PUBLISHED ON : பிப் 13, 2022

மின்னணு சாதனங்களில் இருக்கும் முக்கியமான பிரச்னை, அதன் பேட்டரி; சார்ஜ் ஏற்றி மாளாது. நாம் சாதனங்களை அதிகப்படியாக உபயோகிப்பதும் இதற்கு ஒரு முக்கிய காரணம். என்ன தான் கூடுதல் திறன் கொண்ட பேட்டரியுடன் கூடிய சாதனங்களை வாங்கினாலும், இந்த சார்ஜிங் பிரச்னை தீர்க்க முடியாததாகவே உள்ளது.
இந்நிலையில், 'கார்மின்' நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கி இருக்கிறது. அது புதிதாக அறிமுகம் செய்திருக்கும் ஸ்மார்ட்வாட்சில் இந்த பேட்டரி பிரச்னை கிடையாது. 'அன்லிமிடெட் பேட்டரி லைப்' என அறிவித்துள்ளது.
இந்த வாட்ச் சூரிய ஒளியை பயன்படுத்தி இயங்குவதால், பேட்டரி பிரச்னை கிடையாது. 'கார்மின் இன்ஸ்டிங்ட் - 2 சோலார்' எனும் பெயரில் இந்த வாட்ச், முதல்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் ஆகியுள்ளது.
இந்த வாட்ச், 45 மி.மீ., மற்றும் 40 மி.மீ., என இரு அளவுகளில் அறிமுகம் ஆகியுள்ளது. 40 மி.மீ., அளவு கொண்ட வாட்ச் 'இன்ஸ்டிங்ட் - 2 எஸ் சோலார்' எனும் பெயரில் வந்துள்ளது. இந்த வாட்சுகள் சோலார் வசதி இல்லாமலும் கிடைக்கின்றன.
சோலார் வசதியுடன் துவக்க விலை: 33,800 ரூபாய்.
சோலார் வசதி இல்லாமல் துவக்க விலை: 26,300 ரூபாய்.
