sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சிந்தனைக் களம்

/

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

/

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?


PUBLISHED ON : செப் 10, 2022 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 10, 2022 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று சர்வதேச தற்கொலை தடுப்பு நாள். தற்கொலையை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள். உலக அளவில் ஆண்டிற்கு, 8 லட்சம் தற்கொலைகள் நிகழ்கின்றன. இந்தியாவில் ஒன்றரை லட்சம். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற சிந்தனையுடன் வாழ வேண்டும். வாழ்க்கையில் எதிர்பார்த்த நல்ல நிகழ்வுகளும், எதிர்பாரா இன்னல்களும் சுற்றிச்சுற்றி வரும்.வாழ்க்கை என்பது வெற்றியடையக்கூடிய ஒரே ஒரு இலக்கு அல்ல. பல மைல் கற்களை கடந்து, அனுபவிக்க வேண்டிய பல்லாயிரம் சந்தோஷங்கள். வெற்றிக்கும், சந்தோஷத்திற்கும் உள்ள வேற்றுமை அறியாமல் வாழ்கிறோம்.

வாழ்வதற்கு பல வழிகள்


நல்ல நிகழ்வுகளை கொண்டாடுகிறோம். இன்னல்களை கண்டு பயந்து ஓடுகிறோம். அவற்றை சந்தித்து, சமாளித்து, புத்திசாலித்தனமாக மீள முடியும். நம்பிக்கை இல்லாமல் சோர்வடைந்து, பயந்து, தோற்றுவிட்டோம் என்று நம்மை நாமே வருத்திக்கொள்கிறோம்.ஒரு தேர்விலோ, போட்டியிலோ தோல்வி அடைந்தால் என்ன? இந்த ஒரே ஒரு செயலுக்காக இந்த மண்ணில் தோன்றினோமா என, உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.இளம் வயதில் பல தடைகளை கடந்து, வாழ்க்கையில் சிறப்பு பெற்ற எத்தனை மனிதர்கள் நமக்கு உதாரணமாக வாழ்ந்துள்ளனர். அவர்களால் முடிந்தது நம்மால் முடியாதா?

நம்மை சுற்றியிருப்போர் என்ன நினைப்பர் என, நமக்கு நாமே ஒரு நிலையில்லா பிம்பத்தை ஏற்படுத்தி, நம்மை தண்டித்துக்கொள்கிறோம். இது மனச்சோர்வு, எதிலும் ஈடுபாடு இல்லா நிலை, தனியே வாழ்தல் என, பல பரிமாணங்களில் வெளிப்பட்டு, சில சமயம் தற்கொலை வரை செல்கிறது.இது ஒரு நொடி அல்லது பலநாள் சிந்தனையாக இருக்கலாம். வீழ்வதற்கு ஒரு வழி தேடும் முன், வாழ்வதற்கு பல வழிகளை நாடுங்களேன்.

Image 994356


தீர்வுகள் உண்டு


கணவன்- - மனைவி பிரச்னை, கடன் தொல்லை, பணக்கஷ்டம், வேலையில் மன அழுத்தம், காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, பாலியல் வன்முறை என, தற்கொலை, தன்னை காயப்படுத்திக் கொள்ளுதல் என்பதற்கு பல காரணங்களைக் கேள்விப்படுகிறோம்.நாம் நேர்மையாக வாழ்ந்தாலும், சில சமயங்களில் சமூகத்தால் துயரங்களுக்கு ஆளாகிறோம். அதற்காக நம்மை நாமே தண்டித்துக் கொள்கிறோம். ஆழமாக யோசித்தால், இவற்றுக்கு தீர்வு உண்டு.தற்கொலை செய்பவர்களின் ஒரு நொடி தவறான முடிவால், காலம் முழுதும் உற்றார், உறவினர் படும் கஷ்டங்களை, துயரங்களை யோசித்து பாருங்கள். பெற்றோர் எத்தனை கனவு, மனக்கோட்டை கட்டி இருப்பர்.

ஆரோக்கியமான உறவு


நம் சுற்றம், உற்றார் உறவினருடன் தொடர்ந்து ஆரோக்கியமான உறவு பேண வேண்டும். நமக்கு தெரிந்தவர் நடை, உடை, பாவனை, பழகுமுறை வித்தியாசமாக, விசித்திரமாக தோன்றினால், உதாரணமாக, தனிமைப்படுத்திக் கொள்ளுதல், எதிலும் ஈடுபாடற்ற நிலை, தற்கொலை பற்றி பேசுதல், பதட்ட நிலை, அழுத்தமான மனநிலை என எதுவாக இருந்தாலும், அவரிடம் நட்பும், அன்பும் பாராட்ட வேண்டும்.அந்த எண்ணத்திலிருந்து அவரை மீட்டு, எப்படி மாற்றலாம் என நினைத்து செயல்படுங்கள். அவரின் துயரங்களை, இன்னல்களை பொறுமையாக கேளுங்கள். அவர்களுக்காக நேரத்தை முழுமையாக செலவிடுங்கள்.எல்லோருக்கும் கஷ்டங்கள் வருவது இயற்கையே என்ற எண்ணத்தில் செயல்படுங்கள். தற்கொலை எண்ணங்களில் இருந்து வெளிவர உதவி மையங்கள் உள்ளன. அவற்றின் உதவியை நாடுங்கள். அவரை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்தி நீங்களும் உதவுங்கள்.

தடைக்கற்களை கடந்து...


எங்கேயாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தால், யாரும் அதை நியாயப்படுத்தவோ, கவுரவப்படுத்தவோ, களங்கப்படுத்தவோ முயற்சிக்க வேண்டாம். கேள்விப்பட்ட, உண்மைக்கு புறம்பான செய்திகளை எல்லோருக்கும் பகிர வேண்டாம்.

அந்தந்த நிகழ்வுக்கு அந்தந்த குடும்பத்தார் சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை செய்ய விட வேண்டும். தற்கொலை என்பது தீர்வு அல்ல. உங்களை ஈன்றோர்க்கும், சார்ந்தோர்க்கும் தாங்க முடியாத இழப்பு. உங்களின் உயிர் மதிக்கமுடியாத செல்வம். இதை புரிந்து பாரதியார் கேட்டது போல், இன்னல்கள் வரும் பொழுது, 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ' என, ஆணித்தரமாக அறைகூவலிடுங்கள்.கண்ணதாசன் பாடியது போல், 'வாழ நினைத்தால் வாழலாம்; வழியா இல்லை பூமியில்' என, தடைக்கற்களை கடந்து வாழுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!சுஜாதா சேதுராமன் , உளவியல் ஆலோசகர்






      Dinamalar
      Follow us