/
வாராவாரம்
/
சிந்தனைக் களம்
/
நான்கு புறத்தையும் நோக்கும் வகையிலான கவனம் வேண்டும் விஜய்க்கு!
/
நான்கு புறத்தையும் நோக்கும் வகையிலான கவனம் வேண்டும் விஜய்க்கு!
நான்கு புறத்தையும் நோக்கும் வகையிலான கவனம் வேண்டும் விஜய்க்கு!
நான்கு புறத்தையும் நோக்கும் வகையிலான கவனம் வேண்டும் விஜய்க்கு!
PUBLISHED ON : மே 06, 2026 04:36 AM

- மா.கருணாநிதி -முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் 98404 88111 , spkaruna@gmail.com
![]() |
சாமானிய மக்களின் தேவைகள் பலதரப்பட்டவை. வாழ்க்கையை நகர்த்திச் செல்ல போதிய ஊதியம் தரும் வேலைவாய்ப்பைப் பெறுவதில் தொடங்கி, தங்களின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறாக செயல்படும் அராஜகப் பேர்வழிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வது, தங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசு தரும் சலுகைகளைக் கூட பெற்றுத் தருவதற்கு லஞ்சம் கேட்கும் நேர்மையற்ற அரசு அதிகாரிகள் என, பலமுனைத் தாக்குதலுக்கு ஆளாகும் போது, அந்த குறிப்பிட்ட நபர் மீது ஏற்படும் கோபமும், வெறுப்பும் ஆளும் அரசு மீதுதான் திரும்பும்.
இப்படியாகச் சேர்ந்து புரையோடிக் கிடக்கும் வெறுப்பு, தேர்தலின்போது பிரதிபலிக்கும். எவ்வளவு சிரித்த முகத்துடன் கும்பிடு போட்டாலும், நடித்தாலும், பணம் கொடுத்தாலும் அகற்ற முடியாத வெறுப்பு அது; இதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்வதேயில்லை.
தன் தொகுதி மக்களில் ஒரு தனி நபரோ அல்லது ஒரு பகுதி மக்களோ, தங்களின் நியாயமான கோரிக்கைக்காக அல்லது உதவிக்காக தன்னை நாடி வந்தால், அதை அக்கரையோடு கவனித்து, முனைப்பாக செய்து கொடுக்கும் மனப்பான்மை, அந்தப்பகுதி சட்டசபை உறுப்பினருக்கு வேண்டும்.
சட்டசபையின் உறுப்பினராக பொறுப்பேற்பவர்கள், பதவி கைக்கு வந்த உடனேயே, தொகுதியையும், மக்களையும் மறந்துவிட்டு, தலைமைச் செயலகத்தையும், முதல்வரையும், அமைச்சர்களையும் சுற்றிச் சுற்றி வந்து, தங்களின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும், பதவிக்கு உரிய சலுகைகளை தவறாமல் பெற வழிகளைத் தேடவும் ஆரம்பித்து விடுகின்றனர்.
அடுத்த தேர்தல் வரை, தன் தொகுதி மக்களின் நினைவு அவர்களுக்கு வருவதே இல்லை.தன்னை நாடி வருபவர்களிடம், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தட்டிக் கழிக்கின்றனர்.
செல்வாக்கும் பணபலமும் மிக்கவர்களுக்கு உதவிசெய்து, தங்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்கின்றனர்; சாமானியர்களை முற்றிலுமாக அலட்சியப்படுத்துகின்றனர்.
இவற்றையெல்லாம் சாதாரண மக்கள் கவனிக்கத் தவறினாலும், இதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியினர், அவர்களுக்காகவே காத்துக் கொண்டிருக்கும் சமூக வலைதளத்தில் பரப்பி விடுகின்றனர்.
இப்படிப்பட்டவர்களால், அடுத்த தேர்தலில் தங்கள் தொகுதி மக்களை சந்தித்து ஓட்டு கேட்கவும் முடியாது; வெற்றி பெற வாய்ப்பும் கிடைக்காது. இதற்கு விதிவிலக்காக கடந்த காலங்களில் பலர் இருந்தனர்; இப்போதும் சிலர் இருக்கின்றனர். அவர்களை தொகுதி மக்கள் கைவிடுவதில்லை.
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த இரு கட்சிகளும், அரியணையில் அமர்ந்து ஆதிக்கம் செலுத்திய கட்சிகள்தான்.
அவர்கள் செய்த நலத்திட்டங்களைவிட, செய்யத் தவறியவை, எதிரணியினரால் சற்று அதிகமாகவே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதால், மக்கள் வெறுப்படைந்து, புதியவர் ஒருவருக்கு வாய்ப்பளித்து விட்டனர்; இதில் எந்த அதிசயமும் இல்லை. இதுதான், 1967லிலும், 1977லிலும் நடந்தது.
சம்பாதித்த காசில் ஒரு சிறுபகுதியைத் தான் ஓட்டுக்கு லஞ்சமாகக் கொடுத்தனர் என்று கூறி, பெற்றுக் கொண்ட மக்கள், பணம் கொடுத்தவர்களை ஏமாற்றி விட்டனர்.
தேர்தல் சமயத்தில் பணம் வாங்கும் மக்களைப் பார்த்து, இப்படி தங்களின் ஜனநாயக உரிமையை விலைக்கு விற்கின்றனரே என்று பலர் புலம்பினர்; ஏளனமாகப் பேசினர். ஆனால், மக்கள் அவர்களுக்கு தங்கள் செயலால் பதிலளித்து விட்டனர்; விபரமானவர்களென்று நிரூபித்து விட்டனர். எனவே, புதிதாக பொறுப்பேற்கும் அரசு, இதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
மதிப்பிற்குரிய விஜய், மாண்புமிகு விஜய் ஆனதும், அவர் திரைப்படத்தில் நிழலாக பேசி, மக்களைக் கவர்ந்த வசனங்களையெல்லாம், இனி நிஜத்தில் பேசி, செயலில் காட்டி அசத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
அதிகாரிகளின் செயல்பாட்டை ஊன்றிக் கண்காணிக்க வேண்டும். அவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ளாமல், காரணம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கும் அதிகாரிகள், நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும், அனுபவமிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்; தவறைச் சுட்டிக்காட்ட தயங்காதவர்களாக இருக்க வேண்டும்.
ஒரு தலைவருக்கு இருக்க வேண்டிய முக்கிய பண்பு, தன்னை நாடி கோரிக்கையுடன் வருபவர்களின் குறைகளை செவிமடுத்து கேட்பதில், தயக்கமும் அலட்சியமும் காட்டக்கூடாது என்பதே. அவற்றை நிறைவேற்ற, அதிகாரிகளுடன் உடனடியாக ஆலோசனை செய்து, தெளிவானதும், கண்டிப்பானதுமான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
பல அதிகாரிகள் தாங்கள் முடிவெடுக்க வேண்டிய பல விஷயங்களில் போதிய அனுபவமின்மை காரணமாக தாமதப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு ஆளாக்குகின்றனர். பல ஆலோசனைக் கூட்டங்கள், சம்பிரதாயத்துக்காகவும் ஸ்நாக்ஸும், தேநீரும் அருந்துவதற்காகவுமே நடத்தப்படுகின்றன.
இதன் காரணமாகவே, நீதிமன்றங்களில் கோடிக்கணக்கில் வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. நீதிபதிகள் முன், அதிகாரிகள் தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.
பிரபல ரவுடி என்ற பட்டத்தை சுமந்தபடி வெளியே உலாவி, மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒருவர் மீது, நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள், நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாக, பத்திரிகையில் செய்தி வருகிறது.
தவறு எங்கே நடக்கிறது என்பதை கண்டறியவும், உரிய நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் பலருக்கும் அனுபவம் போதவில்லை. முதல்வர் முன் அமர்ந்து, அரசு உள்துறை செயலர் உட்பட அனைவரும் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர்; ஆனால், என்ன பேசுவர் எனத் தெரியவில்லை.
தயவு செய்து அவர்களிடம் கேளுங்கள்... அவர்களை கடுமையாக சாட வேண்டாம்; காரணத்தைக் கேளுங்கள்; பொய்ச் சாக்குகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
இதுவரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்குப் பின் ஆட்சி செய்த முதல்வர்களுக்கு தானாகக் கூடும் கூட்டமும், பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருந்ததில்லை; ஆனால், சம்பிரதாயத்துக்காகவும், தவறு நடக்க வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்பதற்காகவும், அதிக அளவில் காவலர்களையும், அதிகாரிகளையும் பாதுகாப்புக்காக குவித்து, காவலர்களை அழுத்தத்திற்கு ஆளாக்க வேண்டி இருந்தது.
ஆனால், தற்போது முதல்வராகப் பதவி ஏற்க இருப்பவருக்கு, பாதுகாப்பு என்பது, ஒரு சவாலாக இருக்கும்; அதிகளவு போலீசாரை பாதுகாப்புக்காக குவிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படப் போகிறது.
நல்ல ஆலோசனை சொல்பவர்களையும், குறை கூறுபவர்களையும், அதிகார பலத்தால் முடக்கிப் போடாமல், உரிய நடவடிக்கையாலும், சரியான பதிலாலும் அமைதிப்படுத்த வேண்டும்.
தேர்தலில் அதிரடி மாற்றத்தை அசத்தலாக செய்து முடித்த தொண்டர்கள், போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதே சமயத்தில், இந்த வெற்றி, அனுபவமற்ற இளம்வயதினர் சிலரின் மனதில் ஆணவத்தையும், அராஜகப்போக்கையும் தோற்றுவிக்கும் வாய்ப்புள்ளது.
கட்சியின் நலன் கருதி, அவர்களை கண்டறிந்து, கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. அப்படி செய்தால், நல்ல ஆரம்பத்தை சந்திக்கும் புதிய கட்சி, ஆட்சியிலும், அரசியலிலும் நிலைத்து நிற்க முடியும்.
தோல்வியைத் தழுவிய பாரம்பரியமிக்க இரு கட்சிகளின் நிலையே இதற்கு சாட்சி!


