PUBLISHED ON : மே 29, 2024 12:00 AM
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பாயும் சிலந்தி ஆறு, தமிழக நதியான அமராவதியின் துணை நதியாகும். அமராவதி ஆற்றுக்கான நீராதாரங்களில் ஒன்று. இந்த சிலந்தி ஆற்றில், தேவிகுளம் அருகேயுள்ள பெருகுடா என்ற இடத்தில் தடுப்பணை கட்டி வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. இதனால், அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் வருவது நின்று போகும்; திருப்பூர், கரூர் மாவட்டங்களில், 55,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க., அரசு, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காத நிலையில், நமது நாளிதழில் வெளியான செய்தி அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத் தின் தென்மண்டல அமர்வு, இப்பிரச்னையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டவில்லை. 'ஜல்ஜீவன்' மிஷன் திட்டத்தின் கீழ், அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வழங்க, ஒரு மீட்டர் உயரத்திற்கு தடுப்பு மட்டுமே அமைக்கப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற வேண்டியதில்லை' என்று வாதிட்டார்.
இதை ஏற்காத தீர்ப்பாயம், 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகள் நடப்பது, 'தினமலர்' நாளிதழில் வெளியான படங்களை பார்த்தாலே உறுதியாகிறது. மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளில் தடுப்பணை கட்டுவது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தடுப்பணை கட்டு வதற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய வன உயிரின வாரியம் போன்றவற்றிடம் கேரள அரசு அனுமதி பெற்றிருக்க வேண்டும். உரிய அனுமதி பெறாமல் தடுப்பணை பணி நடந்தால், அதை உடனே நிறுத்த வேண்டும்' என்று, உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக, புதிய அணை கட்டும் கேரள மாநில அரசின் திட்டம், மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட தகவல், ஜனவரி மாதமே தமிழக அரசுக்கு தெரியவந்த போதும், லோக்சபா தேர்தலை காரணம் காட்டி, அது திட்டமிட்டு மறைக்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்தியும் அதிர்ச்சி அளிக்கிறது.
மாநிலங்களுக்கு இடையே ஓடும் நதிகள் எல்லாம் தேசிய சொத்து. இதில், எந்த மாநிலத்திற்கும் முழு உரிமையில்லை என, காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இருந்தும், காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசும், முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதில் கேரள மாநில அரசும் தீவிரமாக இருக்கின்றன.
இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில், தமிழகத்திற்கான நீராதாரங்களை தொடர்ந்து கண்காணித்து வரவேண்டியது, தமிழகத்தை ஆளும் கட்சியின் தலையாய கடமையாகும். இந்த விஷயத்தில் கூட்டணி கட்சி அரசு என்பதை தாண்டி, மாநிலத்தின் நலனே முக்கியம் என்ற ரீதியில் செயல்பட வேண்டியது அவசியம். நீராதாரங்களை பாதுகாக்க தனியே ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்கினாலும் நல்லதே. ஏனெனில், தமிழகத்தில் ஓடும் பெரும்பாலான நதிகளின் நீராதாரங்கள் அண்டை மாநிலங்களில் தான் உள்ளன.
காவிரியில் துவங்கி ஒவ்வொரு நதிகள் விஷயத்திலும், நம் மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப் பட்டு வருவதையும், அதை ஆளுங்கட்சி சாதாரணமாக எடுத்துக் கொள்வதையும், எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில், விவசாயி கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் குரல்களுக்கு, தமிழக அரசு செவிசாய்க்க வேண்டியது அவசியம். தடுப்பணை பிரச்னைகள் தலைதுாக்கும்போது, முளையிலேயே கிள்ளி எறிவதற்கான, சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அண்டை மாநிலங்களுடன் நட்பு பாராட்டுவது அவசியமே; அதற்காக நதிநீர் விஷயங்களில் நம் உரிமைகளை விட்டுக் கொடுத்தால், காவிரி டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை மறந்துவிடக் கூடாது. இனியாவது, இதுபோன்ற விஷயங்களில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.