/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
புதிய அரசுக்கு தொழில் துறை சொல்லும் சேதி!
/
புதிய அரசுக்கு தொழில் துறை சொல்லும் சேதி!
PUBLISHED ON : ஜூன் 18, 2024 12:00 AM

பிரதமர் நரேந்திர மோடி, நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டு வென்று, பிரதமர் எனும் சிறப்பை பெற்றுள்ளார். இதற்கு முன், 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பதவி ஏற்றதற்கும், இப்போது பதவி ஏற்றுள்ளதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அப்போதெல்லாம் தனிப்பெரும்பான்மை அரசாக இருந்தது. இப்போது கூட்டணி பலத்துடன், மோடி அரசு ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.
அதற்காக, தன் அரசின் கொள்கை, கோட்பாடுகளை விட்டு விலகாமல் ஆட்சி நடத்துவதற்கு ஏதுவாக, தன் ஆஸ்தான அமைச்சர்களை முக்கிய துறைகளில், கேபினட் பொறுப்பில் அமர்த்தி, 'மோடியின் பரிவார்' தன் நடவடிக்கைகளை துவங்கி விட்டது.
பாதுகாப்பு துறைக்கான உள்நாட்டு ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் தயாரிப்பதற்கான ஏற்பாடு, உள்நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி தயாரிப்பு, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு அவசியமான, 'செமி கண்டக்டர்' உற்பத்தி, கச்சா எண்ணெய் தேவைக்காக, அன்னிய செலாவணி அதிகம் செலவழிக்காமல் மாற்று எரிசக்தி, ரயில்வே துறை நவீனப்படுத்துதல் போன்று நாட்டின் வளர்ச்சிக்கான அடிப்படை அம்சங்களில், கடந்த 10 ஆண்டுகளில் கவனம் செலுத்தப்பட்டது.
அட்சய பாத்திரம்
இனி வரும் ஐந்தாண்டுகளில் மோடி அரசுக்கு, கூட்டணிக்குள்ளும், நாட்டிற்குள்ளும், எல்லைக்கு அப்பாலும் நிறைய சவால்கள் காத்திருக்கின்றன. நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் பிரசாரங்களில், ஏழை - பணக்கார இடைவெளி அதிகரிப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை தான் முக்கிய பிரச்னையாக பேசப்பட்டது.
இந்த உலகமே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் போல, நவீன தொழில்நுட்பத்திற்கு மாறி வரும் வேளையில், இந்தியா மட்டும் அதில் இருந்து எளிதில் தப்பிவிட முடியாது.
சில ஆண்டுகளாக, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் உள்ள கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் போன்ற நிறுவனங்களே, ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்து, லாபம் குறையாத முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
உலக மக்கள் தொகையில், 'நம்பர் ஒன்' நாடாக இந்தியா மாறியுள்ள சூழ்நிலையில், பெருகி வரும் இளைஞர் சக்திக்கு வேலைவாய்ப்பு அளிப்பது, எந்த அரசுக்கும் மிகவும் சவாலான ஒன்று. 140 கோடியை தாண்டி விட்ட நாட்டின் மக்கள் தொகையில், 30 வயதுக்கு கீழே இருக்கும், 30 சதவீதம் பேருக்கு வேலை அளிப்பது பெரிய சவால் தான்.
ஆனால், அதற்கான அட்சய பாத்திரம் நம்மிடமே இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 44 நாடுகளை கொண்ட ஐரோப்பாவின் மக்கள் தொகையே, 74 கோடி தான். அதைவிட, இரு மடங்கு மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், அதிலும் பாதி இளைஞர் சக்தியுடைய தனித்துவம் கொண்ட நாட்டில், உள்நாட்டிலேயே வேலைவாய்ப்பு உருவாக்குவது மிகவும் சாத்தியமான ஒன்று.
புதுமை தொழில்
இங்குள்ள மக்கள் தொகைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்து, சப்ளை செய்வதே, 50 நாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கு சமம்.
ஒரு புறம் விவசாயத்துறை, அதன் பிறகு, ஜவுளி தொழில் துறை, அதற்கடுத்ததாக, உற்பத்தித் துறையை உள்ளடக்கிய குறு, சிறு, நடுத்தர தொழில் துறைகள் என்று வேலைவாய்ப்புக்கான பெரும் தொழில் தாழ்வாரங்கள் இந்தியாவில் பெருகி, படர்ந்து கிடக்கின்றன.
சேவைத்துறைகள் வேறு தனி பாதையில் பாய்ச்சல் காட்டுகின்றன. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியதுறை, குறு, சிறு, நடுத்தர தொழில்துறை என்று சொல்லப்படும் எம்.எஸ்.எம்.இ., தொழில்கள் துறை தான். நாட்டின் முதுகெலும்பு போல, பரவலாக மாநிலங்கள், மாவட்டங்கள் தோறும் குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் நாடு முழுவதும் அமைந்துள்ளன. அதன் வாயிலாக கோடிக்கணக்கானோருக்கு வேலை கிடைத்து வருகிறது.
சில ஆண்டுகளாக, புதுமை தொழில் கண்டுபிடிப்புகளுக்காக, கவனம் பெற்ற, 'ஸ்டார்ட்--அப்' துறை துடிப்புடன் முன்னேறி வருகிறது. அதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வரும் மத்திய, மாநில அரசுகள், எம்.எஸ்.எம்.இ., தொழில் துறைக்கு தேவையான கவனம் கொடுக்கவில்லை என்ற எண்ணம் அந்த துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும், 90 சதவீத வர்த்தகம், எம்.எஸ்.எம்.இ., வாயிலாக தான் நடக்கின்றன. இதனால், 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்தத் துறையை நம்பி, 50 சதவீத, ஜி.டி.பி., இருக்கிறது.
வரும் 2030ம் ஆண்டு, உலகத்தில், 60 கோடி வேலைகள் தேவை என்றும், அதற்கு, எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்களே முக்கிய பங்களிக்கும் என்றும் உலக வங்கி கூறுகிறது.
வழிகாட்டு நெறிமுறை
இந்தியாவைப் பொறுத்தவரை, 6.30 கோடி, எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இதனால், 30 சதவீதம் ஜி.டி.பி., கிடைக்கிறது. ஏற்றுமதிக்கு 46 சதவீதம் பங்களிக்கிறது. 19 கோடி மக்களுக்கு வேலை கிடைத்துள்ளது
.
எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்களுக்கு, 70 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆனால், 10.9 லட்சம் கோடி மட்டுமே அவர்களுக்கு வங்கிகள் வாயிலாக கிடைக்கிறது.
எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்கள் தங்கள் கணக்குகளை முறைப்படுத்தி, நிதி நிலை அறிக்கைகளை தயாரித்தால், இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளில் இருந்தும் கடன் மட்டுமல்ல, முதலீட்டையும் ஈர்க்க முடியும். எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்கள் கடன் பெறுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மொத்தம், 806 மாவட்டங்களை கொண்ட நம் நாட்டில், எம்.எஸ்.எம்.இ., தொழில்கள் பரந்து விரிந்து பெருகியுள்ளன.
இந்த, 806 மாவட்டங்களில் உள்ள வளங்கள், அதன் அடிப்படையிலான தொழில்கள், தொழில் திறன் மேம்பாடு, மனித வளம், அந்தப்பகுதி எம்.எஸ்.எம்.இ., தொழில்களுக்கான உள்கட்டமைப்பு, போக்குவரத்து, நேரடி, ஆன்லைன் சந்தைகள், ஏற்றுமதி வாய்ப்புகள் இப்படி பட்டியலிட்டால், ஒரு தனி பட்ஜெட்டிற்கான முழு தகுதியும் எம்.எஸ்.எம்.இ., தொழில்துறைக்கு இருக்கிறது.
எம்.எஸ்.எம்.இ., தொழில் துறைக்கான மத்திய குழுவில், பிரதமர், நிதியமைச்சர், தொழிற்துறை அமைச்சர், விமான, கப்பல், தரைவழி போக்குவரத்து அமைச்சர்கள், தகவல் தொழில்நுட்பத்துறை, வெளியுறவு அமைச்சர்கள் / அமைச்சகங்கள் கூட்டாக இணைந்து செயல்பட்டால், வெளிநாட்டு முதலீடு / வெளிநாட்டு நிறுவனங்களை காட்டிலும், எம்.எஸ்.எம்.இ., தொழில் துறை மிகப்பெரிய சாதனை உற்பத்தி / ஏற்றுமதியை நிகழ்த்தும் என்பது நிச்சயம்.
மேலும், எம்.எஸ்.எம்.இ., தொழில்துறைக்கு உதவும் வகையில், நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.,களை ஒருங்கிணைத்து அந்தந்தப்பகுதி தொழில்களுக்கு ஏற்ற செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ., பயன்பாடு, தகவல் தொழில்நுட்பங்களை பகிர்வது காலத்தின் கட்டாயம்.
எதிர்பார்ப்பு என்ன?
* எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்களிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு, 45 நாட்களுக்குள் பணம் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால், அந்தத் தொகை வருமானமாகக் கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை, மத்திய அரசு கொண்டு வந்தது.
இதன் காரணமாக, எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்கள் வாங்குவதையே பெரிய நிறுவனங்கள் நிறுத்தி விட்டதாக பெரிய குறை எழுந்துள்ளது. இதை சரிசெய்ய புதிய அரசு துரித நடவடிக்கை எடுப்பது அவசியம்
* புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு, ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கு கொடுப்பதைப் போன்றே எம்.எஸ்.எம்.இ., தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று நம்புவோம்
* ஜி.எஸ்.டி., துறையிலிருந்து வரும் தேவையற்ற நோட்டீஸ்களை, புதிய அரசு குறைத்தால் தொழில் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும்
* வருமான வரித்துறையின் சட்டம், பிரிவு 115 பி.ஏ.பி.,யின் கீழ், புதிதாக நிறுவப்பட்ட உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள், 15 சதவீதம் மட்டுமே வரி செலுத்தினால் போதும் என்ற சலுகை, 2024 மார்ச் 31ம் தேதியுடன் முடிந்து விட்டது.
அதை மேலும் நீட்டித்தால் புதிய நிறுவனங்கள் துவங்குவதற்கு வாய்ப்பு ஏற்படும். அதையும் புதிய மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
'வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்' என்று அவ்வையார் வாழ்த்தியதுபோல, எம்.எஸ்.எம்.இ., உயர்ந்தால், நம் நாடு உயரும், நம் நாடு உயர்ந்தால், இந்த உலகமே பயன்பெறும் என்று உறுதிபட நம்பலாம்.
தொடர்புக்கு:
ஜி.கார்த்திகேயன்,
ஆடிட்டர்
Karthikeyan.auditor@gmail.com