PUBLISHED ON : ஜூன் 03, 2024 12:00 AM

நாடு முழுதும் வீசும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பல மாநிலங்களில் இதுவரை, 61 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஏழு பேர் உத்தர பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட, பாதுகாப்பு படை வீரர்கள். தலைநகர் டில்லியில் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு, 126 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது.
அதேபோல, சென்னை உட்பட தமிழகத்தின் வடமாவட்டங்கள் பலவற்றிலும், கடந்த சில நாட்களாக, 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி, வெயில் வாட்டி வதைத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இப்படி வெயில் சுட்டெரிப்பதால், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு, ஜூன், 6ல் இருந்து, 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தலைநகர் டில்லி உள்ளிட்ட சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையும் தலைவிரித்தாடுகிறது. வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது; அதற்கேற்ற வகையில் சப்ளை இல்லை.
இந்நிலையில், வழக்கு ஒன்றை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றமும், 'மக்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறி விட்டனர். அதனால், பல உயிர் பலிகள் நிகழ்ந்துள்ளன. நாம் வசிக்க வேறு கிரகம் இல்லை. தற்போதே கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், எதிர்கால சந்ததியினர் செழித்து வளர்வதைக் காணும் வாய்ப்பை இழந்து விடுவோம். கடுமையான வெப்ப அலை வீசும் போது, தேசிய அவசர நிலையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்' என்றும், தெரிவித்துள்ளது.
அத்துடன், வெப்ப அலையால் உயிரிழந்தவர்களுக்கு, ராஜஸ்தான் மாநில அரசு இழப்பீடு தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இப்படி கடுமையான வெப்ப அலை வீசுவதற்கு, காலநிலை மாற்றமே காரணம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, நகர்ப்புற இந்தியாவை காலநிலை மாற்றம் பாதித்துள்ளதன் அறிகுறியே இது. கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் வசிப்பவர்களே, இந்த வெப்ப அலை தாக்கத்தால் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கான்கிரீட் கட்டடங்கள் அதிகரிப்பு, பசுமைப் பகுதிகளின் அளவு குறைந்துள்ளது போன்றவை இவற்றுக்கான காரணிகளாகும்.
இந்தியாவில், புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 2009 முதல், 2022 வரையிலான காலகட்டத்தில், வெப்ப அலை தாக்கத்திற்கு, 6,751 பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதே காலகட்டத்தில், 11,090 பேர் பலியானதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
கடந்த 1998 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில், வெப்ப அலை தாக்கத்திற்கு, 1.66 லட்சம் பேர் இறந்துள்ளதாக, உலக சுகாதார நிறுவன அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. எனவே, 'கடும் வெப்பத்திற்கு எதிராக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். இல்லையெனில், அது ஆரோக்கியமான மனிதனின் உயிர் வாழும் வரம்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்' என, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
வெப்ப அலைகள் அமைதியான கொலையாளிகளாக மாறி வருகின்றன. இப்படிப்பட்ட அபாயகரமான வெப்பம் மற்றும் மிகவும் குளிர்ச்சியான சூழ்நிலைகளில், கடினமான வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்களை பாதுகாக்க, வழிகாட்டுதல்களை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டியது அவசியம்.
தட்பவெப்ப நிலையை தாங்கும் வகையில், போதுமான திட்டமிடல் இல்லாத நகரமயமாக்கம், நகரங்களை அனல் உலைகளாக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை. இந்த மோசமான நிலைமையை தணிக்க தேவையான விரிவான உத்திகளை செயல்படுத்தாவிட்டால், வரும் காலங்களில் இப்படிப்பட்ட வெப்ப அலைகளின் தீவிரம் மேலும் அதிகரிக்கும்.
உலகம் வெப்பமயமாவதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் எனில், தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். வெப்ப அலைக்கு நாடு முழுதும், 61 பேர் பலியாகி இருப்பது அதற்கான ஒரு எச்சரிக்கை மணியாகவே அமைந்துள்ளது.