தொடக்கப் பள்ளியை லட்சியப்பிடிப்புடன் நடத்தி வருகிறார்.

போராட்டத்தினத்தன்று மேடையில் வேலுஜியை வைத்துக் கொண்டு பேசிய நல்லகண்ணு, ''வேறு தளங்களில் நானும், வேலுஜியும் எதிரெதிர் முகாம்கள் ஆனால் பொதுநலனில் ஒன்றுபடுகிறோம், மணல் கொள்ளைத் தடுப்புப் போராட்டம் அதில் ஒன்று, அப்போது நல்லகண்ணு பேசியது: இங்கு கூடியுள்ள இளைஞர்களே, மாணவர்களே இயற்கை வளம் இப்படி சுரண்டப்பட்டால் எதிர்காலத்தில் இந்த நிலம் விவசாயத்திற்குப் பயன்படாமல் போய்விடும்''.

அன்று நல்லகண்ணு பேசியது ஒரு தாத்தா பேரனுக்கு இதமான அறிவுரை சொன்னதுபோல் இருந்தது என்கிறார் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த வி. சுப்ரமணியன் என்கிற 80 வயதுப் பெரியவர்.

நல்லகண்ணுவின் மறைவைப் பற்றி கேட்டவுடனேயே சென்னைக்கு வந்து நேரில் அஞ்சலி செலுத்தினார் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வேலுஜி. நல்லகண்ணு யாரையுமே எதிர்தரப்பு என்று கருதியதில்லை. எல்லோரும் அவரவர் போக்கில் செயல்படுகிறார்கள் என்று தான் கருதினார். பல எழுத்தாளர்களுக்கு நண்பரான அவர் இலக்கியத்தின் கட்சி சித்தாந்தத்தையும் சேர்த்து குழப்பிக் கொண்டதில்லை. 'சோறு போடும் சொற்கள்' என்ற தலைப்பிலான என் சிறுகதைத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த பாரதி புத்தகாலயம் பதிப்பிக்க முன்வந்தது. எதிர் தரப்பு கம்யூனிஸ்ட் பிரமுகரான நல்லகண்ணுவிடமிருந்து அணிந்துரை பெறலாமா, அவர் தருவாரா என்று கேட்டபோது, பதிப்பாளர் நாகராஜன் சொன்னார்.

''நல்லகண்ணு சம்மதிப்பார் என்று சொல்லி என்னுடன் அவர் வீட்டுக்கு வந்து சிறுகதைத் தொகுதியின் முன்னோட்டப் பிரதியைக் கொடுத்து அணிந்துரை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதன்படியே எந்த வேறுபாடும் பார்க்காமல் சிறுகதைத் தொகுதியைப் படித்துவிட்டு அணிந்துரை வழங்கினார் நல்லகண்ணு.

கதாசிரியர் முதலாளித்துவ நாடாகிய அமெரிக்க அரசாங்கத்தில் பணிபுரிந்தவர்; வெளியிட்டவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர். அணிந்துரை வழங்கியது வலது கம்யூனிஸ்ட்டின் தலைவர் நல்லகண்ணு அவர்கள். இது தமிழ்நாட்டின் அரசியலுக்கு அப்பாற்பட்ட இலக்கிய ஒருமைப்பாட்டை உணர்த்துகிறது. அவரும் எளிமை, அவரது வீடும் எளிமை. அவர் வாழ்ந்து கொண்டிருந்த சி.ஐ.டி நகர் வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். சிறிய வீடு, உபயோகப் பொருட்கள் எல்லாம் அதிகம் இல்லை. அமருவதற்கு இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருந்தன. அவையும் சாதாரணமானவையே.

எல்லாவற்றிற்கும் மேலாக சுதந்திரப் போராட்டத்திற்குப் பிறகும் தியாகியாக வாழ்ந்து வந்தவர் நல்லகண்ணு. கட்சிபற்று, நாட்டுபற்று தவிர வேறு எந்த பற்றும் இல்லாமலேயே வாழ்ந்து வந்தவர். அவர் தனக்குக் கிடைத்த விருதுகளுக்கான அடையாளங்களை மட்டும் வைத்துக் கொண்டு ரொக்கப் பணத்தை அந்தந்த அமைப்புகளுக்கு தானமாக வழங்கிவிட்டார். மரணத்திற்குப் பிறகு உடலையும் தானமாகக் கொடுக்க சாசனம் எழுதி வைத்தார்.

அவர் உயிர் போகவில்லை. அது நம் நினைவில் வாழ்கிறது. அவரது உடலும் மறிக்கவில்லை. அது மருத்துவமனையில் மாணவர்களுக்காக வாழ்கிறது.

Image 1542394

-ஆர்.நடராஜன்-

• கட்டுரையாளர்அமெரிக்கத் தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்.






      Dinamalar
      Follow us