தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்தனைக் களம்/இன்று காதலர் தினம்: 'உன்னிடம் மட்டும் காதல்' என்று சொல்வது நிறைவான அன்பல்ல !

இன்று காதலர் தினம்: 'உன்னிடம் மட்டும் காதல்' என்று சொல்வது நிறைவான அன்பல்ல !

இன்று காதலர் தினம்: 'உன்னிடம் மட்டும் காதல்' என்று சொல்வது நிறைவான அன்பல்ல !


PUBLISHED ON : பிப் 14, 2026 05:18 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 14, 2026 05:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- முனைவர் கு. ஜெயந்தி ராணி

உளவியலாளர்

98419 82033  kjayanthiranipsychologist@gmail. com

ஊடகம், வாழ்வின் எதிரொலியா அல்லது வாழ்வு, ஊடகத்தின் தாக்கமா?



இது ஒரு வாதத்திற்குரிய கேள்வியாகவே தொடர்ந்து வருகிறது. 2012ல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படப் பாடல், 'இன்று காதலில் தற்கொலைகள் குறைஞ்சே போச்சு' என்று விசனப்பட்டது. பல காரணங்களுக்காக நிகழும் தற்கொலைகளுள் ஒரு காரணமேனும் குறைந்ததே என்று மகிழ்ச்சியுறத் தானே வேண்டும்... அதற்கு வருத்தப்படுவானேன்!

இது ஒரு சமூக மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கான குறியீடு. விமரிசையாக வரவேற்கப்பட வேண்டும்.

அடுத்த 10 ஆண்டு காலத்திற்குள் பல வகை உறவு நிலைகளை பேசிய, 2025ல் வெளியான ஒரு தமிழ் திரைப்படம், இளைய தலைமுறையினரின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

'ஏமாற்றங்களை ஏற்றுக் கொள்வதும், கடந்து போவதுமே காதல்; தன்னை அழித்துக் கொள்வதும், விரும்பியவரை வருந்த வைப்பதும் அன்று' என்று இளைஞர்கள் உணர்ந்து கொண்டதன் அறிகுறியாகவே, இந்த வரவேற்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

உளவியலாளர் ராபர்ட் ஸ்டெர்ன்பெர்க், 'பேரார்வம், நெருக்கம், அர்ப்பணிப்பு' என்ற காதலின் மூன்று கோணங்களையும், அதன் அடிப்படையில் விளங்கும் உறவுகளையும் விளக்குகிறார்.

இளமைப் பருவத்தில் பற்றிக் கொள்ளும் தீயாக, உணர்ச்சிமிக்க காதல், இளையவர்களை ஈர்க்கிறது. இது பேரார்வம், நெருக்கம் ஆகிய இரண்டின் கலப்பால் உருவாவது. அமரத்துவம் வாய்ந்ததும், இலக்கிய இலக்கணங்களை கொண்டதாகவும் சித்தரிக்கப்படுகிறது, உணர்ச்சிமிக்க காதல்.

பதின்பருவ துவக்கத்தில் ஏற்படும் உடல் ரீதியான மாறுதல்களால், ஹார்மோன்களால் பற்ற வைக்கப்படும் மாயத் தீ இது. எனினும், அது காட்டுத்தீயா, கட்டுப்படுத்தப்பட்ட தீயா என்பதை, சமூக மற்றும் கலாசார எல்லைகள் தீர்மானிக்கின்றன. காதலர் தினமும், அதன் பொருட்டு ஏற்பட்ட வணிகமும், இவர்களையே இலக்காக கொள்கின்றன.

முதல் முறை அல்லது சில முறை வாழ்த்துகளையும், பரிசுகளையும் பகிர்ந்து கொள்ளும் இணையர், காலப்போக்கில் இவ்வழக்கத்தை உதறுவது ஏன்? பழக்கம் உதறியவர்களிடம் காதல் காணாமல் போய்விடுமா? இல்லை என்று மறுக்கிறது உளவியல்!

தோழமை காதல் என்பது நெருக்கம் மற்றும் அர்ப்பணிப்பின் கலப்பால் விளைவது. உணர்ச்சிமிக்க காதலின் நெருப்பு இதில் அணைந்து போனாலும், குளிர் காலத்து கம்பளி கதகதப்பை போல, ஆண்டாண்டு காலம் ஆதரவை பற்றிக் கொள்வது, தோழமை காதலின் மகத்துவம்.

ஆரம்ப கால பேரார்வம் இல்லை என்றாலும், நெருக்கம் மற்றும் நெருக்கடி நேரங்களிலும் விலகாத அர்ப்பணிப்பு, தோழமை உணர்வை தக்க வைக்கிறது . நிறை, குறை அனைவரிடத்தும் உண்டு என உணர்ந்து, நிறை குணங்களை சிலாகித்து, குறைகளை அனுசரித்து, வாழ்க்கை பயணத்தில் இவர்களால், ஒன்றாக நண்பர்களாக பயணிக்க முடிகிறது.

நெருப்பாக பற்றிக் கொண்ட காதல், ஏன் நீர்த்துப் போகிறது? உறவுகளை உயிர்ப்புடன் தழைக்கச் செய்வது எப்படி?

'உரிமை' என மூக்கை நுழைக்காதீர்கள்

பற்றுணர்வு, மனிதர்களின் வாழ்வை சுழலச் செய்கிறது; அர்த்தம் சேர்க்கிறது. நம் மேல் அக்கறை கொண்டவர்கள் இருக்கின்றனர் என்ற சிந்தனை, நம்மை தொய்வில்லாமல் இயங்க செய்கிறது; உற்சாகமூட்டுகிறது. ஆனால் அந்த பற்று, உடும்புப் பிடியாக இருக்க கூடாது; மூச்சு முட்டச் செய்யக் கூடாது.

உரிமை என்ற பெயரில், ஒவ்வொரு செயலிலும் மூக்கை நுழைப்பது, நிபந்தனைகளின் அடிப்படையில் அன்பு செலுத்துவது, காதலாகாது.

தன் மீதே உயர்ந்த மதிப்பு கொண்டவர்கள், தன்னிறைவு கொண்டவர்கள், பாதுகாப்புணர்வு மிக்கவர் ஆகியோர்களாலேயே, மரத்தை பற்றி இருக்கும் வேர் போல, உறவை தாங்கிப் பிடிக்கவும், அன்பு கொண்டவரின் வளர்ச்சிக்கு தடையின்றி துணை நிற்கவும் முடியும்.

சிறு வயதிலிருந்து அவர்கள் வளர்ந்த சூழல் எப்படிப்பட்டது; அதில் அவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகள், சவால்களில் இருந்து அவர்களுக்கு கிட்டிய பாடங்கள் ஆகியவை, பாதுகாப்புணர்வை தீர்மானிக்கின்றன.

ஆகவே, காதலர்களே... காதலால் கனியும் குழந்தைகளுக்கு நீங்கள் ஊட்டும் பாதுகாப்புணர்வு, அடுத்த தலைமுறை காதலை தழைக்க செய்யும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

ஐந்து காதல் மொழிகள்

வாழ்க்கை பயணத்தில் நீண்ட துாரம் பயணிக்கும் உறவுகள், மிதிவண்டியின் சக்கரம் போல, சம நிலையில் இயங்க வேண்டும்.

கேரி சேப்மேன் என்பவர், ஐந்து காதல் மொழிகளை பற்றி பேசுகிறார்.

1 பாராட்டு, அன்பு, மொழி, ஊக்கப்படுத்தும் பேச்சு போன்ற வார்த்தைகளில் வெளிப்படுத்தப்படும் காதல் மொழி

2 எந்த கவனச்சிதறலும் இல்லாமல் துணையுடன் செலவிடும் தரமான நேரம்

3 அன்பின் அடையாளமாக பரிசுகளை பகிர்ந்து கொள்ளுதல்

4 காதலை வெளிப்படுத்தும் விதமாக துணைவரின் வேலைகளை பகிர்ந்து கொள்ளுதல்

5 உடல் ரீதியான நெருக்கத்தின் மூலம் அன்பை வெளிப்படுத்துதல்

இப்படியாக காதல் மொழி எதுவாயினும், அது இரு வழி பாதையாக இருத்தல் வேண்டும். மிகவும் அவசியமான நேரத்தில், எதையும் எதிர்பாராத மழையை போல் பொழியும் அன்பில் தான் காதல் துளிர்கிறது. கொடுத்தலும், பெறுதலும் பரஸ்பரம் இருக்க வேண்டும்; அதே வேளையில் வியாபாரப் போக்கிலும் நிகழக்கூடாது.

நிபந்தனையற்ற அன்பு

நம்மிடம் நெருக்கமாக உள்ளவர்களிடம், சுய வெளிப்பாடு அதிகமாக நிகழ்கிறது. நம் விருப்பு, வெறுப்பு, பயம், பலவீனம் என்று எல்லாரிடமும் சொல்ல தயங்கும் விஷயங்களை, தடையின்றி நமக்கு நெருக்கமானவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நாம் இவ்வாறு தடையின்றி விஷயங்களை பகிர்ந்து கொள்பவர், நமக்கு நெருக்கமானவர்களாகவும் மாறுகிறார். ஆனால், இது எவ்வாறு நிகழ்கிறது... இணையர் நம்மிடம் சொல்ல வரும் விஷயங்களை, எந்த அனுமானங்களும், தீர்மானங்களும் இன்றி, கவனச் சிதறலின்றி, முழு மனதுடன் காது கொடுத்து கேட்க வேண்டும்.

கோடிட்ட வரைமுறைகளை கடக்கும்போது, நிபந்தனையற்ற அன்பு ஏற்படுகிறது. நம் மனசாட்சியுடன் பேசுவது போல், எந்த, 'எடிட்டிங்'கும் இல்லாமல், வாழ்க்கைத் துணையுடன் பேச முடிந்தால், அதுவே சிறந்த உறவு.

முன்னேற்றம் தரும் கருவி, காதல்!

இணையரை தேர்ந்தெடுக்கும்போது, பலரும், ஒத்த விருப்பங்கள் உள்ளவரை தேடுவர். ஒரு சிலரோ, நேர் எதிரான குணங்களை கொண்டவர்கள் மீது ஈர்ப்பு கொள்வர். இந்த இரண்டும் அல்லாமல், ஒன்றொடொன்று ஒத்துப் போகும் இயல்பே, ஈர்ப்பை நிலைக்க வைக்கும்.

'நீ கொஞ்சம் நானாக, நான் கொஞ்சம் நீயாக' என்று ஆகும் காதலில், 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்' ஆகிறது. காதல் ஒரு மயக்கமல்ல; அது ஒரு முன்னேற்றக் கருவி.

உங்கள் முழுமையான வெளிப்பாடு மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடு, உங்கள் இணையின் துணையால் நிகழ்கிறது என்றால், அந்த உறவு ஆழமாக வேர்ப்பிடித்துக் கொள்ளும்; எந்த சூழலிலும் அசையாது.

'உன்னிடம் மட்டும்' என்றால்...

அன்பு, பயில பயில பழக்கமாகிறது; விரிவடைகிறது.

உளவியலாளர் எரிக் ப்ராம், 'அன்பு ஒரு நபருடனான உறவு அன்று; அது ஒரு அணுகுமுறை. அது ஒரு நபருடன் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உலகத்துடனும் உள்ள தொடர்பை தீர்மானிக்கும் பண்பின் நோக்கு நிலை.

ஒரு நபர், இன்னொரு நபர் மீது மட்டும் அன்பு செலுத்தி, பிற சக மனிதர்களுடன் அலட்சியமாக நடந்து கொண்டால், அது கூட்டு வாழ்வு இணைப்போ அல்லது பெரிதுபட்ட அகங்காரமோ அன்றி, அன்பு ஆகாது. ஆயினும் பலர், 'அன்பு பொருளினால் ஆனது, சிந்தையால் அன்று' என எண்ணுகின்றனர்' என்று கூறுகிறார்.

'உன் மேல் அன்பு செலுத்துகிறேன்; ஆனால் உன் குடும்பத்தினரை பிடிக்காது. உன் நண்பர்களை வெறுக்கிறேன்' என்பதெல்லாம், காதலில் சொதப்புவது எப்படி என்ற ரகம்!

அன்பு, தனிநபரை கடந்து சுற்றத்தாரையும், அனைத்து மனிதர்களையும், ஏன்... அனைத்து உயிர்களையும் நேசிக்கச் செய்யும். அன்பின் மகத்துவம், மிகப்பெரியது. ஊற்றெடுக்கும் சிறு நதி, பெருக்கெடுத்து பாய்ந்தோடி, வழியெல்லாம் வளம் சேர்ப்பதை போல, அன்பில் நிறைந்தவர், பெருகி பயன் கொடுப்பர்!

'காதலினால் மானிடர்க்கு கவிதை உண்டாம்

கானமுண்டாம் சிற்ப முதற் கலைகள் உண்டாம்' என்றார் மகாகவி பாரதி.

வாரிக் கொடுக்க நிறைய உண்டு, காதலில்; அவற்றையே வழங்குங்கள்; பெற்றுக் கொள்ளுங்கள், காதல் பரிசாக!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us