/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
நுாற்றாண்டு காணும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்
/
நுாற்றாண்டு காணும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்
PUBLISHED ON : மார் 30, 2025 12:00 AM

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் - ஆர்.எஸ்.எஸ்., நுாறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆனால், விழா எடுத்துக் கொண்டாடுவது நம் வழக்கமல்ல. மாறாக, கடந்து வந்த பாதையில் நாம் படித்த பாடங்கள் பற்றியும், அடுத்த இலக்கு என்ன என்றும் சிந்தித்து அதற்காக நம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்கான நேரம் இது எனக் கருதுகிறோம்.
இதுவரை எங்களை வழிநடத்திய பெரியவர்களையும், தவசீலர்களையும் மற்றும் சங்கத்திற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட பல லட்சம் ஸ்வயம் சேவகர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களையும், நினைவு கூர்வதற்கான நேரமிது.
சங்கம் கடந்து வந்த நுாற்றாண்டையும், இன்றைக்கு நம் லட்சியமான - ஒளிமயமான, உன்னதமான, ஒருமித்த பாரதம் உலக நன்மைக்கும், அமைதிக்கும், வளமான எதிர்காலத்திற்கும் மிக அத்தியாவசியம் என்பதை, மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்ல, இன்றைய நாளை விட மற்றொரு நாள் கிடையாது என்றே கூறலாம்.
கலப்படமில்லா அர்ப்பணிப்பு
ஆம்... இன்று ஆர்.எஸ்.எஸ்., பேரியக்கத்தின் ஸ்தாபகர் டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் பிறந்த தினம்; தவிர, உகாதி என்று கொண்டாடப்படும் ஹிந்து புதுவருட முதல் நாளும் கூட.
டாக்டர் ஹெட்கேவார், பிறவியிலேயே ஒரு தேசபக்தர். அவர் சிறு வயதில் செய்த செயல்களைப் பார்த்தாலே, அவர் பாரதத்தின் மீது வைத்திருந்த அளவுகடந்த அன்பு பற்றியும், கலப்படமில்லா அர்ப்பணிப்பு பற்றியும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
கோல்கத்தாவில் மருத்துவ படிப்பை முடிப்பதற்கு முன்பாகவே பாரதத்தை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க - ஆயுதம் ஏந்திய போராட்டத்திலிருந்து சத்தியாகிரகம் வரை, அனைத்து வழிவகைகளைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்திருந்தார்.
டாக்டர் ஜி என அன்புடன் அழைக்கப்பட்ட அவர், விடுதலைப் போராட்டத்திற்கான எந்த ஒரு முறையையும் சிறுமைப்படுத்தியதில்லை. வழி வேறாய் இருப்பினும், இலக்கு ஒன்றே என்பதன் அடிப்படையில், மரியாதை கொண்டிருந்தார்.
சமூக சீர்திருத்தங்களா, அரசியல் விடுதலையா என்ற விவாதம் வியாபித்திருந்த நேரம் அது. சமூகத்தின் மருத்துவர் போல் ஹெட்கேவார், நாம் சுதந்திரத்தை பறிகொடுத்ததற்கான மூன்று காரணங்களை கண்டறிந்தார். அவை...
நம் அன்றாட வாழ்க்கையில் தேசபக்தி இல்லாமல் போனது
பாரத கலாசாரம் சீர்கெட்டு, குறுகிய பார்வை கொண்ட சமுதாயமாய் மாறிப்போனது
ஒரே சமுதாயமாய், நாம் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை கைவிட்டது.
இவை மூன்றுமே அன்னிய சக்திகள் நம் நாட்டில் கால்பதித்ததற்கான முக்கிய காரணங்கள் என்று உணர்ந்தார்.
அடிக்கடி நிகழ்ந்த அன்னியப் படையெடுப்புக்களால், மக்கள் பாரதத்தின் அருமை பெருமைகளை மறந்துவிட்டதால், நம் கலாசாரத்தைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையும், அவநம்பிக்கையும் நம்மைச் சூழ்ந்திருப்பதை அவரால் அறிய முடிந்தது.
இந்த நிலையில் அரசியல் மட்டுமே செய்வதால், சமுதாயத்தில் உள்ள அடிப்படை பிரச்னைகளைக் களைந்து நாம் இழந்த தேசத்தை மீட்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார் ெஹட்கேவார். ஆகவே தேசத்தை மீட்டெடுக்க தங்களை அர்ப்பணித்துக்கொள்ள தயாராகவுள்ள ஒரு மக்கள் குழுவை அமைத்து, அந்தக் குழுவை சிறந்த முறையில் பயிற்சியளித்து தயார் செய்தார்.
இதற்காக, தனித்துவமான, மிகப் புதுமையான ஷாகா முறையை செயல்படுத்தினார். இன்றைய அளவிலும் இம்முறை அனைத்து தரப்பினராலும் சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யுக்தியாகப் பார்க்கப்படுகிறது.
சமூகத்திற்கான இயக்கம்
ஒரு புறம், அரசியல் விடுதலைக்கான போராட்டங்களில் தான் பங்கு கொண்டது மட்டுமல்லாமல், பிறரையும் ஊக்குவித்தார்; மறுபுறம், ஒட்டுமொத்த சமூகத்தை ஒரு புள்ளியில் ஒருங்கிணைக்கும் செயலில், தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
இந்த இயக்கம் சமூகத்தில் மற்றொரு இயக்கம் என்றில்லாமல், ஒட்டுமொத்த சமூகத்திற்கான இயக்கமாக இருக்க வேண்டும் என்பதில், மிகத் தெளிவாக இருந்தார் ெஹட்கேவார்.
நுாறாண்டுகள் ஆன பின்பும், லட்சக்கணக்கான இளைஞர்கள், இவர் கண்ட பாதையில் பயணித்து ஒரு ஒளிமயமான பாரதத்தை உருவாக்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட வண்ணம் உள்ளனர்.
சுதந்திரம் கிடைத்தபோது நம் பாரத மாதா, மதத்தின் பெயரால் துண்டாடப்பட்டாள். பிரிவினை நேரத்தில் ஏற்பட்ட கொடிய கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஹிந்து மக்களை சங்க ஸ்வயம் சேவகர்கள், பாகிஸ்தானிலிருந்து மீட்டு, அவர்கள் உயிரையும் மானத்தையும் காத்தது வரலாறு.
சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் - தலைவர், ஸ்ரீ குருஜி (மாதவ் சதாசிவ கோல்வால்கர்) அவர்களது காலத்தில் அந்நாளைய தேவைகளுக்கு ஏற்ப சங்கத்தின் செயல்பாடுகளில் சிறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
பண்பாடும் கலாசாரமும் செறிந்த பாரத்தின் பங்களிப்பு உலக நன்மைக்கு மிக அவசியம் என்பதை உணர்ந்திருந்தார் ஸ்ரீ குருஜி.
ஹிந்து சமுதாயத்தில் உள்ள துறவிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அவர்கள் மூலமாக வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும், வேதாந்தத்திலும், மனிதர்கள் மத்தியில் பிறப்பிலான பாகுபாடு என்பதற்கான இடமே இல்லை என்று பறைசாற்ற வைத்தார்.
'எமர்ெஜன்சி' எனப்படும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிறுவுவதற்கு ஸ்வயம் சேவகர்கள் முக்கிய பங்காற்றினர்.
தேசப்பாதுகாப்பு, எல்லை மேலாண்மை, கிராம வளர்ச்சி என்று தேசத்தின் அனைத்து துறைகளிலும் தங்கள் பங்களிப்பை ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
பெண்களின் பங்கு முக்கியம்
அனைத்து விஷங்களையும் அரசியல் கண்ணோட்டத்திலேயே கண்டு பழகியவர்களுக்கு மத்தியில், சங்கம் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, கலாசார மற்றும் சமுதாய விழிப்புணர்வு, ஒத்த கருத்துள்ள மக்களையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்தல் போன்ற முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துகிறது.
குடும்பம் என்ற அழகான அமைப்பை மீண்டும் அதன் பெருமைக்குரிய இடத்தில் வைப்பதே, சமுதாய சீர்திருத்தத்தின் முதல் படி என்பதையும் அதில் பெண்களின் பங்கு மிக முக்கியம் என்பதை உணர்ந்து, கடந்த பல வருடங்களாக, சங்கம் இதில் கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த ஒரு வருடத்தில் 10,000 புதிய ஷாகாக்களை ஆரம்பித்துள்ளோம். இது, மக்கள் மத்தியில் சங்கத்திற்கான வரவேற்பின் அறிகுறி. சங்கத்தின் முக்கிய குறிக்கோள், பாரதத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும், எல்லா பகுதிகளிலும் ஷாகாக்களை துவக்க வேண்டும் என்பது. இதற்கான முயற்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வரும் காலங்களில் சங்கத்தின் முக்கிய செயல்திட்டமாக பஞ்ச பரிவர்த்தன் எனப்படும் ஐந்து முன்னெடுப்புகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல உள்ளோம்.
குடிமக்கள் கடமைகள் பற்றி எடுத்துச் சொல்லுதல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
சமூக நல்லிணக்கம் பேணுதல்
குடும்ப நலன் பாதுகாத்தல்
'ஸ்வ' எனப்படும் சிந்தனையிலும் செயலிலும் சுயத்தன்மை.
இந்த ஐம்பெரும் மாற்றங்களை உருவாக்கி, நம் தேசத்தை புகழின் உச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும். -'பரம்வைபவம் நேதுமேதத் ஸ்வராஷ்ட்ரம்' என்பது சங்கத்தின் பிரார்த்தனை.
நுாறு ஆண்டுகளாய், தேச நிர்மாண பணியில் ஈடுபட்டுள்ள சங்கம், புறக்கணிப்பு, அவமானங்கள், அவர்கள் என்ன தான் செய்கின்றனர் என்று பார்ப்போம் என்ற ஆர்வம், என்று பல கட்டங்களைக் கடந்து, இன்று பலதரப்பட்ட மக்களால் அங்கீகரிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது.
யாரும் எதிரிகள் கிடையாது
சங்கத்திற்கு யாரும் எதிரிகள் கிடையாது, இன்று நம்மை எதிர்ப்பவரும், ஒரு நாள் நம்மை ஏற்று சங்கத்தில் இணைவர் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது.
உலகம் தட்பவெப்ப நிலை மாற்றங்கள், தீவிரவாத அச்சுறுத்தல், போர் என்று பலதரப்பட்ட, சவால்களை எதிர்கொண்டிருக்கும் இந்த சமயத்தில், பாரதம் தன் ஞான பாரம்பரியத்தின் உதவியோடு இந்த சவால்களுக்கான தீர்வை அளிக்கும் இடத்தில் இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இது வெளியிலிருந்து பார்க்கும்போது, ஒரு மலை போல் தோன்றினாலும், பாரதமாதாவின் குழந்தைகளான நாம் எல்லோரும் சேர்ந்து நம் கடமைகளைச் செய்து, பிறரையும் ஊக்குவித்தால், இந்தக் கனவு மெய்ப்படும்.
பாரதத்தை உலக நாடுகளுக்கான ஒரு முன்மாதிரியாக மாற்ற நாம் ஒவ்வொருவரும் சங்கல்பம் எடுத்து, அந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் நேரமிது.
'ஸஜ்ஜன' சக்தி எனப்படும் நல்லோர் சக்தியை குதிரையாக்கி, பாரதம் என்ற ரதத்தை, உலகின் குருவாக ஆக்கும் பாதையில் விரைந்து செலுத்துவோம், வாருங்கள்!
தத்தாத்ரேய ஹோசபலே
பொதுச்செயலர்,
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம்