/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
தரத்தில் இந்தியாவை உலகின் முதன்மை நாடாக மாற்றும் நடவடிக்கைகள்
/
தரத்தில் இந்தியாவை உலகின் முதன்மை நாடாக மாற்றும் நடவடிக்கைகள்
தரத்தில் இந்தியாவை உலகின் முதன்மை நாடாக மாற்றும் நடவடிக்கைகள்
தரத்தில் இந்தியாவை உலகின் முதன்மை நாடாக மாற்றும் நடவடிக்கைகள்
PUBLISHED ON : ஜன 11, 2024 12:00 AM

குறைபாடுகள் ஏதுமில்லாத, மோசமான விளைவுகள் அற்ற உற்பத்தி என்ற, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு இணங்க, மிக உயர்ந்த, உலகத் தரத்திலான பொருட்களை வழங்கி, உலகின் தலைமை இடத்திற்கு முன்னேறும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளது.
வரும், 2047-ம் ஆண்டுக்குள், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, உயர்ந்த தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கை அமைந்துள்ளது.
இந்தப் பொருட்களை, போட்டித் தன்மையுடன் கூடிய விலையில் விற்பனை செய்வதும், இந்தியாவின் முக்கிய திட்டமாகும்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரம், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நுகர்வோரை முழுமையாக திருப்தி அடையச் செய்வதை உறுதி செய்ய, அரசு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரின் நலன்களில், சமமாக கவனம் செலுத்தும் போது, சந்தை நிலவரம், லாபகரமாக மாறும் என, பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சில குறிப்பிட்ட தயாரிப்புகள், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
இந்த தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள், தரத்தை உறுதி செய்வதற்கான முக்கிய உத்தியாகும். இவை, நம்பகமான, பாதுகாப்பான மற்றும் உயர்தர தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் வழியை வகுக்கும். உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில், நுகர்வோர் ஆய்வு செய்து பொருட்களை வாங்க, இது போன்று தரக்கட்டுப்பாடுகள் ஒரு வரப்பிரசாதம்.
பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சி, 140 கோடி இந்தியர்களை, உலகத்துடன் எளிதில் இணைக்க உதவி இருப்பதுடன், சிறந்த தயாரிப்புகள் பற்றி நன்கு அறிந்து கொள்ளவும் உதவியுள்ளது.
ஒரு பொருளை வாங்குதற்கு முன், அதன் செயல்திறன், ஆயுட்காலம், நம்பகத்தன்மை போன்றவற்றை சரி பார்ப்பதை, வாடிக்கையாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஒரு தயாரிப்பை வாங்கி, அதில் திருப்தி ஏற்படவில்லை என்றால், இணையதளம் மூலமாக பகிரங்கமாக குறைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகளும், தற்போது அதிகம் உள்ளன.
எனவே, ஒரு பொருளின் தரம், விலை, செயல்திறன் போன்றவற்றுக்கு இடையே, சிறந்த சமநிலையை உருவாக்க வேண்டிய தேவை, உற்பத்தி நிறுவனங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உயர்தரமான உற்பத்திப் பொருட்களை நுகர்வோருக்கு வழங்கவும், இந்தியத் தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, அதிக கவனம் செலுத்துகிறது.
கடந்த, 2014- மே மாதத்திற்கு முன், 106 தயாரிப்புகளுக்கு, 14 தரக்கட்டுப்பாடுகள் மட்டுமே இருந்தன. தற்போது, 653 தயாரிப்புகள் இதில் உள்ளடக்கப்பட்டு, 148 தரக்கட்டுப்பாடுகளாக அது விரிவுபடுத்தப் பட்டுள்ளது. குளிர்சாதனக் கருவிகள், பொம்மைகள், காலணிகள் போன்றவை இதில் அடங்கும்.
ஏற்றுமதி மீதான தரக்கட்டுப்பாடு
'இந்தியாவில் உற்பத்தி செய்வோம் - உலகத்திற்காக உற்பத்தி செய்வோம்' என்ற இயக்கத்தின் கீழ், உற்பத்தியை, இந்த தரக் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
தரக் கட்டுப்பாட்டு நடைமுறையின் கீழ், பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வார்ப்பிரும்புப் பொருட்கள், சூரிய சக்தி கேபிள்கள், மின் விசிறிகள், தலைக்கவசங்கள், நவீன மீட்டர்கள், காற்று குளிர்விப்பான்கள் போன்ற தரக் கட்டுப்பாட்டுப் பொருட்கள், அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நாட்டில் தரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள், மிக முக்கிய பங்காற்றுவது தெளிவாக தெரியவந்துள்ளது. இது தரமற்றப் பொருட்கள் சந்தை விற்பனை செய்யப்படுவதை வெகுவாக குறைக்கிறது. தரமான பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவது, அமிர்தகால இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் உரிமை.
மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு, தரக் கட்டுப்பாட்டு உத்தரவுகள் முக்கியமானவை. மலிவான மின்னணுப் பொருட்களால் ஏற்படும் தீவிபத்துக்கள், பொம்மைகளில் உள்ள நச்சு ரசாயனங்களால், குழந்தைகள் பாதிக்கப்படுவது போன்றவை ஆபத்தானவை. இந்த அபாயங்களைக் குறைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறந்த எடுத்துக்காட்டு
நுகர்வோருக்கும், உற்பத்தியாளர்களுக்கும் உதவும் வகையில் தரக் கட்டுப்பாட்டைப் பயன்படுத்துவதில், பொம்மைத் தொழில், ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. தரக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதற்கு முன், இந்தியாவின் பொம்மை சந்தை, தரமற்ற மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய தயாரிப்புகளைக் கொண்டிருந்தது.
கடந்த, 2019-ல் இந்திய தரக் கவுன்சில் நடத்திய ஆய்வில், மூன்றில் ஒரு பங்கு பொம்மைகள் மட்டுமே, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தரநிலைகளைப் பின்பற்றுவது தெரியவந்தது.
இவற்றை பின்பற்றாத பொம்மைகளில் பெரும்பாலானவை, ஆபத்தானவையாக இருந்தன.
கடந்த, 2021 ஜனவரி 1- முதல் இத்துறைக்கான தரக்கட்டுப்பாட்டு உத்தரவு, அமலுக்கு வந்தது.
இதன் மூலம் இந்தியாவின் பொம்மைகளின் தரம், கணிசமாக மேம்பட்டுள்ளது. தற்போது, இந்திய சந்தையில் 84 சதவீத பொம்மைகள், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தரத்தைப் பின்பற்றுவதாக, அண்மைக்கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் நுகர்வோர் சாதனங்கள் மற்றும் பிற பொருட்களுக்கு, தரம் தொடர்பான பல விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
நவீன மீட்டர்கள், மின் விசிறிகள், தீயணைப்பான்கள், சமையல் உபகரணங்கள், பாத்திரங்கள், தண்ணீர் குடுவைகள், எரிவாயு அடுப்புகள் போன்ற பல பொருட்களுக்கும் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளைச் செயல்படுத்துவதற்கு முன்பு உற்பத்தியாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும், அரசு ஆலோசனை மேற்கொள்கிறது.
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களின் நலன்கள் பாதுகாக்கப்படுவதற்கு, சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. தொழில்துறை, போட்டித் தன்மையுடன் இருப்பதற்காக, தரத்தை மேம்படுத்த விரும்பும் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவளிக்க, அரசு எப்போதும் தயாராக உள்ளது.
சிறந்த நிர்வாகம், தரமான தயாரிப்புகள்
நம் நாட்டின், 140 கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் நோக்கத்திற்கு ஏற்ப உற்பத்தியையும் தரத்தையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அனைத்துத் துறைகளிலும் விரைவான வளர்ச்சியை எட்ட பிரதமர் நரேந்திர மோடி உறுதியான நடவடிக்கைகளை எடுத்து செயல்பட்டு வருகிறார். பிரதமரின் சிறந்த செயல்திறனும், ஊழலற்ற நிர்வாகமும் வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளன.
இதனால் உலக அளவில், இந்தியா ஒளிர்வதுடன், ஐந்து ஆண்டுகளில், 13.5 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.
-- - பியூஷ் கோயல்
மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்