/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
நீதிமன்றங்கள் புகலிடமா, புதை குழியா: சிந்தனைக்களம்
/
நீதிமன்றங்கள் புகலிடமா, புதை குழியா: சிந்தனைக்களம்
நீதிமன்றங்கள் புகலிடமா, புதை குழியா: சிந்தனைக்களம்
நீதிமன்றங்கள் புகலிடமா, புதை குழியா: சிந்தனைக்களம்
PUBLISHED ON : நவ 16, 2025 12:01 AM

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அராஜக கும்பல்களின் அட்டகாசம்; தங்கள் அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி, மக்களுக்கு நன்மை செய்யத் தெரியாத அல்லது விரும்பாத அதிகாரிகள்; அதே அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் அதிகாரிகள் என, பலமுனைத் தாக்குதலில் சிக்கித் தவிக்கின்றனர் அப்பாவி மக்கள். இவர்களுக்கெல்லாம் ஒரே புகலிடம், நீதிமன்றங்கள் தான் .
ஆனால், எல்லா துறைகளிலும் திறமையற்றவர்கள், நேர்மையற்றவர்கள் இருப்பதுபோல், நீதித் துறையிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பேர் இருக்கின்றனர். ஆல்பிரட் பேரட்டோவின் 80-20 கோட்பாடு, இவர்களுக்கும் பொருந்தும் என்பதை, சமீப நிகழ்வுகளும், அந்த துறையிலேயே உள்ள, 20 சதவீத நல்லவர்கள் வெளிப்படுத்தும் ஆதங்கங்களும் உணர்த்துகின்றன.
நல்லதல்ல எந்த மனிதனும் அல்லது நிர்வாகமும், அவர்களின் குறைகளையும், தவறுகளையும், மற்றவர் சுட்டிக்காட்டவும், நடவடிக்கை எடுக்கவும் அஞ்சும் இடத்தில் இருப்பது, அந்த நபருக்கு அல்லது நிர்வாகத்துக்கு நல்லதல்ல.
இக்கால நீதிமன்றங்களில், சில நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் அந்த பாதுகாப்பான இடத்தை வலிமையாக பற்றியபடி, தவறிழைக்கின்றனர்.
தங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதற்காக, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சிலர் தீக்குளிக்க முயலும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்பது உணவுக்கு மட்டுமல்ல உரிமைக்கும் பொருந்தும்.
நானும், தொழிலை மேற்கொள்ளாத ஒரு வழக்கறிஞர் என்பதால், உரிமையோடு இங்கு சில நீதியரசர்களின் ஆதங்கத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சம்பவம் 1 ஒரு நடுத்தர வயது பெண், தன் ஒரே மகளையும், கை, கால் வராத தன் வீட்டுக்காரரையும், வீட்டு வேலைசெய்து காப்பாற்றி வந்திருக்கிறார்.
மகளை கஷ்டம் தெரியாமல் வளர்த்து, நல்ல பள்ளியில் படிக்க வைத்தவர், வேலை செய்யும் வீட்டில் கிடைத்த நல்ல உணவை, தான் சாப்பிடாமல் மகளுக்கு கொடுத்து, அவளை சாப்பிட வைத்து மகிழ்ந்திருக்கிறார்; யார் யாரிடமோ கெஞ்சி, வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
அவள் சம்பாதிக்க ஆரம்பித்ததும், தங்கள் கஷ்டம் எல்லாம் போய்விடும்; அவள் பார்த்துக்கொள்வாள் என்று நினைத்தபோது, திடீரென ஒருநாள் அவள் காணாமல் போய்விட்டாள்; 'அவளை யாரோ கடத்திப் போயிருப்பதாக சந்தேகப் படுவதாகவும், எப்படியாவது அவளைக் கண்டு பிடித்துத் தர வேண்டும்' என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுப்படி, அவரது மகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டிருக்கிறார்.
மிக அலட்சியமாக நின்றிருந்த அந்த இளம்பெண், 'யாரும் என்னைக் கடத்தவில்லை; நான் மேஜரான பெண்; எனக்குப் பிடித்தவருடன் வாழ்வதற்காக நானே தான் விரும்பிச் சென்றேன்' என்று கூறி இருக்கிறார்.
கண்டுகொள்ளவில்லை 'அதற்காக? உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கி விட்ட பெற்றோரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போய்ட்டியே... இது என்ன நியாயம்?' என்று கேட்டிருக்கிறார் நீதிபதி.
அப்பெண், பதில் ஏதும் சொல்லவில்லை.
'உன் அம்மா, உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்கிறார்; பேசு' என்றிருக்கிறார் நீதிபதி. தாயின் பேச்சில் மனம் மாறினாளா அந்தப் பெண்? இல்லை. மாறாக, 'கிளம்புறேன்' என்கிறாள். 'இவள் அப்பாவுக்கு இவள் மீது பாசம் அதிகம். அவரிடம் பேசச் சொல்லுங்கள்' என, தாய் மன்றாடுகிறாள்.
கண்டுகொள்ளவே இல்லை அந்தப் பெண்; மாறாக, காதலனுடன் காரில் ஏறி, 'விருட்'டென கிளம்பி விட்டாள்.
இவ்விவகாரத்தில், நீதிமன்றத்தால் ஒன்றுமே செய்ய முடியாது.
கை, கால் முடங்கிய நிலையில், பேசவும் முடியாமல், சுவரோடு சுவராக சாத்தி அமர வைக்கப்பட்டிருந்த அத்தந்தையின் கண்ணில் தாரை தாரையாக நீர்.
நீதிபதியின் நேரம் வீணாவதை உணர்ந்த அந்த தாய், 'மன்னிச்சிக்குங்கய்யா... நாங்க கிளம்பறோம்...' என்று சொல்ல, 'எங்கேம்மா போவீங்க?' என்கிறார் நீதிபதி.
'ஊருக்குப் போகணும். கையில் காசில்லை. பிச்சை எடுப்பேன். கிடைக்கும் காசை வைத்து ஊருக்குப் போவேன். அங்கு நான் வேலை செய்யிற இடத்துல எனக்கு பணம் குடுப்பாங்க...' எனக் கிளம்பத் தயாரானார்.
நீதிமன்றமே விக்கித்து நின்றது.
அனைவரும் ஜரூராய் செயல்பட்டு, 40,000 ரூபாய் திரட்டி, அந்தம்மாவிடம் கொடுத்து, அனுப்பி வைத்தனர்.
'பிள்ளைகளுக்கு அறிவைக் கொடுப்பதை விட அன்பைக் கொடுப்பது முக்கியம் என்பதை உணருங்கள்' என்ற வேண்டுகோளுடன்
முன்னாள் நீதிபதி உருக்கமான பேச்சை முடித்தார்.
சம்பவம் 2 சமீபத்தில் ஒரு உயர் நீதிமன்ற நீதியரசர், 'வழக்கறிஞர் தொழில் மகத்துவமானது. அது கிரிமினல்களின் சரணாலயமல்ல. ஆனால், கடந்த சில வருடங்களாக, வெளி மாநிலங்களிலிருந்து படிக்காமல் முறைகேடாக சட்டப் பட்டங்களை பணம் கொடுத்து வாங்கி வந்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்து தங்கள் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு கேடயமாக வக்கீல் தொழிலை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.
'இத்தகையோர், நீதிமன்றங்களுக்கு வந்து கண்ணியமாக தொழில் புரிவதில்லை. கருப்பு - வெள்ளை உடை அணிந்து, ரவுடிகளாகவே செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, போலீசை மிரட்டியும், தடுத்தும், கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபடுகின்றனர்.
'போலீசை மட்டுமன்றி, நேர்மையாக நீதிமன்றத்தில் வழக்கு நடத்தும் வழக்கறிஞர்களையே இவர்கள் மிரட்டுகின்றனர். கூலிப்படை போன்று செயல்படும் இவர்கள், சட்டத்துக்குப் புறம்பான தனி அமைப்பாகவே செயல்படுகின்றனர்.
'மக்களும், போலீஸ் மீதும், நீதிமன்றங்கள் மீதும் நம்பிக்கை இழந்து, இத்தகையோரை அணுகுகின்றனர். இது கண்ணியமாக தொழில் புரியும் வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறைக்கும், நாட்டிற்கும் பெரும் பாதகமானது. இத்தகையோர் மீது காவல்துறையும், பார் கவுன்சிலும் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு உள்ளார்.
இப்படி வேதனையுடன் கருத்து தெரிவிக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுவிட்டார் என்றால், பாருங்கள்!
தவறு செய்பவர்கள், தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக, தங்களின் செல்வாக்கு, பணபலம் அனைத்தையும் உபயோகித்து, இறுதி வரை போராடி வெற்றியும் அடைந்து விடுகின்றனர்.
சமீபத்தில், தன் சொந்த காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த, ஒரு காவல் துறை உயரதிகாரியை பலிகடாவாக்கி, சுயமரியாதையை இழந்து அவமானப்பட்டு நின்ற நீதிபதியைப் பற்றி, ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும் திட்டித் தீர்த்தனர்.
வசதி படைத்தவர்க்கு? நீதிமன்றங்களில் சாமானியர்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிக்கும் பல்லாயிரக்கணக்கான வழக்குகள், வாய்தாவில் வருடக்கணக்கில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அரசியல் தலைவர்களின் சொந்த விருப்பு வெறுப்பு, சுய கவுரவம், பதவி, ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் மட்டும், வெகுவிரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, விசாரணை முடித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது, அதுவும் செல்வாக்கு மிக்கவர்களுக்குச் சாதகமாகவே. ஒன்றிரண்டு மட்டும் இதற்கு விதிவிலக்கு.
குற்றவாளிகள் தப்பித்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது என்பதில் தான், நீதிமன்றங்கள் கவனத் துடன் செயல்பட வேண்டும் என்று கேள்விப்பட்டிருக் கிறோம்.
ஆனால், ஒரு அரசு அலுவலர் நிரபராதி என்று ஒரு நீதிமன்றம் சொன்னதை எதிர்த்து, அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யும் அவலங்கள், இங்கு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
சூரியனின் மகத்துவம், அதன் சுட்டெரிக்கின்ற வெப்பக்கதிர்களில் இல்லை; அற்பமான சிறிய மலரையும், அக்கறையோடு மலர வைக்கும் அதன் ஆற்றலில் தான் வெளிப்படுகிறது.
நீதிமன்றத்தில், இறைவனுக்கு நிகரான பொறுப்பில் இருக்கும் உண்மையான நேர்மையான நீதிமான்களே... தயவு செய்து விழித்தெழுங்கள்! உங்களிடையே ஊடுருவியிருக்கும் கருப்பு ஆடுகளை கண்டுபிடித்து, களையெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்!
ஒரு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, அடுத்த நீதிமன்றத்தால் மாற்றப்பட்டால், அதன் பின்னணியை தீவிரமாக ஆராயுங்கள்; அந்த தீர்ப்பை விலைக்கு வாங்கிக் கொடுத்த தரகர் யாரென்று கண்டுபிடியுங்கள்.
ஒவ்வொரு தீர்ப்பும், ஒரு தனி மனிதனின் உயிராதாரமாக இருக்கும்போது, தவறான தீர்ப்பை தன் சுயலாபத்துக்காக விற்ற நீதிபதியை, நீதித் துறையில் நிலைக்கச் செய்வது சமுதாயத்துக்கு ஆபத்தானது
மா.கருணாநிதி, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர்.
அலைபேசி: 98404 88111
இ - மெ யில்:spkaruna@gmail.com

