/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
தெளிவான மனதில் புகும் தேவையற்ற அசுத்தங்கள்
/
தெளிவான மனதில் புகும் தேவையற்ற அசுத்தங்கள்
PUBLISHED ON : மார் 10, 2024 12:00 AM

இந்த கட்டுரையை நான் எழுத முக்கிய காரணமாக அமைந்தது, சமீபத்தில் என் மிக நெருங்கிய உறவினரின் திருமணமாகாத, 26 வயதான ஒரு இளைஞன், நன்கு படித்து ஒரு பிரபலமான ஐ.டி., நிறுவனத்தில் ஐந்து இலக்கத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்.
'அளவுக்கு அதிகமான தகவல்களைத் திணிக்கும்போது, மூளை கவனச்சிதறலுக்கு உட்படுகிறது' என்கிறார் ஒருமன இயல் அறிஞர். எதற்கும் ஓர் எல்லை உண்டு; அந்த எல்லையை மீறும்போது அது ஏற்படுத்தும் விளைவு நாம் சற்றும் எதிர்பாராத அளவுக்கு தீமையானதாக அமைந்து விடக்கூடும்.
ஆரம்பப்பள்ளியில் எல்லா பாடத்தின் அடிப்படையையும் படிக்கும் மாணவன் உயர் வகுப்புக்குப் போகும்போது, அவனுக்கு நன்கு பிடித்த, திறமை வெளிப்படுகிற பாடத்தை மட்டும் விரும்பித் தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
தெளிந்த நீரோடை
கலைக்கல்லுாரி மற்றும் உயர் தொழில்நுட்பக் கல்லுாரி என்று முன்னேறி செல்லும் போது, முழு கவனத்தையும் அவனுக்கு நன்கு பிடித்த, திறமையைக் காட்ட வாய்ப்புமிக்க பாடப்பிரிவில் மட்டும் செலுத்தினாலே, அவனது முன்னேற்றம் உறுதி செய்யப்பட்டு விடுகிறது. எனவே வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும் தன் மனதை, அசுத்தங்களை அனுமதிக்காத தெளிந்த நீரோடையாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.
சமுதாயத்தில் அசுத்தங்களுக்கு பஞ்சமேயில்லை. சமூக ஊடகத்தை தவறாகப் பயன்படுத்தி காசு பார்க்க நினைக்கும் தகவல் வியாபாரிகள் சிலர் தேவையற்ற குப்பைகளை, கவர்ந்திழுக்கும் தலைப்பிட்டு பரப்பி விடுகின்றனர். மனித மனதிற்கே உரிய இயற்கை உந்துதல் அடுத்தவரின் அந்தரங்கத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம். அதனை நன்கு புரிந்து கொண்ட சுயலாப சிந்தனையுள்ள வியாபாரிகள், பிரபலங்களின் குறிப்பாக திரைத்துறை பிரபலங்களின் அந்தரங்கத்தை மிகைப்படுத்தி பதிவிடுகின்றனர்.
'மூன்றாவது திருமணம் செய்து கொண்ட, 40 வயது நடிகை, 50 வயதானவரை திருமணம் செய்து கொண்ட 30 வயது நடிகை, தன் அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் அசத்தல் நடிகை' என்று கவர்ச்சிகரமான தலைப்பிட்டு இளைஞர்களின் கவனத்தை திசை திருப்புகின்றனர்.
இதில் ஆர்வம் செலுத்தும் இளைய சமுதாயம் எந்த நேரமும் அலைபேசியும் கையுமாக இருப்பதால், தங்களின் கல்வி, பெற்றோர்கள், உறவினர்கள், நல்ல நண்பர்கள், அரிய புத்தகங்கள் ஆகியவற்றின் மீது செலுத்த வேண்டிய உரிய கவனத்தைச் செலுத்தத் தவறி விடுகின்றனர். படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், ஆசிரியர்கள், சக மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அவமானத்தை சந்திக்கின்றனர். தங்களால் நினைத்ததை சாதிக்க முடியாததற்கு, தங்களின் தேவையற்ற சிந்தனைச் சிதறல்தான் காரணம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
சமீபத்தில் சட்டக்கல்லுாரி மாணவர்களை நேர்முகத்தேர்வு செய்த முன்னாள் நீதியரசர் ஒருவர், நீதித்துறை, மத்திய அரசு, மாநிலம் மற்றும் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து, சட்டக்கல்வியை உடனடியாக சீர்திருத்தாவிட்டால் எதிர்கால நீதித்துறையை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று, தன் கட்டுரையில் குறிப்பிடுள்ளார்.
உள்ளத்துாய்மை
புகழ்பெற்ற மட்டைப்பந்து வீராங்கனையர் சிந்து மற்றும் சாய்னா நேஹ்வால் இவர்களுக்கு ஒலிம்பிக் போட்டிக்கு பயிற்சியளித்த கோபிசந்த் ஒரு பேட்டியில் குறிப்பிட்ட உண்மை, ஒலிம்பிக் போட்டிக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரிடமிருந்த மொபைல் போனை கைப்பற்றி வைத்துக் கொண்டார் என்பதுதான்.அதிக அளவில் உடல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய போட்டிக்கே உள்ளத்துாய்மை தேவைப்படும்போது, முழுக்க முழுக்க உள்ள ஒருமுனைப்பு தேவைப்படுகின்ற அறிவு சார்ந்த பணிகளுக்கு ஒருமித்த கவனம் எவ்வளவு அவசியம் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.
இதற்கிடையே, சமீபத்தில் வெளியான ஒரு புள்ளிவிபரம் தமிழகத்தில் போதைப்பொருட்களின் கடத்தல் மற்றும் நடமாட்டம், மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருப்பதாகக் கூறுகிறது. அமுதமும், விஷமும் ஓரே இடத்தில் தோன்றியதாக புராணத்தில் சொல்லப்பட்டதுபோல், சிறந்த மருத்துவ குறிப்புகள், உயர்ந்த கருத்துக்களை வழங்கும் அரிய சொற்பொழிவாளர்களின் உரைகள், ஆன்மிக தகவல்கள் போன்ற நல்ல தகவல்களை தரும் சமூக ஊடகத்தில் பல அசுத்தங்களும் புகுத்தப்படுகின்றன. அவற்றை பிரித்தறிந்து ஏற்றுக்கொள்ளும் அன்னப்பறவையாக இருக்க வேண்டிய கட்டாயத்தில், இளைஞர்கள் இருக்கின்றனர்.
உங்களுடைய தவறுகளைச் சுட்டிக்காட்ட உங்கள் நலனில் அக்கறையுள்ள, உங்களது பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் போன்ற நல்லவர்களை நீங்கள் அனுமதிக்காமல் அவர்களிடம் கோபப்படுகிறீர்கள் அல்லது எதிர்மறையான உணர்வை வெளிப்படுத்துகிறீர்களேயானால், அவர்கள் தங்களுடைய எண்ணத்தை வெளியிடத் தயக்கம் காட்டுவர்.அப்போது நீங்கள் ஆபத்தான பாதையில் துணையின்றி பயணிக்கத் துணிந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
பெற்றோர் எப்படி மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு உங்களை குறை கூறக்கூடாது என்று விரும்புகிறீர்களோ, அதேபோன்று உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டு நீங்கள் சுயநம்பிக்கையை இழக்கக்கூடாது என்பதும் முக்கியம்.அவனைவிட திறமையில் குறைந்தவனாக இருக்கிறேனே என்று உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாமல், அவனால் சாதிக்க முடிந்தது எனக்கு மட்டும் எப்படி சாத்தியமில்லாமல் போகும் என்று வினா எழுப்பி விடை பெறுங்கள். ஊக்கம் பெறுவீர்கள் சாதித்துக் காட்டுவீர்கள், வெற்றி நிச்சயம்.
உங்களின் அன்றாட செயல்பாட்டில் உங்களின் நல்ல எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் நல்ல பழக்கங்களுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கி கால அட்டவணை தயாரித்து அதை கவனமாக, சிறிதும் வழுவாமல் பின்பற்றுங்கள்.பள்ளிப்படிப்பில் திறமை காட்டியவர்கள், கல்லுாரி படிப்பில் நுழையும் போது, அதே திறமையுடன் அங்கு வந்திருப்பவர்கள் மத்தியில் ஒப்பிடும்போது அவர்கள் திறமை சற்று குறைவாக தோன்ற வாய்ப்பிருக்கிறது. அது போன்றதொரு தருணத்தில் மாணவர்கள் நம்பிக்கை இழந்து சிலர் தவறான முடிவுக்கு போகின்றனர்.
மனதைக் கட்டுப்படுத்தி, திறமையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டிய தருணமிது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அனுபவ வாழ்க்கையில், கல்வியில் சாதனை படைத்தவர்கள் வாழ்க்கையில் வளம் காண்பது எளிது என்றாலும், எல்லாருக்கும் அது சாத்தியமாக அமைவது இல்லை.
பகுத்தறிவு
கல்வியைப் புறக்கணித்தவர்கள் அல்லது தோல்வியைச் சந்தித்தவர்கள் எல்லோருமே வாழ்க்கையில் பின்தங்கி விடுவதுமில்லை, கல்வியில் பின்தங்கிவிட்டோமே என்ற பய உணர்ச்சியே, அவர்களை கடின உழைப்புக்கு தயார்படுத்தி விடுவதால், பல சமயங்களில் சாதனை படைப்பதைக் காண்கிறோம்.எனவே ஒருவரின் முன்னேற்றத்துக்கு கல்வி அறிவு மட்டுமே போதாது; மனோவலிமையை அளிக்கும் பகுத்தறிவும் மிக அவசியம்.
தன் ஒவ்வொரு செயலுக்கும் பின்விளைவாக நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே புரிந்துகொள்ளும் அனுபவ அறிவு பலருக்கு இருப்பதில்லை. தானே பட்டுத் திருந்துபவன் சாமானியன். அடுத்தவரின் அனுபவத்திலும் பாடம் கற்றுக் கொள்பவனே மிகச்சிறந்த அறிவாளி.
தெற்கு சூடானில் நிலவிய கடும் பஞ்சத்தின் போது, 1993 மார்ச் மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான, 'தி வல்ச்சர் அண்டு தி லிட்டில் கேர்ள்' என்ற தலைப்பிலான புகைப்படம், நம் எல்லாரது கவனத்தையும் ஈர்த்தது நினைவிருக்கலாம்.
பசியால் வாடிய மெலிந்த தோற்றத்துடன் ஒரு குழந்தை, அது ஆண் குழந்தை என்று பின்னர் அறியப்பட்டது.
அருகில் உள்ள உணவு வழங்கும் இடத்துக்கு நகர்ந்து செல்லக்கூட சக்தியின்றி, தனியே அமர்ந்திருக்க, கழுகு ஒன்று தனக்கு கிடைக்கப்போகும் உணவுக்காக காத்திருப்பது போன்ற அந்த புகைப்படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் என்ற புகைப்பட நிபுணருக்கு, 1994-ல் 'புலிட்ஸர் விருது' வழங்கப்பட்டது. அந்த விழாவில், அந்த குழந்தை என்ன ஆனது என்று கார்ட்டரிடம் ஒரு நிருபர் கேட்டார்.
'தெரியவில்லை நான் என் விமானத்தைப் பிடிக்கும் அவசரத்தில் வந்துவிட்டேன்' என்று பதிலளித்தார். அந்த புகைப்பட நிபுணர். அப்போது அந்த நிருபர் கூறினார், 'அப்படியென்றால் அங்கு இருந்தது ஒரு கழுகு அல்ல; இரண்டு கழுகுகள் உன்னையும் சேர்த்து' என்றார்.
துரதிர்ஷ்டம்
மனம் நொந்து போன கார்ட்டர் அடுத்த நான்காவது மாதமே தற்கொலை செய்துகொண்டு விட்டதாக தகவல் சொல்கிறது.
புகழ்போதை கண்ணை மறைக்க சாமானிய மனிதனிடம் இருக்க வேண்டிய இரக்க குணமும் சமுதாய பொறுப்பும் மறைந்து போனது துரதிர்ஷ்டவசமானது.
அறிவியல் முன்னேற்றமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் நல்ல தகவல்களோடு தேவையற்ற அசுத்தங்களையும் மனதில் புகுத்தி மாசுபடுத்தியதன் விளைவு, மனிதன் தனி கவனம் செலுத்த வேண்டிய பல விஷயங்களைப் புறக்கணித்து, தேவையற்ற சங்கதிகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறான். இது மிக மோசமான நிலை. விழித்துக் கொள்ளுங்கள் இளைஞர்களே, விரைவில்!

