கனிமங்கள் வழக்கில் தீர்ப்பு மத்திய அரசுக்கு அதிர்ச்சி
கனிமங்கள் வழக்கில் தீர்ப்பு மத்திய அரசுக்கு அதிர்ச்சி
PUBLISHED ON : ஆக 02, 2024 12:00 AM
'சுரங்கங்கள், கனிம வளமுள்ள நிலங்கள் மற்றும் கனிமங்களுக்கு வரி விதிக்க மாநிலங்களுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு; மத்திய அரசு அதை தடுக்க முடியாது' என, மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த வழக்கில், மாநிலங்களுக்கு சாதகமாக, உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது. கனிம வளங்களுக்காக மத்திய அரசுக்கு செலுத்தப்படும் ராயல்டியானது வரியல்ல. அதனால், தனியாக வரி விதிக்க, மாநிலங்களுக்கு உரிமையுள்ளது என்றும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
'சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் ஒழுங்கு முறை சட்டம், 1957ன்படி, கனிமங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தரப்பட்டுள்ளதால், அவற்றின் மீது வரி விதிக்கும் அதிகாரம் பார்லிமென்டிற்கும், மத்திய அரசுக்கும் தான் உண்டே தவிர, மாநில அரசுகளுக்கும், சட்டசபைகளுக்கும் கிடையாது' என்ற, மத்திய அரசின் வாதம் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன், ராயல்டி என்பதும் வரி தான்; எனவே, அதன் மீது கூடுதலாகவோ, தனியாகவோ மாநில அரசுகள் வரி விதிக்க முடியாது என, 1989ல், உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பும் புறந்தள்ளப்பட்டுள்ளது.
மேலும், கனிமங்கள் மற்றும் கனிமவள மேம்பாடு தொடர்பாக மாநில அரசுகள் வரி விதிப்பதை, சட்டம் தடுக்கவில்லை என்பதையும், நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். இருப்பினும், கனிம வளங்களை பாதுகாக்கவும், பயன்படுத்தவும் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால், தமிழகம் பெருமளவு பலன் அடையாது என்றாலும், கனிம வளம் மிகுந்த ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்கள் அதிக பலனடையலாம்.
மாநிலங்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் எண்ணத்துடன் மத்திய அரசு செயல்பட நினைத்திருந்தால், இந்தப் பிரச்னை நீதிமன்றத்திற்கே வந்திருக்காது. பேச்சு வாயிலாகவே பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கலாம். பிரச்னை நீதிமன்றத்திற்கு வந்ததால், கனிமங்களுக்கு வரி விதிக்கும் விவகாரத்தில் ஏற்பட்டுஉள்ள முட்டுக்கட்டை நிலைமை முடிவுக்கு வந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இடையே சில பிரச்னை களில் முட்டல், மோதல்கள் உருவாவது வழக்கமானது தான் என்றாலும், சமீப நாட்களாக பல விஷயங்களில், மத்திய, மாநில அரசுகள் இடையே மோதல் உருவாகி வருவது ஆரோக்கியமானதல்ல.
குறிப்பாக, மத்திய பட்ஜெட்டில், மத்தியில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும், ஆந்திரா மற்றும் பீஹார் மாநிலங்களுக்கு சிறப்பு சலுகையாக அதிக நிதியுதவி வழங்கியது, பா.ஜ., ஆட்சியில் இல்லாத மற்ற மாநில அரசுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், மத்திய பா.ஜ., அரசு பாரபட்சமாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை அந்தக் கட்சிகள் முன்வைத்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. அத்துடன், மத்திய அரசின் பட்ஜெட் பாரபட்சமாக உள்ளதாகக் கூறி, நிடி ஆயோக் கூட்டத்தையும், எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களின் முதல்வர்கள் புறக்கணித்ததை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இடையே சுமுகமான உறவு இருப்பது அவசியம் என்பது, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், மத்திய அரசு வசம் அதிகாரங்கள் குவிவது, மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு உதவாது. அதற்கு மாறாக, பிரச்னைகள் அதிகரிக்கவே செய்யும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
எனவே, மத்தியில் ஆட்சியில் உள்ள அரசானது, மாநில அரசுகளின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்க வேண்டும். முடிந்த அளவுக்கு கேட்கும் உதவிகளை செய்ய முன்வர வேண்டும். அதற்கு மாறாக, நியாயமற்ற முறையில் நடந்து கொண்டால், வளர்ச்சி அடைந்த பாரதத்தை விரைவாக காண்பது என்பது கனவாகவே அமையும். கனிமங்கள் மீது வரி விதிப்பது தொடர்பான இந்த வழக்கில் வழங்கப்பட்டு உள்ள இந்த தீர்ப்பு, மத்திய அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.