/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
சிந்தனைக்களம்:மத சார்பற்ற என்றல்ல மத ஏற்பு என மாற்றுங்கள்!
/
சிந்தனைக்களம்:மத சார்பற்ற என்றல்ல மத ஏற்பு என மாற்றுங்கள்!
சிந்தனைக்களம்:மத சார்பற்ற என்றல்ல மத ஏற்பு என மாற்றுங்கள்!
சிந்தனைக்களம்:மத சார்பற்ற என்றல்ல மத ஏற்பு என மாற்றுங்கள்!
PUBLISHED ON : ஆக 26, 2024 12:00 AM

உலக அளவில் சிறுபான்மை, அதாவது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கை ஆகியவற்றை உள்ளடக்கிய முந்தைய அகண்ட பாரதத்தில் பெரும்பான்மையாக இருந்து, தற்போது இந்திய அளவில் மட்டும் பெரும்பான்மை என்றழைக்கப்படுபவர்கள், மேற்கூறப்பட்ட மற்ற பகுதிகளில் சிறுபான்மையினராக உள்ளனர்.
இந்த சனாதன பெரும்பான்மை, சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம் என்று வகைப்படுத்தப்பட்டு, வேற்றுமையில் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்தது.
இந்த ஒற்றுமையில் உலை வைக்க, ஐரோப்பியர்களால் ஹிந்து என்று பெயர் மாற்றியதையும் பொறுத்து கொண்டது. இவர்கள், ஹிந்து என்ற மதத்தவர் கிடையாது; மதம் பிடித்தவர்களும் அல்ல. சனாதன வாழ்வியல் நெறியில் வாழ்பவர்கள்.
'டிவைடு அண்டு ரூல்'
இவர்களிடையே எழுவது சண்டை இல்லை; சச்சரவு தான். பொன்னியின் செல்வன் கதையில், ஆழ்வார்க்கடியான் - சிவாச்சாரியார் சண்டை போல, காமெடியாக தான் இருக்கும்.
சொல்லப்போனால், அரசியல்வாதிகள், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் என, மாறி மாறி தன் கலரை மாற்றுவது போல, இவர்கள் மாறிக் கொண்டிருப்பர்; அவ்வளவு தான்! ஆனால், மற்ற வழிபாட்டு தலங்களை, இவர்கள் அடித்து உடைத்து நொறுக்கியதில்லை.
இப்படிப்பட்ட அமைதியான, மற்ற சமயங்களை ஏற்றுக் கொள்ளுதல் என்ற பரந்த மனப்பான்மையில் இருப்பவர்கள், இங்கு பெரும்பான்மையாக இருப்பதால் தான், இங்கு ஜனநாயகம் என்ற மரம் தழைத்து வளர்ந்தோங்கி இருக்கிறது.
இத்தகைய வீரமும், விவேகமும் நிறைந்த மண் மீது படையெடுத்து, மாறுபட்ட வாழ்க்கை முறை, உடை, பெயர் என, அப்பாவி மக்களை மடை மாற்றி, மதம் பிடித்து அலையத் துவங்கினர், சில வெளிநாட்டு மன்னர்கள்.
இங்குள்ள மன்னர்களின் காமெடி வேற்றுமையை ஊதிப் பெரிதாக்கி, விரிசலை பிளவாக்கி அடிமைப்படுத்தி, 'டிவைடு அண்டு ரூல்' என ஆட்சி செய்து அலங்கோலப்படுத்தினர்.
சுதந்திரம் வாங்குவதற்காக, மத அடிப்படையில் நம் நாடு பிரிக்கப்பட்டதும், தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளதும் வரலாறு. நம் கல்வி முறை, ஆட்சி முறை பாதம்தாங்கித்தனமாக அமைந்ததை என்னவென்று சொல்வது! மக்களும், வாயில்லா பூச்சிகளாக அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.
இதுதான் 'மதச்சார்பின்மை - செக்யூலர்' என, 'இண்டியா' கூட்டணியினர் சொல்லி வருவது வேடிக்கை தான். எல்லாமே ஓட்டுக்காக தானே!
இந்த ஓட்டு வங்கி அரசியல்வாதிகளுக்கு, செக்யூலர் என்றால் என்ன அர்த்தம் என்று கூட தெரியாதது தான் வருத்தமாக இருக்கிறது.
பிரிட்டிஷ் அரசில், இரண்டு மையங்கள். ஒன்று பிரிட்டிஷ் அரசர்; மற்றொன்று, பிரிட்டிஷ் சர்ச்சுகளின் தலைவர். குற்றம் செய்த ஒருவரை, அந்த பிரிட்டிஷ் அரசர் தண்டிக்க நேரிட்டால், உடனே அவர், சர்ச்சில் பாதிரியாரிடம் மன்னிப்பு கேட்பார். உடனே அந்த பாதிரியார், அந்த குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கி விடுமாறு அரசரிடம் சொல்வார்.
'செக்யூலரிசம்'
இந்த மாதிரி தொடர்ந்து நடந்தால், எப்படி நிர்வாகம் செய்ய முடியும்? சட்டம் - ஒழுங்குக்கு உட்பட்டு வாழ்க்கை நடத்துவோர், முட்டாள்கள் என்று ஆகிவிடாதா?
எனவே, 'சர்ச் நிர்வாகம், அரசு நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது' என்ற ஒரு கோட்பாட்டை உண்டாக்கிக் கொண்டு, அதற்கு, 'செக்யூலரிசம்' என, பிரிட்டிஷார் பெயரிட்டனர்.
அதை அப்படியே காப்பி அடித்து தான் இங்கே நம் நாட்டில், ஒருபடி மேலே சென்று, அடுத்தவர் சமயத்தை மதித்து ஏற்றுக்கொள்ளுதல் என்ற நிலைக்கு மாறினோம். எனவே, எங்களை பின்னுக்கு இழுக்காதீர்கள்.
மேலும், 'டெமாக்ரபி' என்று ஒரு பகுப்பாய்வு செய்தால், 1947ல் ஒருங்கிணைந்த இந்தியாவின் மக்கள் தொகை, 35 கோடி; அதில் 20 சதவீதம், அதாவது, 7 கோடி பேர் இஸ்லாமியர்கள். தற்பொழுது, பாரதம் - வங்கதேசம் - பாகிஸ்தான் மக்கள் தொகை, 185 கோடி இருக்கும்; அதில், இஸ்லாமியர்கள், 70 கோடிக்கு மேல் இருப்பர்.
ஆக, ஏழு கோடி 10 மடங்காக பெருகி, 70 கோடியாகி விட்டது. ஆனால், 28 கோடி, நான்கு மடங்கு மட்டுமே அதிகரித்து, 115 கோடியில் நிலைகுத்தி நிற்கிறது.
இதற்கு, 75 ஆண்டு காலமாக நம்மை ஆள்பவர்கள் பதில் சொல்வரா?
இந்த செக்யூலர்வாதிகளுக்கும், அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், சனாதன சமயத்தினருக்கும் ஒன்று புரிய வேண்டும். உலகில் இஸ்லாமிய நாடுகளும், கிறிஸ்துவ நாடுகளும் நுாற்றுக்கணக்கில் உள்ளன; சனாதன சமயத்தில் சாத்வீகமான வாழ்வு நடத்துபவர்களுக்கு, உலகில் உள்ள ஒரே நாடு இந்தியா தான்.
பாகிஸ்தானின், வங்கதேசத்தின் ராணுவ அடக்குமுறை ஆட்சிக்கு, அவர்களின் இந்திய - ஹிந்து எதிர்ப்பு மற்றும் வெறுப்பு கொள்கை தான் காரணம்; அதே சமயம், துபாய், குவைத், சவுதி போன்ற இடங்களில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், நமக்கும் பிணக்கே கிடையாதே!
இந்த ஒரு உண்மையை, இந்திய அரசியல்வாதிகளும், பொதுமக்களும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.
இனியும் ஓட்டு வங்கி அரசியல் செய்யாமல், உண்மையான மத சார்பு எனப்படும், மத ஏற்புத்தன்மை அரசியலை, அனைத்து கட்சிகளும் கைக்கொண்டால் தான் நம் நாட்டிற்கு நல்லது!

