தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/தலையங்கம்/ தலையங்கம்/ 29/06/26 திங்கள் இதழ்

தலையங்கம்/ 29/06/26 திங்கள் இதழ்

தலையங்கம்/ 29/06/26 திங்கள் இதழ்


PUBLISHED ON : ஜூன் 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தீ விபத்து சம்பவங்களை தடுக்க

நாடு தழுவிய சோதனை அவசியம்!

உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள அலிகஞ்ச் பகுதியில் இயங்கி வந்த அனிமேஷன் பயிற்சி மையத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 15 மாணவர்கள் பலியாகினர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் இளம் பருவத்தினர்.

இந்த சம்பவத்தில் பெரும்பாலான உயிரிழப்புகள் தீக்காயங்களால் நிகழவில்லை. மாறாக, வெளியேற வழியின்றி கட்டடத்தின் மேல் தளங்களில் சிக்கியதால் மூச்சுத் திணறல் மற்றும் புகை மண்டலத்தால் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து நிகழ்ந்த மூன்று மாடி கட்டடம், 46 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. 1980ல் வீட்டு மனைக்காக ஒதுக்கப்பட்ட கட்டடத்தில், சட்டவிரோதமாக வணிக வளாகம் கட்டியுள்ளனர். 2016ல் இந்த கட்டடத்தை இடிக்க உள்ளாட்சி அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், எந்த காரணமும் இன்றி, இரண்டு மாதங்களிலேயே அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுதும் இதுபோன்ற தீ விபத்துகள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த சம்பவங்களுக்கு தீத்தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாததே காரணம் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தாலும், அதிலிருந்து அதிகாரிகளும், அரசு நிர்வாகத்தினரும் பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

இந்த கட்டடத்தில் தீயானது, முதலில் தரைதளத்தில் இருந்த ஏர்கண்டிஷன் இயந்திரத்தில் துவங்கி, பின்னர் கட்டடம் முழுதும் பரவியதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. அடிப்படையான பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதே, பலரது மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களில், உட்புற மின்சார ஒயரிங்கானது, குறைந்த திறன் கொண்டதாகவே அமைந்திருக்கும். அப்படிப்பட்ட நிலையில், அந்த கட்டடத்தை வணிக வளாகமாக மாற்றி, அதிகமான குளிர்சாதன இயந்திரங்கள், விளக்குகள் போன்றவற்றை எரிய வைக்கும் போது, கூடுதல் மின் தேவையை தாங்கும் திறனின்றியே, தீ விபத்துகள் நிகழ்கின்றன.

மேலும், தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தில், ஒரே ஒரு குறுகிய படிக்கட்டு மட்டுமே வெளியேறும் வழியாக இருந்துள்ளது. அவசரகால வெளியேற்று கதவுகள் இல்லை. அத்துடன் போதிய காற்றோட்ட வசதி இல்லாத இடமாகவும் இருந்துள்ளது.

சமீப நாட்களில் தீ விபத்துகள் நிகழ்ந்த விடுதிகள், பயிற்சி மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களில் காணப்பட்ட குறைபாடுகள் இங்கும் இருந்துள்ளன. அதனால், ‘இந்த விஷயத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும்’ என, உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.

அது மட்டுமின்றி, உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதிகாரிகள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கு காரணமான அலட்சியம் மற்றும் தோல்விகள் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

கிராமங்களில் இருந்து வேலை தேடியும், உயர்கல்விக்காகவும், லட்சக்கணக்கானோர் நகரங்களுக்கு வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் நாட்டின் பெருநகரங்கள் புகலிடமாக திகழ்கின்றன. இடம்பெயர்வோர் மூலம் கிடைக்கும் வணிக வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில், பல சொத்து உரிமையாளர்கள் பாதுகாப்பு குறைபாடுகளை பொருட்படுத்துவதில்லை.

வாடகை வருமானத்திற்காக விதிகளை மீறி கட்டுமானங்களை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு லஞ்ச அதிகாரிகளும் துணை போகின்றனர். பொருளாதார ரீதியாக நம் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. அப்படிப்பட்ட நிலையில், மீண்டும் மீண்டும் கொடிய தீ விபத்து சம்பவங்கள் நிகழ்வதை மத்திய, மாநில அரசுகள் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது.

எனவே, வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கட்டடங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நாடு தழுவிய சோதனைகள் நடத்தப்பட வேண்டியது அவசியம். அதுவே, தீ விபத்துகளுக்கு முடிவு கட்டும் செயலாக இருக்கும்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us