ஜாதி, மத, அரசியல் வாரிசுகளின் ஆட்சிக்கு இனி 'குட் பை' தான்!
ஜாதி, மத, அரசியல் வாரிசுகளின் ஆட்சிக்கு இனி 'குட் பை' தான்!
PUBLISHED ON : ஆக 21, 2026 05:56 AM

தாங்கள் தோற்கும் நேரங்களிலெல்லாம், ஆபாசப் பேச்சை அள்ளி வீசுவதை, தி.மு.க., வழக்கமாகக் கொண்டிருக்கிறது. காங்கிரசின் இந்திரா முதல், சட்டசபை பெண் எம்.எல்.ஏ., வரை, பலரையும் ஆபாச வார்த்தைகளால், தி.மு.க., பெருந்தலைவர் உட்பட பலரும் பேசியதை நாம் பார்த்திருக்கிறோம். அத்தகைய, 'பெருமை' வாய்ந்த கட்சி அது. எம்.ஜி.ஆரை வசைபாடிய தி.மு.க.,வினருடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்க முயன்ற அ.தி.மு.க., தலைமையைப் பார்த்து, தொண்டர்கள் நெஞ்சு வெடித்து, கொதித்தெழுந்து விட்டனர்.
இன்று போல முன்பெல்லாம் தொலைபேசியோ, சமூக ஊடகங்களோ கிடையாது. செய்தித்தாள்களில் வெளியானவற்றை, பெருவாரியான மக்கள் அறியவும் முடியவில்லை. தொலைக்காட்சி வந்த பின், அரசியல் நடப்புகளை மக்கள் ஓரளவு புரிந்து கொண்டனர். இப்போது சமூக ஊடகங்களில் வெளியாகாத செய்திகளே இல்லை.
உலகின் எந்த மூலையில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும், உடனுக்குடன் தெரிந்து விடுகிறது. அப்படி இருக்கையில், சமுதாயத்தை வழி நடத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள், தகாத வார்த்தைகளைப் பேசுவது நாகரிகமானது அல்ல; வார்த்தைகளை கவனமாகக் கையாள வேண்டியது அவசியமாகிறது.
தி.மு.க.,வின் ஆட்சியையும், அ.தி.மு.க.,வின் ஆட்சியையும் பார்த்த மக்களுக்கு, பா.ஜ.,வின் மோடி தலைமையிலான மத்திய ஆட்சியைப் பார்த்து சற்று ஆறுதல் ஏற்பட்டாலும், தமிழகத்தில், எல்.முருகனை தலைவராக நியமித்த பின், கட்சி வளர்ச்சி காண ஆரம்பித்தது.
பின், அண்ணாமலை வந்தார். கட்சி அபரிமிதமான வளர்ச்சி கண்டது. இதைப் பொறுக்காத சிலர், அண்ணாமலையை ஓரங்கட்ட பெரும் முயற்சி கண்டு வெற்றியும் கண்டனர்.
அண்ணாமலை, எந்த திராவிட தலைவர்களையும் கொச்சைப்படுத்திப் பேசியதில்லை. தி.மு.க., மீது குற்றச்சாட்டுகளை மட்டும் வைத்து, பிரபலமடைந்தார்.
அ.தி.மு.க.,வில் சிலர் அண்ணாமலையை ஓரங்கட்ட முயற்சி செய்து, அக்கட்சிலேயே இருந்த ஒருவரை பா.ஜ.,வில் சேர வைத்து தலைமைப் பொறுப்பில் அமர வைத்து, வெற்றி கண்டனர்.
அரசியல்வாதிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை சமீபத்தில், 'வீ தி லீடர்ஸ்' என்ற அமைப்பின் அமைப்பாளர் அண்ணாமலை ஆக்கப்பூர்வமாக பேசியது, ஆபாசப் பேச்சை கண்டித்ததோடு அல்லாமல், முதல்வர் சுதந்திர தின விழாவில் ஊழலை ஒழிப்பேன் என்று முழக்கமிட்டதை பாராட்டியது, ஆக்கப்பூர்வமான சில ஆலோசனைகளை த.வெ.க., அரசுக்கு வழங்கியது ஆகியவை பாராட்டத்தக்கவை.
அன்றைய ஆட்சியாளர்கள் நிர்வாக அமைப்பாக கொள்ளையடித்த கட்சி நிதி, இன்றைய மூன்று மாத ஆட்சியில், அரசு கஜானாவுக்கு திரும்பி உள்ளது. இந்த பணத்தை, கிராமப் புனரமைப்புக்கு எப்படி செலவழிக்க வேண்டும் என்பதைக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளம் குட்டைகளை துார்வாரி சுத்தப்படுத்துவது, கிராமத்தில் உள்ள பள்ளிகளின் கட்டடங்களை பராமரிப்பது, கிராம மக்கள் நலத்திற்காக பயன்படுத்துவது என்ற ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கூறியுள்ளார்.
இது போன்று ஜாதி மத பெயரைக் கொண்ட கட்சித் தலைவர்கள், கட்சி நிதியில் ஆதாயத்தைப் பார்த்தவர்கள் சொல்வரா?
த.வெ.க.,வை ஆட்சியில் அமர்த்திய சூத்ரதாரிகள், 30 - 45 வயது வாலிபர்கள். அதாவது, 1981 - 1996 இடைப்பட்ட ஆண்டுகளில் பிறந்தவர்கள்; 'ஜென் சி' என்றழைக்கப்படும் 1997 - 2012 இடைப்பட்ட ஆண்டுகளில் பிறந்தவர்கள்.
இனி வரும், 'ஆல்பா ஜெனரேஷன்' இளைஞர்கள், அதாவது 2013 - 2026 இடைப்பட்ட காலத்தில் பிறப்பவர்கள், இனிமேற்பட்டு பிறப்பவர்களும், சட்டசபையிலும், மத்தியிலும் யார் ஆட்சி செய்ய வேண்டும் எனத் தீர்மானிப்பதில் வல்லவர்களாகவே திகழ்வர். அப்படிப்பட்ட நிலை ஏற்படும்போது, அரசியல் வாரிசு, ஜாதி, மத, வெறி பிடித்த அரசியல்வாதி களுக்கு 'குட் பை' தான்!
- அர்த்தநாரி பிரபுராஜ்
போன்: 98843 53288
