/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
சிந்தனைக்களம்: நியாயத்துக்கு அப்பாற்பட்டதல்ல சட்டம்
/
சிந்தனைக்களம்: நியாயத்துக்கு அப்பாற்பட்டதல்ல சட்டம்
சிந்தனைக்களம்: நியாயத்துக்கு அப்பாற்பட்டதல்ல சட்டம்
சிந்தனைக்களம்: நியாயத்துக்கு அப்பாற்பட்டதல்ல சட்டம்
PUBLISHED ON : ஜூன் 16, 2025 12:00 AM

ஷேக்ஸ்பியரின், 'மெர்ச்சன்ட் ஆப் வெனிஸ்' நாடகத்தில் ஒரு காட்சி; தன் காதலன் ஆன்டோனியாவுக்காக, நீதிமன்றத்தில் வாதாடும் பெர்ஷியா, ஷைலாக்கிடம், 'கருணை காட்டுவது தர்மம்' என்று வாதிடுகிறாள். 'எந்த சட்டம் அப்படி கூறுகிறது?' என்று கேட்கிறான் ஷைலாக். அவள் பேசியது, தர்மம்; அவன் பேசியது சட்டம் என்று, சட்டத்துக்கும் நியாயத்துக்கும் இடையே நிலவும் இடைவெளியை படம் பிடித்துக் காட்டுகிறார் ஷேக்ஸ்பியர்.
சமீபத்தில் சமூக வலைதளத்தில் வந்த வீடியோ காட்சியில், நீதிபதி ஒருவர் ஒரு அப்பாவி அரசு வழக்கறிஞரிடம், காவல் நிலையத்தில் வீடியோ எடுப்பதை எந்த சட்டம் தடை செய்கிறது என்று கேட்க, அந்த வழக்கறிஞர் பதில் கூற இயலாமல் ஏதோ சொல்லி சமாளிக்கிறார். நீதிபதி அவரை உரத்த குரலில் உட்காரச் சொல்கிறார்.
நடவடிக்கை
காவல் நிலையம், யார் வேண்டுமானலும் உள்ளே புகுந்து வேடிக்கை பார்க்கவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்ட பொழுது போக்கு இடமல்ல.
ஒரு குறிப்பிட்ட கோரிக்கையுடன் பாதுகாப்பு வேண்டி, பாதிக்கப்பட்டவர்கள் எதிர்தரப்பினர் மீது நடவடிக்கை கோரி அல்லது ஏதாவது சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்ற நிகழ்வு சம்பந்தமான தகவல்களை தெரிவிக்கும் நோக்கத்துடன், அங்குஅலுவலில் உள்ள நிலைய பாதுகாப்பு காவலர் அல்லது வரவேற்பு பணியில் உள்ள காவலர் அனுமதியுடன் உள்ளே சென்று சம்பந்தப்பட்ட நிலைய பொறுப்பு அதிகாரியை சந்தித்து வர மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மொத்தத்தில் காவல் நிலையம், பொதுமக்கள் யாராக இருந்தாலும், சரியான காரணத்துக்காக முறையாக அனுமதிபெற்று உள்ளே செல்லும் உரிமையுள்ள ஒரு அரசு அலுவலகம்.
அங்கு துப்பாக்கி, தோட்டாக்கள் போன்ற உயிரை கொல்லக்கூடிய ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே தான் காவல் நிலையத்தில் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
அங்கு பல குற்ற வழக்குகளின் முக்கிய ஆவணங்கள், கோப்புகள் தடயங்கள் பராமரிக்கப்படுகின்றன. அந்த விபரங்களை வெளியிடச்சொல்லி ஒரு காவல் அதிகாரியை கட்டாயப்படுத்த முடியாது.
குற்ற நடைமுறை சட்டத்திலும், தகவல் உரிமை சட்டம் மட்டுமின்றி, அலுவலக ரகசிய பாதுகாப்பு சட்டத்திலும், அதற்கான சலுகை மற்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஒரு விசாரணை அதிகாரி, தான் விசாரித்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் வகையில் நிரூபித்தாக வேண்டும். எதிர்தரப்பு வழக்கறிஞரின் சந்தேகத்தை கிளப்பும் முயற்சியை முறியடித்தாக வேண்டும்.
இந்த சட்டத்தின் தேவையை பூர்த்தி செய்ய, தான் மேற்கொண்ட விசாரணை முறையை கோர்வைப்படுத்தும் முயற்சியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அது நல்ல நோக்கத்துடன் ஆவணப்படுத்தலில் செய்யப்படும் மாற்றம். வழக்கின் உண்மை தன்மையில் சற்றும் குறுக்கிடாத மாற்றம். அதைத்தான் வெளியிடத் தேவையற்ற விசாரணை நுணுக்கம் என்கிறோம். தகவல் அறியும் சட்டத்திலும், இந்த நுணுக்கங்களுக்கே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தை ஒரு நபர், தன் சொந்த விருப்பத்தில் வீடியோ எடுக்க அனுமதி கிடையாது என்பது, நீதிபதிக்கு தெரியாமல் இருப்பது விந்தையானது, துரதிருஷ்டவசமானது.
இந்த உண்மை தெரியாத நிலையில், அரசு வழக்கறிஞர் ஒருவர் இருப்பதும் ஒரு அவலமான நிலையே.
ஒரு குற்றவாளி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை எனப்படும் விசாரணை இறுதி அறிக்கை சமர்ப்பிக்கும் போது, அது தொடர்பான நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்கள், குற்றம் சார்ந்த அறிவியல் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆய்வு அறிக்கை மற்றும் ஆவணங்கள் இணைக்கப்படும்.
அனுமதி சீட்டு
விசாரணை அதிகாரி அந்த வழக்கில் தகவல் பெற்ற விதம், அதற்காக அவர் எடுத்த முயற்சிகள், தொடர்பு கொண்ட நபர்கள், தகவல் கொடுத்து உதவியவர்கள் பற்றிய விபரங்களை உயர் அதிகாரிகளின் பார்வைக்காக, தேதி, நேரம் வாரியாக அவரது வழக்கு நாட்குறிப்பில் எழுதியனுப்புவார். அதன் நகலை வழக்கு கோப்பில் இணைத்திருப்பார்.
அந்தக் குறிப்பின் நகலை, குற்றவாளிக்கு நீதிமன்றம் மூலமாகக் கொடுக்கப்படும் குற்றப்பத்திரிகை நகலுடன் கொடுக்க வேண்டியதில்லை. குற்றவாளி தரப்பில் ஐயப்பாடுகள் ஏதும் எழுப்பப்பட்டால், அதைப் போக்கும் நோக்கத்துடன் நீதிபதி விரும்பினால், அந்த குறிப்பைத் தன் முன் ஆஜர்படுத்தக்கோரி, பார்வையிட்டு சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
பொது இடம் என, அறிவிக்கப்பட்ட இடங்களும் ஒரு சட்ட வரையறைக்கு உட்பட்டதே, ஒரு திரையரங்கம், அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு, பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நேரம் முதல், காட்சி முடிந்து அனைவரும் வெளியேறும் வரை தான் அது பொது இடம். வாங்கிய அனுமதிச் சீட்டு அந்த குறிப்பிட்ட கால எல்லைக்கும், அரங்கின் குறிப்பிட்ட பகுதிக்கும்தான் செல்லுபடியாகும்.
ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள், உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதை கூட, அவர்களது பணி நேரத்தில் மட்டுமே செய்ய முடியும்.
பணி நேரம் கடந்து உள்ளே இருந்தால், அது அத்துமீறிய நுழைவாக கருதப்பட்டு, தொழிற்சாலை உரிமையாளரின் புகாரில், ஊழியர்களை அப்புறப்படுத்தவும், தேவைப்பட்டால் கைது செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது.
எல்லா துறைகளிலும், திறமையற்றவர்கள் நேர்மையில்லாதவர்கள் இருப்பது போல, நீதித்துறையிலும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் இருக்கின்றனர் என்பது தான் உண்மை.
அதை அந்தத் துறையில் உள்ளவர்களும், வழக்கறிஞர்களுமே ஒப்புக் கொள்கின்றனர்.
சில நேர்மையான, சட்டம் தெரிந்த நீதிபதிகள் மனசாட்சியோடு வழக்கை ஆராய்ந்து, அதிகாரிகளின் தவறான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நியாயமான தீர்ப்பை வழங்கினாலும், ஆணவமிக்க அதிகாரிகள் அதை செயல்படுத்தாமல் மேல்முறையீடு என்ற பெயரில் இழுத்தடித்து பாதிக்கப்பட்டவர்களை மேலும் சிரமத்துக்கு ஆளாக்குகின்றனர்.
எங்களுக்கு சிரமமும், செலவும் இல்லை; அரசு வழக்கறிஞர்களை வைத்து வழக்கு நடத்துகிறோம். உனக்குத் தான் சிரமமும் செலவும் என்று, பாதிக்கப்பட்ட அப்பாவிகளை வெளிப்படையாகவே மிரட்டுகின்றனர்.
இதை, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் பல மனிதாபிமானமிக்க நீதிபதிகள் கடுமையாக சாடியிருக்கின்றனர்.
நல்ல அதிகாரிகளின் தவறான புரிதல், தவறான அதிகாரிகளின் முறையற்ற நோக்கம், சந்தர்ப்ப வாதிகளின் பொய்யான தகவல்களை நம்பும் அதிகாரிகள், சக பணியாளர்களின் கூட்டுச்சதி போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
இவர்களுக்கு எல்லாம் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு, தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி, உண்மையை கண்டறிந்து, தவறாக நடவடிக்கைக்கு உள்ளான நல்லவர்களை காப்பாற்றி விடுவிக்கும் நல்லெண்ணமும், துணிவும், பொறுப்புணர்வும் இருப்பதில்லை. அதன்விளைவே பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் நீதிமன்ற கதவுகளை தட்டுகின்றனர்.
போராட்டம்
என் அனுபவத்தில் காவல் துறையில் உயர்பொறுப்பில் இருந்த தேவாரத்திடம் தான், இந்த மனிதாபிமானமிக்க துணிவு இருந்தது.
இதை அவர் காலத்தில் காவல் துறையில் பணியாற்றிய அனைவரும் ஒப்புக் கொள்வர். எல்லாருக்கும் திறமையான, நேர்மையான வழக்கறிஞர்கள் கிடைப்பதில்லை; நீதிபதிகள் அமைவதில்லை. சில ஜூனியர் வக்கீல்கள், சீனியர் வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் தரகர்களாக செயல்படுகின்றனர்.
சமீபத்தில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவர், நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் பற்றி மிக மிக கேவலமாக பேசியிருக்கிறார். 'நீதிமன்றம் பணமுதலைகளுக்கும், ஊழலில் பணம் குவித்து, அதை தக்க வைக்க போராடும் அரசியல்வாதிகளுக்குமான புகலிடம். மற்றவர்களுக்கு அது புதைக் குழி' என்று கூறியுள்ளார்.
அரசு அதிகாரிகள் தங்களின் பொறுப்பை தட்டிக்கழிக்க, ஒரு சிறந்த உபாயமாக நீதிமன்றத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்கள் முடிவெடுக்க அதிகாரமுள்ள பல அற்ப விஷயங்களைக் கூட தேவையின்றி தாமதப்படுத்தும் போது, அதனால் பாதிக்கப்படுவோர், நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
இந்த வகையில், அரசு அதிகாரிகள், வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும், தங்களையும் அறியாமல் தரகர்களாக செயல்படுகின்றனர். வழக்குகள் பெருகுவதால், நீதிமன்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது,
ஆனால், காவல் துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் காரணமின்றி எற்றுக்கொள்ளப்படாமல் இருப்பதும், ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்குகளில் விசாரணை தாமதப்படுவதற்கும் சில நீதிபதிகளின் மெத்தனமும், சில வழக்கறிஞர்களின் சுயநலமுமே காரணம்.
இதை புரிந்துகொண்டு அவர்களையும் எச்சரித்து புள்ளி விபரத்தைக் கேட்டால், சிறந்த பலனை எதிர்பார்க்கலாம்.
காவல் துறையின் நடைமுறை சிரமங்களை புரிந்த நீதிபதிகளின் ஒத்துழைப்பால் தான், குற்றவழக்குகள் நீதிமன்றத்தில் வெற்றியை சந்திக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
தன்னிடமுள்ள நல்லவர்களின் செயல்பாட்டால், பல சாதனைகளை காவல் துறையும், நீதித்துறையும் செய்தாலும், அவற்றை மறக்கச்செய்யும் அளவுக்கு, அங்குள்ள சில கருப்பாடுகளின் அலட்சியப்போக்கால், களங்கத்தை சுமக்க வேண்டியிருக்கிறது.
- மா.கருணாநிதி,
காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு)
அலைபேசி: 98404 88111- இ - மெயில்: spkaruna@gmail.com