/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
சிந்தனைக்களம்: தி.மு.க., தான் மதவாத கட்சி
/
சிந்தனைக்களம்: தி.மு.க., தான் மதவாத கட்சி
PUBLISHED ON : ஜன 25, 2026 04:01 AM

பா.ஜ., அனைவருக்குமான தேசிய கட்சி. தமிழகத்தில் பா.ஜ., முன்னெப்போதும் இல்லாத அளவு, மிக வலுவாகக் காலுான்றி உள்ளது. இதனைப் பொறுக்க முடியாமல், தி.மு.க., தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாத அற்பமான குற்றச்சாட்டுகளை பா.ஐ., மீது சுமத்துகிறது.
பா.ஜ., ஒரு மதவாத கட்சி என்பது தி.மு.க., வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு. ஆனால், உண்மையில் தி.மு.க., தான் மதவாத கட்சி. அந்த கட்சியின் பெயரையே, சி.எம்.கே., அதாவது 'கிறிஸ்தவ, முஸ்லிம் கட்சி' என மாற்றிக் கொள்ளலாம். அது எப்படி என விளக்குகிறேன். தி.மு.க., இப்போது தமிழகத்தில் ஆளும் கட்சி. முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். 'தி.மு.க.,வுக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடாதவர்களுக்குமான முதல்வராக செயல்படுவேன்' எனச் சொல்லி முதல்வராக, அவர் பதவி ஏற்றார்.
ஆனால், உண்மையில் அவர் என்ன செய்கிறார்? இஸ்லாமிய பண்டிகைகளை கொண்டாடுகிறார். ரமலான் பண்டிகையின் போது இஸ்லாமியர்களுடன் நோன்பு கஞ்சி குடிக்கிறார். இஸ்லாமிய பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார். அவர் மகன் உதயநிதி சர்ச்சுக்கு செல்கிறார். சிலுவை அணிந்து பிரார்த்தனை செய்கிறார். கிறிஸ்துவ பண்டிகைகளுக்கு இருவரும் வாழ்த்து சொல்கின்றனர்.
ஆனால், ஹிந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மாட்டர். தைப்பூச விழாவில் கலந்து கொள்ள மாட்டர். விநாயகர் சதுர்த்தி விழாவை புறக்கணிப்பர். உலகம் முழுதும் ஹிந்துக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகையை கண்டு கொள்ளவே மாட்டர்.
அடுத்து, தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள், ஹிந்து மதத்தை எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசி வருகின்றனர் என்பது ஊரறிந்த உண்மை. சனாதனத்தை வேரோடு அழிப்பேன் என உதயநிதி பேசியுள்ளார். நான் பல கோவில்களை இடித்திருக்கிறேன் என, டி.ஆர்.பாலு பகிரங்கமாக பேசியுள்ளார்.
ஹிந்துக்களைச் சூத்திரர்கள் என, அ.ராஜா பேசியுள்ளார். ஹிந்து தெய்வச் சிலைகள் எப்போது உடைக்கப்படுகிறதோ, அப்போது தான் ஹிந்துயிசம் ஒழியும் என ராஜா கூறியுள்ளார். பொன்முடி இன்னும் ஒரு படி மேலே போய் ஹிந்து மதத்தை மிகக் கேவலமாக விமர்சித்துள்ளார்.
இவ்வாறு, தொடர்ந்து தி.மு.க.,வினர் பேசி வருவதை முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் தடுப்பதே இல்லை. குறைந்தபட்சம் அவர்கள் மீது நடவடிக்கை கூட எடுப்பதில்லை. கடும் எதிர்ப்பு வந்ததும், பொன்முடி மீது நடவடிக்கை எடுப்பது போல எடுத்துவிட்டு, மீண்டும் அவருக்கு கட்சியில் துணைப் பொதுச்செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய, கிறிஸ்தவ ஓட்டுகளை மட்டுமே குறிவைத்துச் செயல்படும் தி.மு.க.,வின் இந்த நடவடிக்கை மதவாதம் இல்லையா? இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஓட்டு மட்டும் ஒட்டுமொத்தமாகக் கிடைத்தால் போதும், எவ்வளவு அவமானப்படுத்தினாலும் ஹிந்துக்கள் ஓட்டு நமக்கு கிடைத்து விடும் என்ற மமதையில் செயல்படுகிறது தி.மு.க.,
தி.மு.க., பகுத்தறிவாளர்கள் கட்சி, கடவுளை நம்பாதவர்கள் கட்சி என்றெல்லாம் சொல்லி வந்தனர். இதே தி.மு.க.,வினர் எங்கேயாவது ஒரு இடத்தில் இஸ்லாம் மதத்தை பற்றியோ, கிறிஸ்தவ மதத்தை பற்றியோ எதிர்மறையான கருத்தை தெரிவித்து இருக்கின்றனரா?
இந்தியாவில் புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம், பார்சி மதம் என பல மதங்கள் உள்ளன. அவர்களும் சிறுபான்மையினர் தான். அவர்களைப் பற்றி தி.மு.க., ஏதாவது ஆதரவாக பேசியுள்ளதா? கிறிஸ்துவர், இஸ்லாமியர் ஓட்டுகள் மட்டும் தான் அவர்கள் குறி. அதனால் தான் தி.மு.க.,வை ஒரு மதவாத கட்சி எனச் சொல்கிறோம்.
இன்றைய காலகட்டத்தில், தீபாவளி பண்டிகை உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் கூட தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
ஆனால், தமிழகத்தில் மட்டும் தி.மு.க.,வுக்கு தீபாவளி என்றால் ஏன் வெறுப்பு; காரணம் கிறிஸ்தவ, இஸ்லாமியர்களின் 12 சதவீத ஓட்டு மட்டுமே. சிறுபான்மை மக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில், தி.மு.க., இப்படி அப்பட்டமாக ஹிந்து மத விரோதப் போக்கை பின்பற்றுகிறது.
அவர்கள் சிறுபான்மை மக்களை யாரிடம் இருந்து பாதுகாக்கின்றனர்; பெரும்பான்மையான ஹிந்துக்களிடம் இருந்தா? உண்மையில் சிறுபான்மை மக்கள் பா.ஐ,வைத் தான் ஆதரிக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
கோவா மாநிலத்தில் 38 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். அசாமில் 34 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இந்த மாநிலங்களில் பா.ஐ., தான் ஆட்சி செய்கிறது. பா.ஜ., மதவாத கட்சி என்றால், இந்த மாநிலங்களில் பா.ஜ., எப்படி வெற்றி பெற்றிருக்க முடியும்?
அந்த மாநில மக்கள் மதத்தை பார்த்து ஓட்டுப்போடவில்லை, வளர்ச்சியைப் பார்த்துதான் ஓட்டுப்போட்டு பா.ஐ., வை தேர்வு செய்துள்ளனர். உ.பி., மாநிலத்தில் பல ஆண்டுகளாக பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அங்கு, 20 சதவீதம் இஸ்லாமியர்கள். ம.பி., மாநிலத்தில் 18 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். அங்கு மீண்டும் மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வருகிறது.
மும்பை மாநகராட்சியில் இஸ்லாமியர்கள் 25 சதவீதம் பேர் உள்ளனர். அந்த நகரில் ஒரு இஸ்லாமிய எம்.எல்.ஏ., கூட கிடையாது. காரணம், வளர்ச்சி. இதை இஸ்லாமியர்களும் உணர்ந்து கொண்டனர். குறிப்பாக, இஸ்லாமிய பெண்களுக்கு பா.ஜ., ஆட்சியில் சுதந்திரம் கிடைத்துள்ளது. 'முத்தலாக்' என்ற விவாகரத்து கொடுமையில் இருந்து அவர்களை புதுச் சட்டம் மூலம் பா.ஜ., அரசு காப்பாற்றியுள்ளது. அந்த பெண்கள் பா.ஐ.,வுக்குத் தான் ஓட்டுப் போடுகின்றனர்.
ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் தமிழகம் முழுதும், ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தியது நாங்கள் தான் என தி.மு.க., அரசு கூறுகிறது. இதுவும் பித்தலாட்டம்தான். தமிழக அரசில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு என்று தனியாக நிதி ஒதுக்கீடே கிடையாது. பங்களிப்பு மூலம் தான் நடக்கிறது. மேற்பார்வை பணியை மட்டுமே அறநிலையத்துறை செய்கிறது. எல்லாவற்றிற்கும் வரும் சட்டசபை தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பர் என்பது உறுதி.
ஆர்.என்.வயப்பிரகாஷ்,
மாநில துணைத்தலைவர்,
மாநில பூத் கமிட்டி பொறுப்பாளர்,
தமிழக பா.ஜ.,

