PUBLISHED ON : ஜூன் 25, 2023 12:00 AM

நாடறிந்த அரசியல்வாதி, பலமுறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தவர், தன் இறுதி நாட்களில் எழுதிய மரண சாசனம் இது:
'உலகத்தில் மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. நான் அரசியல் களத்தில் தேர்தலில் பல வெற்றிகளை கண்டு, பல பதவிகளை வைத்து ஆட்சி செய்தவன். தோல்வி என்பதையே கண்டறியாதவன். ஏழை எளியவர்களை பணத்தாலும், அறிவு உள்ளவர்களை என் சாணக்கியத்தனத்தாலும் சிறிய கட்சிகளை உருவாக்கி, கொத்தடிமைகளாக்கி வென்றிருக்கிறேன். அதிகாரத்தால் பல ஜாதி மதவாத கட்சிகளை உருவாக்கி, நிதி அளித்து, கூட்டணி வைத்துள்ளேன். இக்கட்சிகளை, 'காடாறு மாதம் நாடாறு மாதம்' என்று, ஆளுங்கட்சி பக்கமும், எதிர்க்கட்சி பக்கமும் அலைய விட்டிருக்கிறேன். தீவிரவாதிகளின் பின்புலத்தில் இருப்பவர்களையும் கண்டும்காணாமல் இருந்துள்ளேன்; இதனால் பலரின் கோபத்தையும் பொருட்படுத்தவில்லை.
குணப்படுத்த முடியாது
வானளாவிய அரசு அதிகாரத்தில் இருந்துள்ளேன். இந்நாடு முழுவதும், பல திட்டங்களில், 'கான்ட்ராக்ட்' வாயிலாக நிதி சேர்த்துள்ளேன். பல அறக்கட்டளைகள், மனைவி, மக்கள் பெயரில் ஆரம்பித்து, என் கட்சியின் நிதி காப்பாளராக, என் குடும்ப உறுப்பினர்களை வைத்தேன். இவ்வளவும், இம்மக்களுக்கு தெரியாது. காரணம் மக்கள் பிழைப்புக்காக ஏழ்மையிருந்து தன் குடும்பத்தை காப்பாற்ற, தினம் தினம் அலைபவர்கள். அவர்கள் எப்படி இதைப் பற்றி ஆழமாக, அழுத்தமாக சிந்திப்பர்?
இவர்களைப் பற்றி, கடுகளவும் நான் நினைத்தது இல்லை. என் மதியால், பல நல்ல தலைவர்களை ஆட்டிப் படைத்திருக்கிறேன். இன்று மருத்துவமனையில், சக நோயாளிகளுடன், கவலையோடு சிகிச்சைக்காக காத்து இருக்கிறேன். இந்த உலகத்திலுள்ள, விலை உயர்ந்த மேல்நாட்டு சொகுசு கார்கள், என் கார் கூடத்தில், என் வாரிசுகள் உபயோகத்திற்கு உள்ளன.என் இல்லத்தில், சொகுசான படுக்கையில் படுத்து பழக்கப்பட்டவன் நான்; இன்று, மருத்துவமனை இரும்பு படுக்கையில் படுத்தபடி, சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்படுகிறேன். மலம் கழிப்பதற்கு அடியில் பிளாஸ்டிக், சிறுநீர் வெளியேறுவதற்கு பை என இவ்விரண்டும், என் உடலோடு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
முன்பு, பல மாலைகளை வாங்கிய கழுத்து என்னுடையது. பெரும் தொழிலதிபர், 1 கிலோ தங்கத்தில், வைரங்களை பதித்த மாலையை, என் கழுத்தில் சூட்டி மகிழ்ந்தார்; இன்றோ, என் கழுத்தைச் சுற்றி, 'டயலிசிஸ்' செய்வதற்கென்று, பல பிளாஸ்டிக் குழாய்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நாட்டில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும், பணம் படைத்த செல்வந்தர்களும், அதிகார வர்க்கமும், மேல்நாட்டு துாதுவர்களும், என்னைப் பார்க்க, என் வீட்டு வாசலில் காத்திருக்க வைத்தவன் நான்; இன்றோ, நானும் மருத்துவமனையில், பரிசோதனைக்காக சக்கர நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டு, சக நோயாளிகளோடு, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்ய காத்திருக்கிறேன். எம்.ஆர்.ஐ., குழாய்க்குள் உடல் நுழையும் போது, இருண்ட நரகத்திற்கு செல்வது போல் உணர்கிறேன்.
என் வீட்டில், பல விலையுயர்ந்த உடைகளும், அலங்கார நகைகளும், மாணிக்க கற்களும், வைடூரியங்களும் உள்ளன; விலை உயர்ந்த காலணிகள் அனைத்தும், என் இரண்டு வீட்டிலும் உள்ளன. ஆனால் நான் இன்று அணிந்திருப்பதோ, மருத்துவமனையில் நோயாளிக்கு வழங்கப்படும், பச்சை நிற, ஆஸ்பத்திரி முத்திரையுள்ள ஆடை.
மேலும் நான் நடத்தும் கட்சிக்கான கோடிக்கணக்கான ரூபாய் உள்நாட்டு வங்கிகளிலும், 'மணி லாண்டரிங்' வாயிலாக ஈட்டப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய், வெளிநாட்டு வங்கிக் கணக்கிலும் உள்ளன. என்னுடைய பல குடும்ப உறவினர்கள், பினாமியின் பெயர்களிலும் உள்ளன. பணம் இருந்தும் எனக்கு வந்த நோயை, உலகில் உள்ள பல மருத்துவர்களாலும், பல மருத்துவமனைகளாலும் குணப்படுத்த முடியாது என்கின்றனர். இதயம், நுரையீரல், சிறுநீரகம் மூன்றும் பாதிக்கப்பட்டுள்ளன.
நான் வசிக்கும் வீடு, பளிங்கு கற்களால் கட்டப்பட்ட மாளிகை. பல அறைகளில், பல விதமான நாற்காலிகள், படுக்கையறைகள், குளிர்சாதனங்கள், 'டிவி'க்கள் உள்ளன. அவை அனைத்தும், என் மனைவி, மக்களோடு, என் வீட்டில் பணிபுரிபவர்கள் அனுபவித்து வருகின்றனர்; நானோ, மருத்துவமனையின் இரும்பு கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கிறேன்.
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் எனக்கு, 'கார்ப்பரேட் கம்பெனி' உள்ளது. அங்கு செல்ல, தனி விமானத்தில் பயணித்து இருக்கிறேன். உலகில் உள்ள நட்சத்திர விடுதி, சொகுசு அறையில் தங்கி உள்ளேன்.
இன்று? மருத்துவமனையில், ஒரு தனி அறையில் பல மருத்துவ கருவிகள் உடலில் இணைக்கப்பட்டு, மல்லாக்க படுக்க வைக்கப்பட்டுள்ளேன்.
ராஜ மரியாதையோடு நான், பல நிகழ்வுகளுக்கு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில், தொண்டர்கள் சூழ அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறேன்.
இன்று? மருத்துவமனையின் ஒரு பரிசோதனை கூடத்திலிருந்து மற்றொரு பரிசோதனை கூடத்திற்கு, சக்கரம் வைத்த கட்டிலில், செவிலியர்களால் தள்ளி செல்லப்படுகிறேன்.
அன்று, வெள்ளிப் பாத்திரத்தில் உள்ள உணவைச் சாப்பிட, தங்கத் தட்டு; அது, சாராய ஆலை அதிபர் கொடுத்தது. இன்று, மருத்துவமனை படுக்கையில் படுத்தபடி, ஒரு பிளாஸ்டிக் தட்டில், பிளாஸ்டிக் கரண்டியால் உணவு ஊட்டப்படுகிறேன்.
உண்மையிலேயே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், சேவை செய்யும் செவிலியர்களின் இனிய முகத்தைப் பார்க்கிறேன்... பதவியில் நான் இருந்தபோது, மருத்துவம் படிக்க 'சீட்' கேட்டு வந்தவர்களிடம், நான் பணத்தை வாங்கிக் கொண்டு, சீட் பெற்றுக் கொடுத்த கயவாலித்தனம், மனதில் நிழலாடுகிறது.
நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல், என்னிடம் சிபாரிசுக்கு வந்தவர்களிடம், பல லட்சங்களைப் பிடுங்கிக் கொண்டதும், நினைவில் வந்து செல்கிறது.
'இவன் எப்போது சாவான், இந்த பதவி எனக்கு எப்போது கிடைக்கும்...' என்று அலையும் கட்சித் தலைவர்கள் ஒருபுறமும், என் சொத்தை யார் பகிர்ந்து கொள்வது என்று முரண்டு பிடித்து நிற்கும் சொந்தங்களும் மறுபுறம்.
என் கட்சியின் அப்பாவி கொத்தடிமைகள், அரசியலில் எந்த பலனும் அடையாமல், மருத்துவமனையின் வெளியிலேயே, 'குய்யோ முறையோ...' என்று அரற்றுவதைப் பார்க்கும்போது, இது போன்ற பைத்தியங்கள் இருக்கும் வரை, அரசியல்வாதிக்கு ராஜ வாழ்க்கை தான்; ஜனநாயகத்துக்கு அதல பாதாளம் தான் என்பது புரிகிறது. அரசியலில் அதிகாரத்தை வைத்து உயர் பதவிக்கு வந்த பிறகும், என் பெயரை வைத்து எனக்கு பின்னால் கொள்ளையடிக்கும் கும்பலும், பேராசைக்காரர்களும் இருந்தனர்.
பரிதாபப்படாதவன்
எதிர்க்கட்சியாக இருந்தபோது, திட்டத்தில் கணிசமாக கமிஷன் கான்ட்ராக்டர் மூலமாக பெற்றுள்ளேன். அந்த தலைவருக்கு தெரியும்... திட்டத்தில் கணிசமான கமிஷன் கிடைக்காவிட்டால், தன்னார்வலர்களை அழைத்து போராடுவேன் என்று! கமிஷனைப் பெற்ற பிறகும் பல மேடைகளில், அவரைப் பற்றி தரக்குறைவாக, ஆபாசமாக பேசியுள்ளேன். சட்டசபையில் சில வார்த்தைகளைப் பேசி, அதன்பின் அதை சபைக் குறிப்பில் இருந்து விலக்கும்படி கூறியுள்ளேன். எங்கள் இருவருக்கும் பாலமாக, உயர்ந்த அந்தஸ்திலுள்ள தொழிலதிபர்கள் செயல்பட்டனர்.
எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும்போது, அதன் தலைவர் இதயம், சிறுநீரகம், மூளை பாதிக்கப்பட்டது குறித்து, கொச்சையாக எழுதினேன். அவருக்கு, 'டயாலிசிஸ்' செய்தபோது பரிதாபப்படாதவன், இன்று அதே நிலையில் படுத்திருக்கிறேன்.
சக அரசியல்வாதி, வாய் புற்றுநோயுடனும், மற்றொரு அரசியல்வாதி சிறை தண்டனை பெற்ற பின், சிறுநீரக மாற்று சிகிச்சை செய்த பிறகும், மீண்டும் அரசியலுக்கு வந்து விட்டனர். அவர்களைப் போல் இரு அமைச்சர்கள், இந்த சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, மாற்று சிறுநீரகத்தைப் பெற்று, நீண்ட காலம் வாழ முடியாமல் மரணமடைந்தனர். அவர்களின் மருத்துவச் செலவு, மக்களின் வரிப் பணத்தில்.
மரணத்தை வெல்லவும் முடியாது
இன்று ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால், அரசியல் கட்சிகள் நடத்துபவர்கள், அளவற்ற கட்சி நிதிகளை அனுபவிக்க தன் வாரிசுகளை தலைவராக்கி, முடி சூட்டி மகிழ்கின்றனர்; இத்தனை நாள் அதே போல் ஆட்டம் போட்ட எனக்கு, இந்த இரும்புக் கட்டில், போதி மரமாகிப் போனது.
இன்று நான் அரசியலிலும், அதிகாரத்திலும் வருவதற்கு முன், ஏவல் புரியும் பராரியாக இருந்து, கொடுக்க வேண்டியதை கொடுத்து, காட்ட வேண்டியதை காட்டி, பதவிக்கு வந்தவன். ஆனால், நான் அன்றும், இன்றும் ஏழைகளைப் பற்றி நினைத்ததே இல்லை; நன்றி என்பது என் மரபணுக்களிலேயே இல்லை.
அரசியல்வாதிகளே... நீங்கள் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும், அதிகாரத்தை கைப்பற்றி சொத்து சுகங்களை சேர்த்தாலும், உங்கள் பாவத்தையும், நோயையும் வாங்கிக் கொள்ள யாராலும் முடியாது. மொத்த முழுதையும் நீங்களே அனுபவிக்க வேண்டும். உங்களுக்கு வரும் இதய - சிறுநீரக பாதிப்பு, கேன்சர் நோயை, பணத்தையும், அரசியல் அதிகாரத்தையும் வைத்து தடுக்கவும் முடியாது; எதிர்நோக்கி வரும் மரணத்தை வெல்லவும் முடியாது. என்னை போன்ற அரசியல்வாதிகளுக்கு, என் கதை, ஒரு பாடமாக அமையட்டும்.
பட்டினத்தார் கூறுவதுபோல, நாம் பிறக்கும் போது எதை கொண்டு வந்தோம்? எப்படி வெறும் உடலோடு பிறந்தோமோ, அந்த உடலோடு மண்ணுக்குள் செல்வோம். இது மனிதநேயம் இல்லாத அரசியல்வாதியின் மரண சாசனம்.
டாக்டர் சு.அர்த்தநாரி,