பெருகி வரும் குற்றங்களை குறைக்க சமுதாய காவல் பணியே சரியான தீர்வு!
பெருகி வரும் குற்றங்களை குறைக்க சமுதாய காவல் பணியே சரியான தீர்வு!
PUBLISHED ON : செப் 09, 2026 04:35 AM

மா.கருணாநிதி, காவல் துறை கண்காணிப்பளர் (ஓய்வு) அலைபேசி: 98404 88111- இ.மெயில்: spkaruna@gmail.com
காவல் துறை உட்பட அனைத்து அரசு அலுவலர்களும், பொதுமக்கள் எனும் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் சேவை என்ற நுகர்பொருளை விற்று, அரசுக்கும், தாங்கள் சார்ந்த துறைக்கும், 'நற்பெயர்' என்ற விலையை பெற்றுத்தர கடமைப்பட்டவர்கள். ஆகவே, வாடிக்கையாளர்கள் குறித்து மகாத்மா காந்தி கூறிய பொன்மொழி, இவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். அதாவது, 'ஒரு வாடிக்கையாளர் நம் வளாகத்திற்கு வந்து செல்லும் மிக முக்கியமான வருகையாளர் ஆவார். அவர், நம்மை சார்ந்து இல்லை; நாம் தான் அவரை சார்ந்து இருக்கிறோம். அவர், நம் வேலைக்கு இடையூறு செய்பவர் அல்ல; நம் வேலையின் நோக்கமே அவர் தான்.
'அவர் நமது தொழிலுக்கு வெளியாள் அல்ல; நமது தொழிலின் ஒரு பகுதியாவார். அவருக்கு சேவை செய்வதன் மூலம், நாம் அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை; மாறாக, சேவை செய்ய நமக்கு ஒரு வாய்ப்பளிப்பதன் மூலம் அவர் நமக்கு உதவுகிறார்' என்பதே மகாத்மா காந்தியின் பொன்மொழி.
பழிக்கு பழி
இந்த உண்மையை மனதுக்குள் பதிய வைத்துக்கொண்ட போலீசார் உட்பட, எந்த அரசு அலுவலரும், அதிகாரியும் மக்களின் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள்.
காவல் துறையில் பணியாற்றும் காவலர் முதல் உயர் அதிகாரிகள் வரை, ஒரு சிலர் தவிர மற்றவர்கள் திறமை மிக்கவர்கள்; நேர்மையானவர்கள் தான்.
அந்த ஒரு சிலரின் தவறுகள் ஊதி பெரிதாக்கப்படும்போது, திறமையானவர்களின் சாதனைகள் கண்டுகொள்ளப்படாமல் போகின்றன.
குற்றவாளியை கைது செய்து சிறைக்கு அனுப்பிய சில தினங்களில், அவர் ஜாமினில் வந்து விட்டால், அவர் மீதுள்ள வழக்கு முடிவுக்கு வருவதற்குள், அவரது வாழ்க்கையின் பெரும் பகுதி அல்லது முழுதுமாகவே முடிந்து விடுகிறது.
அதனால், குற்றவாளிகளுக்கு நீதிமன்ற தண்டனை குறித்த பயமில்லாமல் போய் விடுகிறது. இதனாலேயே, பாதிக்கப்பட்டவரின் உறவினர்களும், நண்பர்களும் ஜாமினில் வந்தவருக்கு தண்டனை கொடுக்க துவங்கி விட்டனர்; பழிக்கு பழியாக நடக்கும் கொலைகளே இதற்கு சாட்சி.
முந்தைய காலங்களில் காவலர்கள் பெரும்பாலும் பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்களாகத் தான் இருப்பர்.
ஆயினும், பல சந்தர்ப்பங்களில் தகவல் சேகரிப்பதில் தொடங்கி, பிரச்னைகளை தீர்க்க உதவும் நல்லவர்களை தேர்வு செய்வதிலும், சிக்கலான வழக்கு விசாரணையில் குற்றவாளிகளை கைது செய்ய, காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு உதவுவது வரை மிக திறமையாக செயல்படுபவர்களாக இருந்தனர்.
பட்டதாரிகள்
தற்போது, காவலர் பணிக்கு வருபவர்களில் இளங்கலை பட்டதாரி முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை இருக்கின்றனர். அவர்களை உரிய வகையில் ஊக்கப்படுத்தி பணி செய்ய அனுமதித்தால், மிகச் சிறந்த சாதனைகளை செய்வர்.
எங்கோ ஒரு நிகழ்வில் ஒரு காவலர் தவறு செய்து விட்டால், அந்த நிகழ்வின் உண்மையை முழுதுமாக கண்டறிந்து, அந்த காவலர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, ஒட்டுமொத்த காவல் துறையையும் முடக்கி போடும் அதிரடி உத்தரவுகள் பிறப்பிப்பதை, தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
இப்பிரச்னைகள் அனைத்துக்கும் ஒரே தீர்வு, சமுதாய காவல் பணி தான்.
அதாவது, பல்வேறு காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா பகுதிக்கும் ஒரே வகையான காவல் பணி தேவைப்படாது.
அந்தந்த பகுதியில் வசிக்கும் மக்களின் தொழில், கலாசாரம் மற்றும் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப சட்ட விதிமீறல்களும், குற்றங்களும் நிகழும். அவற்றை தடுக்கும் விதத்தில், அந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரியின் செயல்பாடு இருக்க வேண்டும்.
இது குறித்தான தகவல்களை பெறுவதற்கும், குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றத்தில் தண்டனை பெற்று தரவும் அப்பகுதி மக்களின் உதவியும், ஒத்துழைப்பும் கட்டாயம் தேவை.
இன்று பல வழக்குகள் நீதிமன்றத்தில் தோல்வியடைவதற்கு காரணம், அரசு தரப்பு சாட்சிகள் நீதிமன்ற விசாரணையின் போது பிறழ் சாட்சிகளாக மாறிவிடுவதால் தான்.
மக்களுடன் நல்லுறவு
அந்த ஒத்துழைப்பையும், உதவியையும் பெறுவதற்கு ஏதுவாக மக்களிடம், காவல் துறையினர் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு காவல் நிலையத்தில் உள்ள காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரையிலானவர்களுக்கு, காவல் நிலைய பகுதிகள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும்.
அந்த காவலர் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தனி கவனம் செலுத்தி, அலுவல் காரணமாக செல்லும் சமயங்கள் தவிர அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், அப்பகுதி மக்களிடம் நேரடியாகவோ அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
அந்த பகுதியில் சமூக அக்கறையுள்ள நல்லவர்கள், நடுநிலையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதன் மூலம், அப்பகுதியில் நிலவும் பிரச்னைகளின் ஆணி வேரை கண்டறிய முடியும்.
இதன்மூலம் ஒரு குற்றம் நிகழத் துவங்கி, வளர்ந்து பல ஆண்டுகளுக்கு பிறகே காவல் துறையின் கவனத்துக்கு வருவதும், தனி மனிதன் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி, 'பிரபல ரவுடி' என்ற நிலைக்கு உயர்ந்து, அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதும் தவிர்க்கப்படும்.
எனவே, காவல் துறைக்கும், மக்களுக்கும் இடையே நிலவும் இடைவெளியை அகற்றும் சமுதாய காவல் பணி ஒன்றே, குற்ற நிகழ்வுகளை குறைப்பதற்கான ஒரே தீர்வு.
